▼
திங்கள், ஜனவரி 12, 2009
சடங்குகள் சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு?
சடங்குகள் சம்பிரதாயங்கள் ...
ஏன்? எதற்கு?
விகடன் பிரசுர வெளியீடான இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம்...
தினமும் காலையில் வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். பூஜை அறையில் விளக்கேற்றுகிறோம். புஷ்பங்கள் வைக்கிறோம். சாம்பிராணி காட்டுகிறோம். கற்பூரம் ஏற்றுகிறோம். மணி அடிக்கிறோம். _ ஏன் எதற்கு என்று தெரியாமலேயே இப்படி பல சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம். பாரத நாட்டின் பண்பாடும், கலாசாரமும் தொன்மை மிக்கவை. வேதகாலத்திலிருந்து முனிவர்களும், ரிஷிகளும் வகுத்துக் கொடுத்தவை. உபநிடதங்களும், புராணங்களும் நம் சிந்தனையைத் தூய்மைப்படுத்தவும், செயல்களைப் பண்படுத்தவும் பல வழிமுறைகளை விவரிக்கின்றன. இன்றும்கூட நடக்கும்போது காலில் புத்தகமோ, தாளோ மிதிபட்டால், அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். அடுத்தவரின் மீது நம் பாதம் பட்டுவிட்டாலும் அப்படியே செய்கிறோம். அதுமாதிரியே மாலை வேளையில் பேருந்துகளில் சென்று கொண்டிருந்தால், பொழுது புலர்ந்து விளக்குகளை எரிய விடும்போது ஒரு விநாடி கண்மூடிப் பிரார்த்திக்கிறோம். இப்படி பல சடங்குகள்... சம்பிரதாயங்கள். இவற்றின் அடிப்படைத் தத்துவங்களை இந்த நூலில் அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம். ஒவ்வொரு சடங்குகளையும் தொடர்ந்து நாம் செய்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். வாழையடி வாழையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் என்பதால், அவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவை ஒவ்வொன்றின் தாத்பர்யத்தையும் அறிந்து கொண்டு நாம் செயல்படும்போது ஓர் திருப்தி கிடைக்கிறது. பிள்ளையாருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதிலிருந்து கோ பூஜை செய்யப்படுவது வரை நம் செயல்பாடுகளுக்கு பின்னணிக் காரணங்கள் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. படித்து பயன்பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக