சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், நவம்பர் 14, 2016

பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?


வீரகேரளம்புதூரில் கோயில்கொண்ட நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் பெயரை, எங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருந்தவர் என் அத்தை மகன் நவநீதகிருஷ்ணன். நவநீதன், நவனீ என்றெல்லாம் செல்லமாய் அழைக்கப்பட்டவர்!

என் துவக்கப் பள்ளிப் பருவத்தில் பார்த்ததுண்டு. மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். மனத்தில் ஓர் அழுத்தமும் அமைதியும் குடிகொண்டிருக்கும். முகம் சலனமற்று எந்தவித கோபத்தையோ வருத்தத்தையோ நகைப்பையோ வெளிப்படுத்தாமல் அப்படியே இருக்கும்!

மிகச் சிறு வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தாராம். பத்து வருடத்துக்கும் மேல் சர்வீஸ் முடித்து 30 வயதுகளில் ஊர் திரும்பிவிட்டார். தென்காசி மேலப்புலியூர் அக்ரஹாரத்தில், அவரது வீட்டின் மாடியில் போய் அமர்ந்தாரென்றால் புத்தகமும் கையுமாக இருப்பார். ராணுவத்தில் இருந்த சகவாசம், மிலிட்டரி சரக்குக்கு ஆட்பட்டு விட்டாராம்! அதனால் அவர் அருகே போக அச்சப்பட்டு ஒதுங்கிச் சென்றிருக்கிறேன்! வயது பத்தைக் கடந்திராத அந்தப் பருவத்தில் சாராயத்தின் வீரியம் எல்லாம் என் அறிவுக்குள் எட்டியதில்லை! ஆகவே எட்ட நின்றே பார்த்திருந்தேன்! ஆனாலும் ராணுவ சேவை என்பது அவர் மூலம் சிறுவயதில் தீப்பொறியாய் ஒரு மூலையில் பற்றியது!

அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்குத் திருமணம் ஆயிற்று! அதற்கு அடுத்த ஓரிரு வருடங்களில் மண வாழ்க்கை நிலைக்காமல் மரித்தும் போனார்! இருந்தாலும், ராணுவத்தில் இருந்து திரும்பியவர் என்ற அந்த அடையாளம் மட்டும் மனசுக்குள் ஒட்டிக் கொண்டதில், நாமும் ராணுவப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டிருந்தது!

தென்காசியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நேரம்... ஆறடி உயரம். கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று போட்டிகளுக்கும் சென்று வந்தேன். குழு விளையாட்டுகள்தான்! அப்போதுதான், NDA - National Defence Academy தேர்வு எழுதலாம் என்று உடன் படித்த நண்பர்கள் ஓரிருவர் முயன்றனர். என்னவென்றே அம்மாவிடம் சொல்லாமல் அந்தப் பதினாறு வயதில் நானும் எழுதினேன்.

எழுத்துத் தேர்வு முடிந்து, அடுத்த கட்டத்தில் வந்து நின்றது. மெள்ள அம்மாவிடம் ஆசையைச் சொன்னேன்! டிஃபன்ஸ் என்ற சொல், அம்மாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஏற்கெனவே மதிப்பும் பாசமும் வைத்திருந்த என் அத்தான் நவநீயின் வாழ்க்கை ஏற்படுத்திய பாதிப்பு ஒரு புறமும், ஒற்றைப் பிள்ளை, அதுவும் தலைப்பிள்ளை எப்படி உன்னை விட்டு இருப்போம் என்ற பாசக் கட்டு மறுபுறமுமாக இழுத்துக் கட்டியதில், அந்த முயற்சி அத்துடன் நின்று போனது! பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கையுடன் என் பெரிய மாமா சுந்தர்ராஜனின் கையில் என்னை ஒப்படைத்தார்! நானும் திருச்சிக்கு வந்தேன்; கல்லூரிப் படிப்புக்கு!

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அந்தப் பதினாறு வயதில் ராணுவப் பணிக்கு சென்றிருந்தால், இருபது வருட சேவை முடிந்து இன்று திரும்பியிருக்கலாம்! இந்த இருபதுக்கும் மேலான வருடங்களிலும்  தாயை விட்டுப் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்திருக்கிறேன், என்றாலும் கூப்பிடு தொலைவில் இருந்து கொண்டு! ஆசையிருந்தும் ராணுவப் பணிக்குச் செல்லாமல் இருந்த இந்த இருபது வருடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சாதனையோ, சமூகத்துக்குப் பயனுள்ள வாழ்க்கையையோ நான் வாழ்ந்துவிடவில்லைதான்!

அத்தானின் கதியை நினைத்துதான், சிகரெட், மது இரண்டின் அருகேயும் செல்லக் கூடாதென சத்தியம் செய் என்றார் அம்மா. இன்று வரை அந்த சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறேன்! ஆனாலும், பாசம் என்ற கயிறு, எப்படி நம் தனிப்பட்ட விருப்பங்களில் இழுத்துச் செல்லாமல் கட்டிப் போட்டு முடக்கிவிடுகிறது என்பதை அவ்வப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

கல்லூரியில் படித்த 90களில்தான் கணினிப் படிப்பு அறிமுகமானது. யுனிக்ஸ், சி ப்ளஸ், டிபேஸ், என முயன்று படித்தும், உடன் படித்த நண்பர்கள் அத்துறையில் சென்றபோதும்,  வழிகாட்ட யாருமின்றி அந்தத்  துறையிலும் கால் பதிக்காமல் ஏதோ மார்கெடிங் என்று துவக்கத்தில் ஊர் சுற்றி, பின்னாளில் பத்திரிகைத் துறை என்று தடம் மாறிப் போனது!

இந்த ஞாயிறுப் போதில், குடியிருப்பின் அடுத்த ப்ளாக் நண்பர் திரு. ஜகந்நாதனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 28 வயதாகும் அவர் மகன் இன்ஃபோஸிஸ் பணியில் மெல்பர்னில் இருப்பதாகவும், இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் படிக்கும் போதே கேரியர் குரோத், வளர்ச்சி, போட்டிகள் நிறைந்த உலகம் எப்படி சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்றும், பாசம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை என்றும் கருத்தைச் சொன்னார். சாப்பிட்டாயா என்று கேட்டால் கூட, அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்றும், தங்களை இன்னும் குழந்தை போல் யோசிக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வதாகவும் கூறினார்.

தலைமுறைகள் குறித்த அவரின் இந்தச் சிந்தனையே, என்னைப் பற்றிய சுயபரிசோதனைக்கு என்னைத் தூண்டியது! படிப்பும் திறமையும் இருந்தது; ஆனால் வழிகாட்டிகள் எவரும் இல்லை! சொந்தங்களும் சொல்லிக் கொள்ளும்படி வழிகாட்டும் நல்ல நிலையிலில்லை! காற்றின் திசையில் அலைக்கழிக்கப்படும் படகைப் போல் பயணித்தாயிற்று! துடுப்பு போடும் வலிமையின்றி! அதுதான்... நான் ஏன் இப்படி உதவாக்கரை ஆனேன் என்று இப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...! சுய சிந்தனை! சுய பரிசோதனை! 
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix