வியாழன், ஏப்ரல் 09, 2009

தென்றலில் இருந்துதான்; ஆனால் வீசுவது புயல்!


வட அமெரிக்கத் தமிழர்கள் சார்பில் நடத்தப்படும்
தென்றல் மாத இணைய இதழிலிலிருந்து...
மனத்துள் புயலை வீசச்செய்யும் ஒரு கடிதம்...



ஹிட்லரின் தீர்க்கதரிசனம்- |ஏப்ரல் 2009


என்னுடைய பெயர் ப்ரியா. வயது 14. நான் ரொறொன்ரோவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாவது படிக்கிறேன். என்னுடைய பெற்றோர் இலங்கையிலிருந்து வந்து அகதிகளாகக் குடியேறிய தமிழர்கள். நான் பிறந்தது கனடாவில். எனக்குத் தமிழ் எழுதவோ வாசிக்கவோ கதைக்கவோ தெரியாது. நான் ஆங்கிலத்தில் படிக்கிறேன். ஒரு மருத்துவராக வரவேண்டும் என்பது என் கனவு.

என் பெற்றோரின் சொல்லைக் கேட்காமல் வெள்ளை மாளிகை முன்பு பிப்ரவரி 20ம் தேதி நடக்கப்போகும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொள்ள முடிவு செய்தேன். இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் தினம்தினம் ராணுவத்தினரால் கொல்லப்படுவதைக் கண்டிப்பதுதான் இந்த நிகழ்வு. ரொறொன்ரோவில் இருந்து நூற்றுக் கணக்கான பஸ்களும் வான்களும் கார்களும் புறப்பட்டன. நானும் அதில் சேர்ந்து கொண்டேன். பத்து மணி நேரம் பயணம் செய்து வெள்ளை மாளிகைக்கு முன்னால் காலை 11 மணிக்குக் கூடினோம். அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்தும் தமிழ் மக்கள் அங்கே வந்து திரளாகக் குழுமியிருந்தனர்.

இந்தப் பிரயாணம் எங்களுக்கு இலகுவாக அமையவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து எதிராளிகள் செய்த சதியில் கைமாறிவிட்டது. ஆறுதல் சொல்லவேண்டிய பஸ் சொந்தக்காரர் எங்கள்மேல் ஆத்திரப்பட்டார். நான் “நீங்கள் முன்பு எனக்கு அப்பாவாக இருந்தீர்களா?” என்று கேட்டேன். அவர் “என்ன, என்ன?” என்றார். “நீங்களும் என்மேல் அப்பாவைப் போல பாய்கிறீர்கள்” என்றேன். பின்னர் ஒருமாதிரி சமாதானமாகி வேறு வாகனம் பிடித்துத் தந்தார். அதில் இரவிரவாக நானும் பல மாணவர்களும் பயணம் செய்தோம்.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவை உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவருவதும், போரை நிறுத்தக் கோருவதுமே இந்தப் போராட்டத்தின் நோக்கம். வாஷிங்டன் காலநிலை பூஜ்யத்துக்கு கீழே 5 டிகிரி. நாங்கள் தக்க குளிராடைகள் அணிந்திருந்தாலும் குளிர் நெஞ்செலும்பைத் தொட்டது. குதிரைகளில் வீற்றிருந்த வெள்ளை மாளிகைப் பொலீஸார் முன்னிலையில் 'நீங்கள் ரத்தம் கொட்டுகிறீர்கள்; நாங்கள் கண்ணீர் கொட்டுகிறோம்' என்றும் 'ஒபாமா ஒபாமா, எங்களைக் காப்பாற்று' என்றும் குரல் எழுப்பினோம். பார்ப்பவர்களுக்கு உலகம் எங்களைக் கைவிட்ட நிலையில் நாங்கள் எடுக்கும் கடைசி முயற்சி என்பது தெரிந்திருக்கும்.

சமீபத்தில் ஐ.நா. விசேட தூதுவர் இலங்கை ராணுவத்துக்குச் சொன்னார் ‘யுத்தம் தொடர்ந்தாலும் பொதுமக்கள் சாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று. அவருடைய உச்சமான கண்ணீர் கலந்த புத்திமதி இதுதான். இரண்டே வார்த்தைகள் ‘போரை நிறுத்தவும்' அவருடைய தொண்டையில் இருந்து வெளியே வராமல் வார்த்தை அடைத்துக்கொண்டது. இதைச் சொல்வதற்கா அவர் முதல் வகுப்பில் 10,000 மைல்கள் விமானத்தில் பறந்து சென்றார்?

சரி, ஒரேயொரு கேள்வி கேட்டிருக்கலாம், அவர் அதையும் செய்யவில்லை. ஒரு நாட்டின் குடிமகன் தன் நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போகலாம், வரலாம். அது அவன் குடியுரிமை. நாட்டு மக்களின் ஒரு பகுதியினரை முள்ளுக்கம்பி வேலி போட்டு அடைத்து வைப்பது என்ன நியாயம்? அவர்கள் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களுக்கு வேறு நாடு கொடுக்கப் போகிறார்களா? என் தாத்தா அடிக்கடி சொல்வார் ‘தமிழர்கள் சபிக்கப்பட்ட இனம்' என்று. அது என் கண் முன்னால் ஒவ்வொரு கணமும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இந்தப் போராட்டத்தை நடத்தியது ஒரு துளிக் கடைசி நம்பிக்கை இருந்தபடியால்தான். எல்லாக் காசும் செலவழிந்த பிறகு முடிவில் எஞ்சியிருக்கும் ஒரு டொலர் குற்றிபோல. ஒபாமா ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். கொடுமை அவருக்கு அந்நியமானதல்ல. அவர் கன்னத்தில் கண்ணீர் வழிந்து ஓடியிருக்கிறது. நித்தமும் குண்டுகள் விழுந்து அப்பாவித் தமிழர்கள் செத்து மடிவதைக் கண்டு அவர் மனம் இரங்கலாம்; போரை நிறுத்த உதவலாம்.


மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் எங்கள் இன அழிப்புப் பிரச்சினையைச் சொல்ல ஒருவருமே இல்லை. உலகத்தில் மிக மோசமாக உதாசீனம் செய்யப்படும் இனம் தமிழ் இனம்.

இரண்டு நாள் முன்பாக ஒபாமா கனடாவுக்கு வந்திருந்தார். அவரை முதலில் சந்தித்தது கனடா நாட்டு ஆளுநர், மிக்கையில் ஜோன், ஒரு கறுப்பினப் பெண். அவர் ஹைட்டியிலிருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர். அவர் ஒபாமாவிடம் ஹைட்டி நிலவரத்தை எடுத்துச் சொன்னார். எங்கள் லிபரல் கட்சித் தலைவர் ஒபாமாவுடன் குவண்டனாமா சிறையில் அடைபட்டிருக்கும் ஒரேயொரு சிறைக்கைதி பற்றிப் பேசினார். மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் எங்கள் இன அழிப்புப் பிரச்சினையைச் சொல்ல ஒருவருமே இல்லை. உலகத்தில் மிக மோசமாக உதாசீனம் செய்யப்படும் இனம் தமிழ் இனம்.

நான் வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் பதாகையுடன் நின்றபோது என்னோடு படிக்கும் மாணவிகளிடமிருந்து செல்பேசியில் குறுஞ்செய்திகள் வந்த வண்ணமே இருந்தன. ‘நீ தமிழா? எதற்காக அங்கே குளிரில் நடுங்கிக்கொண்டு நிற்கிறாய்?' நான் பதில் அனுப்பவில்லை. கனடாவுக்கு திரும்பும் போதும் இதையே நினைத்துக்கொண்டேன். நான் பிறந்தது கனடாவில், படிப்பது ஆங்கிலத்தில். தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. நான் எப்படி தமிழாக முடியும்?

வீட்டுக்கு திரும்பியதும் அப்பா என்னுடைய கோட்டைக் கழற்றி கொழுவியில் மாட்டினார். அம்மா தலையைத் தடவி ஆறுதல் சொன்னார். பாட்டி கோப்பையில் சுடச் சுடச் சாப்பாடு பரிமாறி சாப்பிடச் சொன்னார். தொலைக்காட்சியில் நேற்று திருப்பித் திருப்பி ஒரே காட்சியைக் காட்டினார்கள். இரண்டு நாளில் அந்த ஈழத்துச் சிறுமி நாலு இடம் மாறினாள். அப்படியும் எறிகணை வீச்சில் அவள் செத்துப்போனாள். நான்தான் அந்தச் சிறுமி. நான் தவறிப்போய் இங்கே பிறந்துவிட்டவள். அங்கே எத்தனைபேர் இன்று வீடில்லாமல், உடுப்பில்லாமல், உணவில்லாமல் எப்பொழுது அடுத்த குண்டு விழும் என்று ஆகாயத்தைப் பார்த்தபடி காத்திருக்கிறார்கள்!

எங்கள் வகுப்பில் வரலாறு படிப்பித்த ஆசிரியர் சொன்ன ஹிட்லரின் வாசகம் நினைவுக்கு வருகிறது. ‘பூமி சுழன்று கொண்டிருக்கிறது. மனிதன் மிருகத்தைக் கொல்லலாம் அல்லது மிருகம் மனிதனைச் சாப்பிடலாம், பூமி தொடர்ந்து சுழலும். வலியது வெல்லும் என்பது இயற்கையின் விதி. அது ஒரு போதும் மாறுவதில்லை.'

‘நீ எதற்காக அம்மா போனாய். படிக்கிற வேலையைப் பார்' என்று சொல்லியபடி படுக்கைப் போர்வையை இழுத்து என்னைப் போர்த்திவிட்டு, அறை லைட்டையும் அணைத்துவிட்டு அம்மா போனார்.

2050ம் ஆண்டில் என் மகள் தன் பூர்வீகத்தைப் பற்றி வரலாற்றில் ஆராய்வாள். இலங்கையில் தன் இனம் முடிந்து போனதைக் கண்டுபிடிப்பாள். அப்போது “அம்மா, இலங்கையில் எங்கள் இனம் அழிந்தபோது நீ என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்பாள். நான் சொல்வேன், “மகளே, வெள்ளை மாளிகையின் முன், பூஜ்யத்துக்கு கீழே ஐந்து டிகிரி குளிரில் ‘இன ஒழிப்பை நிறுத்து' என்று பதாகைகள் ஏந்திப் போராடிய பத்தாயிரம் சனங்களுடன் நானும் நின்றேன்”.

ப்ரியா, கனடா
தமிழில்: ரஞ்சனி

1 கருத்து:

  1. எத்தனையோ இலங்கை குறித்து படித்து உள்ளேன். உங்கள் படைப்பு போல் மனம் கணத்தது இல்லை. வாழ்க. தேவியர் இல்ல பூங்கொத்து.


    ஜோதி கணேசன்


    தேவியர் இல்லம். திருப்பூர்
    http://thamizmanam.com/bloglist.php?id=5625

    பதிலளிநீக்கு