சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், மார்ச் 25, 2009

அடியேன் பெறும் முதல் தேசிய விருது!

அடியேன் பெறும் முதல் தேசிய விருது !


ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் இளைஞர்களுக்காக வழங்கப்படும் பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் - தேசிய இலக்கிய விருது, இந்த ஆண்டு அடியேனுக்கு வழங்கப்படவுள்ளது...



கொல்கத்தாவில் உள்ள பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு, நம் நாட்டின் அனைத்து மொழிகளில் இருந்தும், இலக்கியச் சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, நாட்டின் உயரிய மொழி, இலக்கிய அமைப்பாகப் போற்றப்படுகிறது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இலக்கியவாதிகளையும் ஒரே மேடையில் அமரவைத்து கௌரவிக்கிறது. விருதுக்கு, வரிஷ்த புரஸ்கார் (சான்றோர்) மற்றும் யுவ புரஸ்கார்(இளைஞர்) என இரண்டு பிரிவுகளில் தலா நால்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.



யுவ புரஸ்கார் - இளைஞர் பிரிவில் தேசிய இலக்கிய விருது தமிழுக்காக அடியேனுக்கும் (செங்கோட்டை ஸ்ரீராம்), சந்தாலி மொழிக்காக நிர்மலா புடுல், பஞ்சாபிக்காக மதுமிதா பவா, ஹிந்திக்காக அல்பனா மிஸ்ரா ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளது.



11,000 ரூபாய் பொற்கிழியும் நினைவுப் பரிசும் கொண்டது இந்த விருது.

---------------------------------------------------------

அடியேனைப் பற்றி...

--------------------------------------------------------

தேசிய இலக்கிய விருது பெறும் செங்கோட்டை ஸ்ரீராம், இளம் வயதிலேயே பாரம்பரியம் மிக்க மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். தேசியக் கண்ணோட்டத்துடன் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் குழு மூலம் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். பழந்தமிழ் இலக்கியத்தை புதிய கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார்.



மஞ்சரி இதழில் உங்களோடு ஒரு வார்த்தை எனும் தலைப்பில் இவர் எழுதிய இலக்கியத் தொடர் கட்டுரைகள், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.



தற்போது விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் இவர், இலக்கியம், ஆன்மிகம், வரலாற்றுச் செய்திகள் தாங்கிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பணியாற்றும் இவருக்கு யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


----------------------------------------------------------------


ஏப்ரல் 18ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. அடியேன் இந்த விருதை தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவுக்கு அர்ப்பணிக்கிறேன்...



அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் சொன்னது…

வாழ்த்துகள், மேலும் மேலும் வளர்க!

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

நிவேதிதா சொன்னது…

வாழ்த்துகள்.. இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துகிறேன்..

Unknown சொன்னது…

அன்பு ஸ்ரீராம்,

வாழ்த்துகள்! மென்மேலும் பல்வேறு விருதுகள் பெற்று சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

வாழ்க வளமுடன்

பா.சு.ரமணன்

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix