சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, அக்டோபர் 31, 2015

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…
எந்த நேரத்திலடா
எம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?
உன் படைப்புகளின்
ஜனனக் குறிப்பு கண்டு
ஒருவன் சொல்கிறான்…
கர்ப்ப தோஷம்…
ஒருவன் சொல்கிறான்…
சர்ப்ப தோஷம்!
இன்னும்…
எத்தனை எத்தனை தோஷங்கள்?
செவ்வாய் தோஷமாம்..
நாக தோஷமாம்!
மாங்கல்ய தோஷமாம்!
மங்கள தோஷமாம்!
சயன தோஷமாம்
சங்கட தோஷமாம்!
பிதுர் தோஷமாம்…
புத்ர தோஷமாம்!
அட…
இன்னும் சிலரின்
உருவத்தை உருக்குலைத்து
குற்றுயிராய்க் கிடத்துகிறாய்…
தோஷங்கள் இல்லையென்று
சிரித்துச் சொன்ன சோசியன்
பொடிவைத்துச் சொல்கிறான்…
உங்களுக்கு
திருஷ்டி தோஷம்!
அடேய்..
இது திருஷ்டி தோஷம் இல்லையடா..
உன் பார்வைக் குறைபாடு!
உன் படைப்புத் திறனின் குறைபாடு…
எங்கள் பணியில் குறைபாடு இருந்தால்
பணியிடை நீக்கம் செய்து
பழியை விலக்கிக் கொள்ளும்
மேலதிகாரிகள் சிலர் உண்டு!
ஆனால்…
உன் அதிகாரிகளும்
உதவாக்கரையாய்ப்
போய்விட்டார்களோ!?
அடேய் பிரம்ம தேவா..
திருஷ்டி தோஷம்
எமக்கு இல்லையடா..
உமக்கே..!
அது உம்
சிருஷ்டி தோஷம்!

சனி, அக்டோபர் 10, 2015

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நூற்றந்தாதி

ஸ்ரீ:

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நு}ற்றந்தாதி


தனியன்கள்

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொனங்கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக்கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு,
என்னுக்கடவுடையேன் யான்! 1

நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல்,
உயர்ந்த குணத்துத் திரவரங்கத்தமுது ஓங்கும், அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!. 2

சொல்லின் தொகைகொண்டுஉனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்,
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே,
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமானுச! இதென் விண்ணப்பமே. 3


பாசுரங்கள் தொடக்கம்:

பூமன்னுமாது பொருந்தியமார்பன், புகழ்மலிந்த
பாமன்னு மாறன், அடிபணிந்துய்ந்தவன் ஃ
பல்கலையோர் தாம்மன்னவந்த இராமாநுசன்,
சரணாரவிந்தம் நாம்மன்னிவாழ,
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே. 1

ழூகள்ளார்பொழில் தென்னரங்கன், கமலப்பதங்கள்
நெஞ்சிற் கொள்ளா, மனிசரை நீங்கிக் ஃ
குறையல்பிரானடிக்கீழ் விள்ளாத அன்;பன் இராமாநுசன்,
மிக்கசீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு,
ஒன்றறியேன் எனக்குற்றபேரியல்வே 2

பேரியல்நெஞ்சே!, அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
ப10ரியரோடுள்ளசுற்றம் புலர்த்திப் ஃ
பொருவருஞ்சீர் ஆரியன்செம்மை
இராமானுசமுனிக்கன்பு செய்யும், சீரியபேறுடையார்,
அடிக்கீழென்னைச்சேர்த்ததற்கே. 3

என்னைப்புவியில் ஒரு பொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினைவேறறுத்து, ஃ
ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன்,
பரன்பாதமுமென் சென்னித்தரிக்கவைத்தான்,
எனக்கேதும் சிதைவில்லையே. 4

எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று, இசையகில்லா
மனக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் ஃ
அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் அவன்
திருநாமங்கள் சாற்றுமென்பா, இனக்குற்றம்
காணகில்லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே. 5

இயலும் பொருளும் இசையத்தொடுத்து, ஈன்கவிகளன்பால்
மயல்கொண்டுவாழ்த்தும் இராமானுசனை ஃ
மதியின்மையால் பயிலும் கவிகளில் பத்தியில்லாத
என்பாவிநெஞசால், முயல்கின்றனன்,
அவன்றன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே 6

ழூமொழியைக் கடக்கும் பெரும்புகழான்,
வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும்,
நம்கூரத்தாழ்வான் சரண்கூடியபின் ஃ
பழியைக்கடத்தும் இராமாநுசன் புகழ்பாடி,
அல்லா வழியைக்கடத்தல்,
எனக்கினியாதும்வருத்தமன்றே 7

வருத்தும் புறவிருள் மாற்ற, எம்பொய்கைப்பிரான்
மறையின் குருத்தின் பொருளையும்,
செந்தமிழ் தன்னையும்கூட்டி ஃ
ஒன்றத் திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே, இருத்தும்பரமன்,
இராமானுசனெம் இறையவனே. 8

இறைவனைக் காணும் இதயத்திருள்கெட,
ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய,
பூதத்திருவடித்தாள்கள் ஃ
நெஞ்சத்துறையவைத்தாளும் இராமானுசன்
புகழ்ஓதும் நல்லோர், மறையினைக்காத்து,
இந்த மண்ணகத்தே மன்னவைப்பவரே. 9

மன்னியபேரிருள் மாண்டபின், கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக், கண்டமைகாட்டும் ஃ
தமிழ்த்தலைவன் பொன்னடிபோற்றும்
இராமானுசற்கன்புபூண்டவர் தாள்,
சென்னியிற்சூடும், திருவுடையாரென்றும் சீரியரே. 10
சீரியநான்மறைச் செம்பொருள், செந்தமிழாலளித்த
பாரியலும் புகழ்ப்பாண்பெருமாள் ஃ
சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்றன்னைச்
சார்ந்தவர்தம், காரியவண்மை,
என்னால் சொல்லொணாதிக்கடலிடத்தே 11

இடங்கொண்டகீர்த்தி மழிசைக்கிறைவன்,
இணையடிப்போதடங்கும் இதயத்திராமானுசன் ஃ
அம்பொற்பாதமென்றும் கடங்கொண்டிறைஞ்சும்
திருமுனிவர்க்கன்றிக்காதல் செய்யாத், 12
திடங்கொண்டஞானியர்க்கே, அடியேனன்பு செய்வதுவே
செய்யும் பசுந்தளபத் தொழில்மாலையும், செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ்மாலையும் ஃ
பேராத சீரரங்கத்தையன் கழற்கணியும் பரன்தாளன்றி,
ஆதரியாமெய்யன்,
இராமானுசன் சரணேகதிவேறெனக்கே. 13

கதிக்குப்பதறி, வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத், தவம்செய்யும்கொள்கையற்றேன், ஃ
கொல்லிகாவலன் சொல் பதிக்கும் கலைக்கவிபாடும்
பெரியவர் பாதங்களே, துதிக்கும்பரமன்,
இராமானுசனென்னைச் சோர்விலனே. 14

சோராதகாதல் பெருஞ்சுழிப்பால், தொல்லை மாலையொன்றும்
பாராதவனை, பல்லாண்டென்று காப்பிடும் ஃ
பான்மையன்தாள் பேராதவுள்ளத்திராமானுசன்றன்
பிறங்கியசீர், சாராமனிசரைச் சேரேன்,
எனக்கென்ன தாழ்வினியே? 15


ழூதாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து, தலமுழுதும் கலியே
ஆள்கின்றநாள்வந்து, அளித்தவன்காண்மின், ஃ
அரங்கர்மௌலி சூழ்கின்றமாலையைச் சூடிக்கொடுத்தவள்
தொல்லருளால், வாழ்கின்றவள்ளல்,
இராமானுசனென்னும் மாமுனியே. 16

முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார்மனம், கண்ணமங்கை நின்றானைக் ஃ
கலைபரவும் தனியானைத் தண்டமிழ்செய்த
நீலன்றனக்கு, உலகில் இனியானை,
எங்கள் இராமானுசனைவந்து எய்தினரே 17

எய்தற்கரியமறைகளை, ஆயிரம்இன்தமிழால் செய்தற்
குலகில்வரும், சடகோபனைச், ஃ
சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர்சீரை
உயிர்களெல்லாம், உய்தற்குதவும்,
இராமானுசனெம்உறுதுணையே 18

உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும், உயர்குருவும்
வெறிதருபூமகள் நாதனும், ஃ
மாறன் விளங்கியசீர் நெறிதரும் செந்தமிழ்
ஆரணமேயென்றிந்நீணிலத்தோர், அறிதரநின்ற,
இராமானுசன் எனக்கு ஆரமுதே. 19

ஆரப்பொழில் தென்குருகைப்பிரான், அமுதத்திருவாய்
ஈரத்தமிழின், இசையுணர்ந்தோர்கட்கு, ஃ
இனியவர்தம் சீரைப்பயின்றுய்யும் சீலங்கொள்
நாதமுனியை, நெஞ்சால் வாரிப்பருகும்,
இராமானுசனென்றன்மாநிதியே. 20


நிதியைப் பொழியும்முகிலென்று, நீசர்தம்வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன் ஃ
இனித்து}ய்நெறிசேர் எதி;கட்கிறைவன் யமுனைத்துறைவன்
இணையடியாம், கதிபெற்றுடைய,
இராமானுசனென்கைக்காத்தனனே. 21

கார்த்திகையானும் கரிமுகத்தானும், கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு, ஃ
மூவுலகும் ©த்தவனே! என்றுபோற்றிடவாணன்
பிழைபொறுத்த, தீர்த்தனையேத்தும்,
இராமானுசனென்றன்சேமவைப்பே 22

வைப்பாயவான்பொருளென்று, நல்லன்பர்மனத்தகத்தே
எப்போதும்வைக்கும் இராமானுசனை, ஃ
இருநிலத்தில் ஒப்பார் இலாதஉறுவினையேன்
வஞ்ச நெஞ்சில்வைத்து, முப்போதும்வாழ்த்துவன்,
என்னாம் இது அவன் மொய்புகழ்க்கே. 23

மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து,
அதனால் எய்த்தொழிந்தேன், முனநாள்களெல்லாம்,ஃ
இன்று கண்டுயர்ந்தேன் பொய்த்தவம்
போற்றும்புலைச்சமயங்கள்நிலத்தவியக், 24
கைத்தமெய்ஞ்ஞானத்து, இராமானுசனென்னும்கார்தன்னையே.
காரேய் கருணையிராமாநுச, இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர், நின்னருளின்தன்மை, ஃ
அல்லலுக்கு நேரேயுறைவிடம் நான்வந்து
நீயென்னைஉய்த்தபின், உன் சீரேயுயிர்க்குயிராய்,
அடியேற்கின்றுதித்திக்குமே. 25


திக்குற்ற கீர்த்தியிராமாநுசனை, என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி, விளங்கியமேகத்தை, ஃ
மேவும்நல்லோர் எக்குற்றவாளர்
எதுபிறப்பேதியல்வாகநின்றோர், அக்குற்றம்அப்பிறப்பு,
அவ்வியல்வேநம்மையாட்கொள்ளுமே 26

கொள்ளக்குறைவற்றிலங்கிக், கொழுந்துவிட்டோங்கியவுன்
வள்ளல் தனத்தினால், வல்வினையேன் மனம்
நீ புகுந்தாய் ஃ வெள்ளைச்சுடர்விடும்உன்பெருமேன்மைக்கு இழுக்கிதென்று, தள்ளுற் றிரங்கும்,
இராமானுச! என்தனிநெஞ்சமே! 27

நெஞ்சில்கறைகொண்ட கஞ்சனைக்காய்ந்தநிமலன், நங்கள்
பஞ்சித்திருவடி, பின்னைதன்காதலன், ஃ
பாதம் நண்ணா வஞ்சர்க்கரிய இராமானுசன்புகழ்
அன்றியென்வாய், கொஞ்சிப்பரவகில்லாது,
என்னவாழ்வின்றுகூடியதே! 28

கூட்டும் விதியென்றுகூடுங்கொலோ, தென்குருகைப்பிரான்
பாட்டென்னும்,வேதப்பசுந்தமிழ்தன்னைத், ஃ
தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமானுசன்
புகழ்மெய்யுணர்ந்தோர், ஈட்டங்கள்தன்னை,
என்நாட்டங்கள்கண்டின்பமெய்திடவே. 29

இன்பம்தருபெருவீடுவந்தெய்திலென்? எண்ணிற்த
துன்பந்தரு நிரயம்பலசூழிலென்? ஃ
தொல்லுலகில் மன்பல்லுயிர்கட்கிறையவன்
மாயன்எனமொழிந்த, அன்பன் அனகன்,
இராமானுசனென்னை ஆண்டனனே. 30


ழூஆண்டுகள் நாள் திங்களாய், நிகழ்காலமெல்லாம்மனமே!
ஈண்டு, பல்யோனிகள்தோறுழல்வோம், ஃ
இன்றோரெண்ணின்றியே காண்டகுதோளண்ணல்
தென்னத்தியூரர்கழலிணைக்கீழ்ப், ப10ண்டவன்பாளன்,
இராமானுசனைப்பொருந்தினமே. 31

பொருந்தியதேசும் பொறையும் திறலும்புகழும், நல்ல
திருந்தியஞானமும், செல்வமும் சேரும் ஃ
செருகலியால் வருந்தியஞாலத்தை,
வண்மையினால்வந்தெடுத்தளித்த அருந்தவன்,
எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே. 32

அடையார் கமலத்தலர்மகள் கேள்வன், கையாழியென்னும்
படையோடுநாந்தகமும் படர்தண்டும் ஃ
ஒண்சார்ங்கவில்லும் புடையார்புரிசங்கமுமிந்தப்
பூதலம்காப்பதற்கு, என்னிடையே,
இராமானுசமுனியாயின இந்நிலத்தே 33

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை, நினைப்பரிய
பலத்தைச்செறுத்தும், பிறங்கியதில்லை, ஃ
என்பெய்வினைதென் புலத்தில்பொறித்த வப்புத்தகச்சும்மை
பொறுக்கியபின், நலத்தைப்பொறுத்தது,
இராமானுசன்றன் நயப்புகழே 34

நயவேனொருதெய்வம்நானிலத்தே, சிலமானிடத்தைப்
புயலேஎன, கவிபோற்றிசெய்யேன், ஃ
பொன்னரங்கமென்னில் மயலேபெருகும் இராமானுசன்,
மன்னுமாமலர்த்தாள் அயரேன்,
அருவினை என்னையெவ்வாறின்றடர்ப்பதுவே? 35


அடல்கொண்ட நேமியன் ஆருயிர்நாதன், அன்றாரண்ச்சொல்
கடல்கொண்டஒண்பொருள் கண்டளிப்பப், ஃ
பின்னும் காசினியோர் இடரின்கண்வீழ்ந்திடத் தானும்
அவ்வொண்பொருள்கொண்டு, அவர்பின்படரும்குணன்,
எம்இராமானுசன்றன் படியிதுவே 36

படிகொண்டகீர்த்தி இராமாயணமென்னும்பத்திவெள்ளம்,
குடிகொண்டகோயில், இராமானுசன்குணங்கூறும், ஃ
அன்பர் கடிகொண்டமாமலர்த்தாள் கலந்துள்ளங்கனியும்
நல்லோர், அடிகண்டுகொண்டுகந்து,
என்னையும் ஆளவர்க்காக்கினரே. 37

ஆக்கியடிமை நிலைப்பித்தனை, யென்னை இன்றவமே
போக்கிப்புறத்திட்டது என்பொருளாமுன்பு, ஃ
புண்ணியர்தம் வாக்கிற்பிரியா இராமானுச!
நின்அருளின்வண்ணம், நோக்கில்தெரிவரிதால்,
உரையாயிந்தநுண்பொருளே. 38

பொருளும் புதல்வரும்பூமியும், ப10ங்குழலாருமென்றே
மருள்கொண்டிளைக்கும், நமக்குநெஞ்சே! ஃ
மற்றுளார்தரமோ? இருள்கொண்டவெந்துயர்
மாற்றித்தன்ஈறில்பெரும்புகழே, தெருளும்தெருள்தந்து,
இராமானுசன்செய்யும் சேமங்களே. 39

சேமநல்வீடும் பொருளும் தருமமும்,
சீரியநற்காமமும் என்றிவைநான்கென்பர், ஃ
நான்கினும் கண்ணனுக்கே ஆமதுகாமம் அறம்பொருள்
வீடிதற்கென்றுரைத்தான், வாமனன்சீலன்,
இராமானுசனிந்தமண்மிசையே 40


மண்மிசையோனிகள் தோறும்பிறந்து, எங்கள்மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா, ஃ
உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன்வந்து தோன்றியஅப்பொழுதே, நண்ணருஞானம்
தலைக்கொண்டு, நாரணற்காயினரே. 41

ஆயிழையார்கொங்கைதங்கும் - அக்காதல்அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை, வந்தெடுத்தானின்று, ஃ
மாமலராள் நாயகன் எல்லாவுயிர்கட்கும்நாதன்,
அரங்கனென்னும் தூயவன்,
தீதில் இராமானுசன் தொல்லருள்சுரந்தே. 42

சுரக்கும் திருவும்உணர்வும், சொலப்புகில்வாயமுதம்
பரக்கும், இருவினைபற்றறவோடும், ஃ
படியிலுள்ளீர்! உரைக்கின்றனனுமக்கு
யானறஞ்சீறும் உறுகலியைத்,துரக்கும்பெருமை,
இராமானுசனென்று சொல்லுமினே. 43

சொல்லார் தமிழொருமூன்றும், சுருதிகள்நான்குமெல்லை
இல்லா, அறநெறியாவும்தெரிந்தவன், ஃ
எண்ணருஞ்சீர்நல்லார்பரவும் இராமானுசன்
திருநாமம்நம்பிக்கு அல்லார் அகலிடத்தோர்,
எதுபேறென்றுகாமிப்பரே. 44

பேறொன்றுமற்றில்லைநின்சரண்அன்றி, அப்பேறளித்தற்
காறொன்றுமில்லை, மற்றைச்சரண்அன்றி, ஃ
என்றிப்பொருளைத் தேறுமவர்க்கும் எனக்கும்
உனைத்தந்தசெம்மை சொல்லால், கூறும்பரம்மன்று,
இராமானுச! மெய்ம்மைகூறிடிலே. 45


கூறுஞ்சமயங்கள் ஆறும்குலையக், குவலயத்தே
மாறன்பணித்த, மறையுணர்ந்தோனை, ஃ
மதியிலியேன் தேறும்படியென்மனம் புகுந்தானைத்,
திசையனைத்தும் ஏறும்குணனை,
இராமானுசனை இறைஞ்சினமே. 46

இறைஞ்சப்படும்பரன் ஈசன் அரங்கனென்று, இவ்வுலகத்-
தறம்செப்பும், அண்ணல் இராமானுசன், ஃ
என்அருவினையின் திறம்செற்றிரவும்பகலும் விடாதென்றன்
சிந்தையுள்ளே, நிறைந்தொப்பறவிருந்தான்,
எனக்காரும்நிகரில்லையே! 47

நிகரின்றி நின்றவென்நீசதைக்கு, நின்னருளின்கணன்றிப்
புகலொன்றுமில்லை, அருட்குமஃதேபுகல், ஃ
புன்மையிலோர் பகரும்பெருமைஇராமானுச!
இனிநாம்பழுதே, அகலும்பொருளென்,
பயனிருவோமுக்குமானபின்னே? 48

ஆனது செம்மையறநெறி, பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி, இறந்ததுவெங்கலி, ஃ
பூங்கமலத் தேநதிபாய்வயல் தென்னரங்கன்
கழல் சென்னிவைத்துக், தானத்தில்மன்னும்,
இராமானுசனித்தலத்துதித்தே. 49

உதிப்பனவுத்தமர்சிந்தையுள், ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட, மாறிநடப்பன, ஃ
கொள்ளைவன்குற்றமெல்லாம் பதித்தவென்புன்கவிப்பாவினம்
பூண்டனபாவுதொல்சீர், எதித்தலைநாதன்,
இராமனுசன்றன் இணையடியே. 50


அடியைத் தொடர்ந்தெழும்ஐவர்கட்காய், அன்றுபாரதப்போர்
முடியப், பரிநெடுந்தேர்விடுங்கோனை, ஃ
முழுதுணர்ந்த அடியார்க்கமுதம் இராமானுசன்
என்னைஆளவந்து, இப்படியிற்பிறந்தது,
மற்றில்லைகாரணம்பார்த்திடிலே. 51

பார்தானறுசமயங்கள்பதைப்ப,
இப்பார்முழுதும் போர்த்தான் புகழ்கொண்டு,
புன்மையினேனிடைத்தான்புகுந்து ஃ
தீர்த்தானிருவினை தீர்த்து,
அரங்கன்செய்யதாளிணையோடார்த்தான்,
இவையென் இராமானுசன்செய்யும் அற்புதமே. 52

அற்புதன் செம்மை இராமானுசன், என்னைஆளவந்த
கற்பகம்கற்றவர், காமுறுசீலன், ஃ
கருதரிய பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும்
பரனதென்னும், நற்பொருள்தன்னை,
இந்நானிலத்தேவந்துநாட்டினனே. 53

நாட்டியநீசச்சமயங்கள்மாண்ட்ன,
நாரணனைக் காட்டியவேதம்களிப்புற்றது, ஃ
தென்குருகைவள்ளல் வாட்டமிலாவண்டமிழ்மறை
வாழ்ந்தது, மண்ணுலகில் ஈட்டியசீலத்து,
இராமானுசன்றன் இயல்வுகண்டே. 54

கண்டவர் சிந்தைகவரும், கடிபொழில்தென்னரங்கன்,
தொண்டர்குலாவும் இராமானுசனைத், ஃ
தொகையிறந்த பண்தருவேதங்கள் பார்மேல்நிலவிடப் பார்த்தருளும், கொண்டலைமேவித்தொழும்,
குடியாமெங்கள் கோக்குடியே. 55

கோக்குலமன்னரைமூவெழுகால், ஒருகூர்மழுவால்
போக்கியதேவனைப், போற்றும்புனிதன், ஃ
புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமானுசனை
அடைந்தபின், என் வாக்குரையாது,
என்மனம் நினையாதினி மற்றொன்றையே. 56

மற்றொரு பேறுமதியாது, அரங்கன்மலரடிக்காள்உற்றவரே, தனக்குற்றவராக்கொள்ளும் உத்தமனை, ஃ
நற்றவர் போற்றுமிராமாநுசனை,
இந்நானிலத்தே பெற்றனன்,
பெற்றபின் மற்றறியேனொரு பேதைமையே. 57

பேதையர்வேதப்பொருளிதென்றுன்னிப், பிரமம்நன்றென்றோதி
மற்றெல்லாஉயிரும் அஃதென்று, ஃ
உயிர்கள் மெய்விட்டு ஆதிப் பரனொடொன்றாமென்று
சொல்லுமவ்வல்லலெல்லாம்,
வாதில்வென்றான், எம்இராமானுசன் மெய்மமதிக்கடலே. 58

கடலளவாயதிசையெட்டினுள்ளும், கலியிருளே
மிடைதருகாலத்திராமானுசன், ஃ
மிக்கநான்மறையின் சுடரொளியாலவ்விருளைத்
துரந்திலனேல், உயிரை உடையவன்,
நாரணன்என்றறிவாரில்லை உற்றுணர்ந்தே. 59

உணர்ந்தமெய்ஞ்ஞானியர்யோகந்தொறும், திருவாய்மொழியின்
மணந்தரும், இன்னிசைமன்னும் இடந்தொறும், ஃ
மாமலராள் புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும்
பரிதொறும் புக்குநிற்கும், குணந்திகழ்கொண்டல்,
இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60


கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினையால்,
நிரயத்தழுந்தியிட்டேனை, வந்தாட்கொண்டபின்னும்,ஃ
அருமுனிவர் தொழுந்தவத்தோனெம்இராமானுசன்
தொல்புகழ், சுடர்மிக்கெழுந்தது
அத்தால் நல்லதிசயங்கண்ட திருநிலமே. 61

இருந்தேனிருவினைப்பாசம்கழற்றி, இன்றியான்
இறையும் வருந்தேன், இனியெம்இராமானுசன், ஃ
மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்
புன்மையினோர்க்கு ஒன்றும்நன்மைசெய்யாப்,
பெருந்தேவரைப்பரவும், பெரியோர் தம்கழல்பிடித்தே. 62

பிடியைத்தொடரும்களிறென்ன, யானுன்பிறங்கியசீர்
அடியைத்தொடரும்படி நல்கவேண்டும், ஃ
அறுசமயச் செடியைத் தொடரும் அருள்செறிந்தோர்
சிதைந்தோடவந்து இப்படியைத்தொடரும்,
இராமானுச! மிக்கபண்டிதனே. 63

பண்டருமாறன்பசுந்தமிழ், ஆனந்தப்பாய்மதமாய்
விண்டிட, எங்கள் இராமானுசமுனிவேழம் ஃ
மெய்ம்மைகொண்ட நல்வேதக்கொழுந்தண்டமேந்திக்,
குவலயத்தே மண்டிவந்தேன்றது,
வாதியர்காள்! உங்கள்வாழ்வற்றதே. 64

வாழ்வற்றது தொல்லைவாதியர்க்கு, என்றும்மறையவர்தம்
தாழ்வற்றது, தவம் தாரணிபெற்றது, ஃ
தத்துவ நு}ல் கூழற்றது குற்றமெல்லாம்
பதித்தகுணத்தினர்க்கு, அந்நாழற்றது,
நம்இராமானுசன் தந்தஞானத்திலே. 65


ஞானங்கனிந்தநலங்கொண்டு, நாடொறும்நைபவர்க்கு
வானம்கொடுப்பதுமாதவன், ஃ
வல்வினையேன் மனத்தில் ஈனம்கடிந்தஇராமானுசன்
தன்னைஎய்தினர்க்கு, அத்தானம்கொடுப்பது,
தன்தகவென்னும்சரண்கொடுத்தே. 66

சரணமடைந்ததருமனுக்காப், பண்டுநூற்றுவரை
மரணம் அடைவித்தமாயவன் தன்னை, ஃ
வணங்கவைத்த கரணம்இவையுமக்கன்றென்றிராமானுசன்,
உயிர்கட்(கு) அரணங்கமைத்திலனேல்,
அரணர்மற்றிவ்வாருயிர்க்கே? 67

ஆரெனக்கின்றுநிகர்சொல்லின், மாயனன்றைவர்
தெய்வத் தேரினிற்செப்பியகீதையின், ஃ
செம்மைப்பொருள்தெரியப் பாரினிற்சொன்ன
இராமானுசனைப் பணியும்நல்லோர்,
சீரினிற்சென்றுபணிந்தது, என்னாவியும்சிந்தையுமே. 68

சிந்தையினொடுகரணங்கள்யாவும்சிதைந்து,
முன்னாள் அந்தமுற்றாழ்ந்ததுகண்டு, ஃ
அவைஎன்றனக்கன்றருளால் தந்தஅரங்கனும்
தன்சரண்தந்திலன், தானதுதந்து, எந்தைஇராமானுசன்
வந்தெடுத்தனன் இன்றென்னையே. 69

என்னையம் பார்த்தென்இயல்வையும்பார்த்து, எண்ணில்
பல்குணத்த உன்னையும் பார்க்கில்,
அருள்செய்வதேநலம், ஃ அன்றியென்பால் பின்னையும்
பார்க்கில்நலமுளதே? உன்பெருங்கருணை, தன்னை யென்பார்ப்பர், இராமானுச! உன்னைச்சார்ந்தவரே. 70


சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக்கீழ், அன்புதான்மிகவும்
கூர்ந்தது, அத்தாமரைத்தாள்களுக்கு, ஃ
உன்றன் குணங்களுக்கே தீர்ந்ததென்செய்கை
முன்செய்வினை நீசெய்வினையே, அதனால்பேர்ந்தது,
வண்மைஇராமானுச! எம்பெருந்;தகையே. 71

கைத்தனன் தீயசமயக்கலகரைக்,
காசினிக்கேஉய்த்தனன், தூயமறைநெறிதன்னை, ஃ
என்றுன்னியுள்ளம் நெய்த்தவன்போடிருந்தேத்தும்
நிறைபுகழோருடனே, வைத்தனன்என்னை,
இராமானுசன் மிக்கவண்மைசெய்தே. 72

வண்மையினாலுந்தன்மாதகவாலும், மதிபுரையும்
தண்மையினாலும், இத்தாரணியோர்கட்குத், ஃ
தான்சரணாய் உண்மை நன்ஞானம்உரைத்தஇராமானுசனை,
உன்னும் திண்மையல்லாலெனக்கில்லை,
மற்றோர்நிலைதேர்ந்திடிலே. 73

தேரார் மறையின்திறமென்று, மாயவன்தீயவரைக்
கூராழிகொண்டுகுறைப்பது, ஃ கொண்டலனையவண்மை ஏரார்குணத்தெம்இராமானுசன்.
அவ்வெழில்மறையில் சேராதவரைச்சிதைப்பது,
அப்போதொருசிந்தைசெய்தே. 74

செய்த்தலைச்சங்கம்செழுமுத்தம்ஈனும், திருவரங்கர்
கைத்தலத்தாழியும்சங்கமுமேந்தி, ஃ
நங்கண் முகப்பேமொய்த்தலைத்துன்னைவிடேனென்றிருக்கிலும்,
நின்புகழே மொய்த்தலைக்கும்வந்து,
இராமானுச! என்னைமுற்றுநின்றே. 75


ழூநின்றவண்கீர்த்தியும்நீள்புனலும், நிறைவேங்கடப்பொற்
குன்றமும், வைகுந்தநாடும் குலவியபாற்கடலும்,ஃ
உன்தனக்கெத்தனையின்பந்தரும்
உன்இணைமலர்த்தாள், என்றனக்கும்அது,
இராமானுச! இவையீந்தருளே. 76

ஈந்தனனீயாதஇன்னருள், எண்ணில்மறைக்குறும்பைப்
பாய்ந்தனன், அம்மறைப்பல்பொருளால், ஃ
இப்படியனைத்தும் ஏய்ந்தனன்கீர்த்தியினாலென் வினைகளை,
வேர்பறியக் காய்ந்தனன், வண்மை
இராமானுசற்கென்கருத்தினையே? 77

கருத்திற்புகுந்துள்ளிற்கள்ளம்கழற்றிக், கருதரிய
வருத்தத்தினால்மிகவஞ்சித்து, ஃ
நீயிந்தமண்ணகத்தே திருத்தித்திருமகள் கேள்வனுக்கு
ஆக்கியபின், என்னெஞ்சில்பொருத்தப்படாது,
எம்இராமானுச! மற்றோர் பொய்ப்பொருளே. 78

பொய்யைச்சுரக்கும் பொருளைத்துரந்து, இந்தப்பூதலத்தே
மெய்யைப்புரக்கும் இராமானுசன் நிற்க, ஃ
வேறுநம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்
இங்கியாதென்றுலர்ந்தவமே, ஐயப்படாநிற்பர்,
வையத்துள்ளோர்நல்லறிவிழ்தே. 79

நல்லார் பரவும்இராமநுசன், திருநாமம்நம்ப
வல்லார்திறத்தை, மறவாதவர்கள்யவர், ஃ
அவர்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலும்
எத்தொழும்பும், சொல்லால்மனத்தால், கருமத்தினால்,
செய்வன் சோர்வின்றிறே. 80


சோர்வின்றி உன்றன்துணையடிக்கீழ்த், தொண்டுபட்டவர்பால்
சார்வின்றி நின்றஎனக்கு, ஃ
அரங்கன்செய்யதாளிணைகள் பேர்வின்றியின்றுபெறுத்தும்
இராமானுச!, இனியுன் சீரொன்றியகருணைக்கு,
இல்லைமாறுதெரிவுறிலே. 81

தெரிவுற்ற ஞானம்செறியப்பெறாது, வெந்தீவினையால்
உருவற்றஞானத்துழல்கின்றஎன்னை, ஃ
ஒருபொழுதில் பொருவற்றகேள்வியனாக்கிநின்றான்
என்னபுண்ணியனோ!, தெரிவுற்றகீர்த்தி,
இராமானுசனென்னும் சீர்முகிலே. 82

சீர்கொண்டுபேரறம்செய்து, நல்வீடுசெறிதுமென்னும்
பார்கொண்டமேன்மையர்கூட்டனல்லேன், ஃ
உன்பதயுகமாம் ஏர்கொண்டவீட்டைஎளிதினில்எய்துவன்,
உன்னுடைய கார்கொண்டவண்மை,
இராமானுச! இதுகண்டுகொள்ளே. 83

கண்டுகொண்டேனெம்இராமானுசன்றன்னைக், காண்டலுமே
தொண்டுகொண்டேன், அவன் தொண்டர்பொற்றாளில்,
அவன்சீர் வெள்ளவாரியை, வாய்மடுத்தின்(று) உண்டுகொண்டேன்,
இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே. 84

ஓதியவேதத்தின் உட்பொருளாய், அதன்உச்சிமிக்க
சோதியை, நாதன்எனவறியா துழல்கின்றதொண்டர் ஃ
பேதைமை தீர்த்தவிராமாநுசனைத்தொழும்பெரியோர்,
பாதமல்லாலென்றன் ஆருயிர்க்கு,
யாதொன்றும்பற்றில்லையே. 85


பற்றாமனிசரைப்பற்றி, அப்பற்றுவிடாதவரே
உற்றாரெனவுழன்று, ஓடிநையேனினி, ஃ
ஒள்ளிய நு}ல் கற்றார் பரவும் இராமானுசனைக,
கருதுமுள்ளம் பெற்றார்யவர்,
அவரெம்மைநின்றாளும்பெரியவரே. 86

பெரியவர் பேசிலும்பேதையர் பேசிலும், தன்குணங்கட்-
குரியசொல்என்றும், உடையவன்என்றென்று, ஃ
உணர்வில்மிக்கோர் தெரியும்வண்கீர்த்திஇராமானுசன்,
மறைதேர்ந்துலகில் புரியுநன்ஞானம்,
பொருந்தாதவரைப்பொரும்கலியே. 87

கலிமிக்கசெந்நெல் கழனிக்குறையல், கலைப்பெருமான்
ஒலிமிக்கபாடலைஉண்டு, தன்னுள்ளம்தடித்து, ஃ
அதனால்வலிமிக்க சீயம் இராமானுசன்
மறைவாதியராம், புலிமிக்கதென்று,
இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே. 88

போற்றருஞ்சீலத்திராமானுச, நின்புகழ்தெரிந்து
சாற்றுவனேல், அதுதாழ்வதுதீரில், ஃ
உன்சீர்தனக்கோர் ஏற்றமென்றேகொண்டிருக்கிலும்,
என்மனம்ஏத்தியன்றி ஆற்றகில்லாது,
இதற்கென்னினைவாயென்றிட்டஞ்சுவனே. 89

நினையார் பிறவியைநீக்கும்பிரானை, இந்நீணிலத்தே
எனையாளவந்த இராமானுசனை, ஃ
இருங்கவிகள்புனையார்புனையும்பெரியவர்தாள்களில்,
பூந்தொடையல் வனையார்,
பிறப்பில்வருந்துவர் மாந்தர்மருள்சுரந்தே. 90

மருள் சுரந்தாகமவாதியர்கூறும், அவப்பொருளாம்
இருள்சுரந்தெய்த்த, உலகிருள்நீங்கத், ஃ
தன்ஈண்டியசீர்அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும்நாதன்,
அரங்கனென்னும் பொருள்சுரந்தான்,
எம்இராமானுசன் மிக்கபுண்ணியனே. 91

புண்ணியநோன்பு புரிந்துமிலேன், அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங்கேள்வி, நுவன்றுமிலேன், ஃ
செம்மைநு}ற்புலவர்க்கெண்ணருங்கீர்த்தி இராமானுச!
இன்றுநீபுகுந்து, என்கண்ணுள்ளும்நெஞ்சுள்ளும்,
நின்றவிக்காரணம்கட்டுரையே. 92

கட்டப்பொருளைமறைப்பொருளென்று, கயவர்சொல்லும்
பெட்டைக்கெடுக்கும்பிரானல்லனே, ஃ
என்பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு
தன்னருள்என்னுமொள்வாளுருவி, வெட்டிக்களைந்த,
இராமானுசனென்னும்மெய்த்தவனே. 93

தவம்தரும் செல்வும்தகவும்தரும், சலியாப்பிறவிப்
பவந்தரும் , தீவினைபாற்றித்தரும், ஃ
பரந்தாமமென்னும் திவந்தரும்தீதில் இராமானுசன்தன்னைச்
சார்ந்தவர்கட்(கு), உவந்தருந்தேன்,
அவன்சீரன்றியானொன்றும்உள்மகிழ்ந்தே. 94

உண்ணின்றுயிர்களுக்குற்றனவேசெய்து, அவர்க்குயவே
பண்ணும்பரனும் பரிவிலனாம்படி, ஃ
பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்றுவீடளிப்பான்
எம் இராமானுசன், மண்ணின்தலத்துதித்து,
உய்மறைநாலும்வளர்த்தனனே. 95


வளரும் பிணிகொண்டவல்வினையால், மிக்கநல்வினையில்
கிளரும்துணிவுகிடைத்தறியாது, ஃ
முடைத்தலையூன்தளரும்அளவும்தரித்தும்விழுந்தும்
தனிதிரிவேற்(கு), உளரெம்இறைவர்,
இராமானுசன்றன்னைஉற்றவரே. 96

தன்னையுற்றாட்செய்யவும்தன்மையினோர், மன்னுதாமரைத்தாள்
தன்னையுற்றாட்செய்ய, என்னையுய்த்தானின்று, ஃ தன்தகவால் தன்னையுற்றாரன்றித்தன்மையுற்றாரில்லை என்றறிந்து,
தன்னையுற்றாரை, இராமானுசன்குணம்சாற்றிடுமே. 97

ழூஇடுமே இனிய சுவர்க்கத்தில், இன்னம்நரகிலிட்டுச்
சுடுமேயவற்றைத், தொடர்தருதொல்லைச், ஃ
சுழல் பிறப்பில் நடுமேயினிநம்இராமானுசன்
நம்மைநம்வசத்தே, விடுமேசரணமென்றால்,
மனமே! நையல்மேவுதற்கே. 98

தற்கச் சமணரும் சாக்கியப்பேய்களும், தாழ்சடையோன்
சொற்கற்றசோம்பரும், சூனியவாதரும், ஃ
நான்மறையும் நிற்கக்குறும்புசெய் நீசரும்மாண்டனர்,
நீணிலத்தே பொற்கற்பகம்,
எம்இராமானுசமுனிபோந்தபின்னே. 99

போர்ந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு, உனதடிப்போதில்
ஒண்சீராம் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி, ஃ
நின்பாலதுவே ஈந்திடவேண்டும்இராமானுச!
இதுஅன்றியொன்றும், மாந்தகில்லாது,
இனிமற்றொன்றுகாட்டி மயக்கிடலே. 100


மயக்குமிருவினைவல்லியிற்பூண்டு, மதிமயங்கித்
துயக்கும்பிறவியில், தோன்றியஎன்னைத், ஃ
துயரகற்றி உயக்கொண்டுநல்கும் இராமானுச!
என்றதுன்னையுன்னி, நயக்குமவர்க்கிது இழுக்கென்பர்,
நல்லவர்என்றுநைந்தே. 101

நையுமனமுன்குணங்களைஉன்னி, என்நாவிருந்தெம்
ஐயன்இராமானுசனென்றழைக்கும், ஃ
அருவினையேன் கையுந்தொழும்கண்கருதிடுங்காணக்
கடல்புடைசூழ், வையம்இதனில்,
உன்வண்மையென்பாலென்வளர்ந்ததுவே? 102

வளர்ந்தவெங்கோப மடங்கலொன்றாய், அன்றுவாளவுணன்
கிளர்ந்;த, பொன்னாகம்கிழித்தவன், ஃ
கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும்சிந்தைஇராமானுசன்
என்றன் மெய்வினைநோய், களைந்துநன்ஞானம்
அளித்தனன், கையிற்கனியென்னவே. 103

104. கையிற்கனியென்னகண்ணனைக்காட்டித்தரிலும், உன்றன்
மெய்யிற்பிறங்கிய, சீரன்றிவேண்டிலன்யான், ஃ
நிரயத் தொய்யிற்கிடக்கினும்சோதிவிண்சேரினும்
இவ்வருள்நீ, செய்யில்தரிப்பன்,
இராமானுச! என்செழுங்கொண்டலே! 104

ழூசெழுந்திரைப்பாற்கடல்கண்டுயில்மாயன், திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்நெஞ்சில், மேவுநன்ஞானி, ஃ
நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன்
இராமானுசனைத்தொழும்பெரியோர்,
எழுந்திரைத்தாடும்இடம், அடியேனுக்கிருப்பிடமே. 105


ழூஇருப்பிடம் வைகுந்தம்வேங்கடம், மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம், மாயனுக்கென்பர்நல்லோர், ஃ
அவைதன்னொடும் வந்திருப்பிடம் மாயனிராமானுசன்
மனத்து, இன்றவன்வந் திருப்பிடம்,
என்றன் இதயத்துள்ளேதனக்கின்புறவே. 106

ழூஇன்புற்ற சீலத்திராமானுச, என்றும்எவ்விடத்தும்
என்புற்றநோய், உடல்தோறும்பிறந்திறந்து, ஃ
எண்ணரிய துன்புற்றுவீயினும்சொல்லுவதொன்றுண்டு,
உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி,
என்னையாக்கியங்காடபடுத்தே. 107

ழூஅங்கயல்பாய்வயல்தென்னரங்கன், அணிஆகமன்னும்
பங்கயமாமலர்ப், பாவையைப்போற்றதும், ஃ
பத்தியெல்லாம் தங்;கியதென்னத்தழைத்துநெஞ்சே!
நந்தலைமிசையே, பொங்கியகீர்த்தி,
இராமானுசனடிப்பூமன்னவே. 108

( பூமன்னுமாதுபொருந்தியமார்பன், புகழ்மலிந்த
பாமன்னுமாறன், அடிபணிந்துய்ந்தவன், ஃ
பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமானுசன்,
சரணாவிந்தம் நாம்மன்னிவாழ,
நெஞ்சேசொல்லுவோமவன்நாமங்களே. )

ஆழ்வார் திருவடிகளே சரணம்

ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்

ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று.

அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து,  அங்கே போய் உட்கார்ந்துவிடலாம் என்று அடிக்கடி மனசில் தோன்றும்...

வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டு, ஒரகடம் வழியாகத் திரும்பி வந்தபோது, யதேச்சையாக அந்த மலைப் பகுதியை உற்றுப் பார்த்தேன். அழகாகப் படிகள் அமைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஒரகடம் - சிங்கப்பெருமாள் கோயில் பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் ஒரு சிமின்ட் சாலை உள்ளே திரும்பியது. அதன் வழியே சென்று மலை அடிவாரத்தை அடைந்தேன். மலை மேல் பெருமாள் கோயில் இருப்பதை அறிந்தேன். ஆனால் கோயில் இப்போது திறந்திருக்காது; பூசை செய்யறவர் வரலை என்று கீழே சீட்டாடிக் கொண்டிருந்த சில மஹானுபாவர்கள் சொன்னதால்... ஒரு பெருமூச்சோடு வீடு திரும்பினேன்.

இன்று புரட்டாசி சனிக்கிழமை காலை என்பதால்... அடியேன் இருக்கும் இடத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு உள்ள அந்த மலைக்குச் சென்றேன்.
மறைமலைநகர் ரயில் நிலைய கேட் கடந்து உள்ளே சுமார் 6 கி.மீ. செல்ல வேண்டும். இது மருந்துமலை என்னும் பெயருடன் ஔஷதகிரியாகத் திகழ்கிறது.
இந்த இடம் ஆப்பூர் என்பதாம்..

508 படிகள். சரியாக கணக்கு எழுதியிருக்கிறார்கள் படிகளில்...!
மூலிகை வாசனை நாசியின் நுகர்வில் உணரமுடிகிறது. படிகளில் மேலும் கீழும் மூச்சிரைக்க ஏறும்போது,  நன்றாக மூச்சை உள்வாங்கி சுவாசிக்கும்போது... வித்தியாசமான நறுமணம். புத்துணர்ச்சி.
முன்னால் சிறுவர்கள் சிலர் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

மலை உச்சியில் அருமையாக உள்ளது  பெருமாளின் சந்நிதி. தனித்திருக்கும் பெருமாள். மார்பில் மஹாலட்சுமியைத் தாங்கியபடி! அழகிய சிறிய திருமேனி.
இங்கே பிரசன்னமாகியுள்ளதால் அவர் பிரசன்ன வேங்கடேசர்! ஏழுமலையானப் பார்த்த அதே உற்சாகம். அவர் ஏழுமலையான் என்றால்... இவர் ஏகமலையான்! அவ்வளவுதான்!

மனிதர்களிடம் பேசிப்பேசி நொந்து போன மனநிலையில்... இவரிடம்தான் சற்று நேரம் மனசால் பேசிக் கொண்டிருந்தேன். ஓய் ஆப்பூராரே... உம்ம நேரடிப் பார்வையில் இப்போ ஜாகை வந்திருக்கேன். கவனிச்சிக்கோரும். நித்ய திருவாராதன அமுதுபடி இனி உமக்கும் சேர்த்து அடியேன் இருப்பிடத்தில் இருந்தே மானசீகமாக ஆகும்... என்று சொல்லி வந்தேன்.

இந்த ஔஷதகிரியில் அகத்தியரும் பல சித்தர்களும் எழுந்தருள்கின்றனராம். குறிப்பாக பௌர்ணமி. அனேகமாக பௌர்ணமியில் கிரிவலம் போல், இந்த மலையில் ஏறி சந்நிதியை வலம் வரவேண்டும் என்று மனத்தில் சங்கல்பித்துக் கொண்டேன். நம் ஊனக் கண்ணுக்கு சித்தபுருஷர்கள் தெரியாவிட்டாலும்... அந்த யா(ஞா)னக் கண்ணுக்கு என்றாவது காட்டிச் செல்ல மாட்டார்களா என்ன?

ஒளஷதகிரி அருகேயுள்ள திருக்கச்சூர் மலைக்கோயில் சிவ பெருமானும் ஒளஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) என்ற திருநாமத்துடன் திகழ்கிறாராம். ஒருவர் சொன்னார்.

மலை மேல் மூச்சிரைக்க ஏறிச் சென்றதால் வியர்வை பெருகி தாகம் எடுத்தது. கையில் தண்ணீர் போத்தல் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. நல்லவேளை... கைங்கர்யபரர் பாலாஜி மோட்டர் போட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். மலைமேல் அந்தத் தண்ணீர் அவ்வளவு சுவை. மூலிகைச் சுவையுடன் வேர்களின் வாசனை கலந்து இருந்தது.

இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளுக்கான திருமஞ்சனாதிகளுக்கு தங்குதடையின்றி நீர் சுரந்து தரும் அற்புதக்கிணறாம்.

ஓய் இங்கே மக்கள் என்ன பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்...? கைங்கர்யபரர் பாலாஜியிடம் கேட்டேன். அண்ணா... பெருமாள் திருநாமம் நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்பது. இங்கே திருமணம் கைகூட வேண்டிக் கொள்கிறார்கள். இந்தப் பெருமாள் எப்போ இங்கே வந்தார். எத்தனை வருசம் இருக்கும் இதெல்லாம் அடியேனுக்குத் தெரியாது. இதற்கான கல்வெட்டோ, வேறு சான்றோ இங்கே இல்லை. ஆனால் 800 வருஷத்தில் இருந்து ஆயிரம் வரை இருக்கலாம் என்று சொல்லலாம். இங்குள்ள கிராமப் பகுதிகளில் பெருமாளை மனத்தில் நினைத்து திருமண பாக்கியத்துக்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம் கைகூடியதும் பெருமாளுக்கு புடவை எடுத்து சாற்றுகிறார்கள். அதாவது கல்யாண ஜவுளி எடுக்கும் போது, முதல் புடவை பெருமாளுக்கு எடுக்கிறார்கள். அதை நிச்சயதார்த்தத்தின் போது கொண்டு வந்து பெருமாளுக்கு சாற்றுகிறார்கள்... என்றார்.

என்னது..? பெருமாளுக்கு புடவையா? என்ன ஓய் சொல்றீர்? என்றேன்.. ஆமாண்ணா.. இங்கே தாயார் பெருமாளுடன் சேர்ந்து மார்பில் குடியிருக்கிறார். மேலும், தாயாரே பெருமாள் ஸ்வரூபியாய் எழுந்தருளியிருப்பதாய் இங்கே ஐதீகம். அதனால் அப்படி என்றார். சரிதான்...! என்ன கலர் புடவை எடுப்பார்கள் என்று கேட்டேன். அதெல்லாம் அவரவர் இஷ்டம். பெரும்பாலும் நீலம், பச்சை, மஞ்சள் கலரில் எடுத்து சமர்ப்பிப்பார்கள் என்றார்.

இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். சிங்கப் பெருமாள் கோயில் செயல் அலுவலர்தான் இதற்கும் பொறுப்பு. இங்கே பூஜை செய்பவர் ஒருவர் மட்டுமே உள்ளார். மேலும், இவ்வளவு தொலைவுக்கு அதிகம் மக்கள் வருவதில்லை. அதைவிட... 508 படிகள் மலை ஏறி வரவேண்டுமா என்ற மலைப்பு! ஆனால்... பட்டாச்சாரியார் பாவம்.. யார் வந்தாலும் வராவிட்டாலும் மலை ஏறி வந்துதானே ஆகவேண்டும்.! சேட்டைக் குரங்குகளும் இங்கே மிக அதிகம்!

ஆகவே... சனி ஞாயிறுகளில் கோயிலுக்கு செல்வது உசிதம். செல்லும் முன்பாக, 90031 26183 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி... ஐயா... நாங்க கோயிலுக்கு வரப்போறோம்.. கோயிலுக்கு வரப்போறோம்... நீங்க அங்க இருக்கீஹளா என்று கேட்டு உறுதிப்  படுத்தி... பின்னர் செல்லலாம்.

நமக்கு வழக்கம்போல் ஆப்பூர் காலனிப் பகுதி சிறுவர்கள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். செங்கல்பட்டு ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கிறார்களாம். தினமும் பஸ் பயணம்தான்!

விஸ்வநாதன், சபரி இருவரும் நெற்றியைக் காட்டி... ஸ்ரீராம் அண்ணா... குங்குமம் மேலபாத்து வரமாதிரி இழுத்து தீட்டிவுடுங்க என்றார்கள். பளிச்சென ஸ்ரீசூர்ண ரேஞ்சுக்கு இழுத்துவிட்டு... சற்று நேரம் அளவளாவினேன். அதற்குள் அண்ணா இப்படியே ஒரு செல்ஃபி என்றான். சரிதான் என்று ஒரு க்ளிக் க்ளிக்கினால்... மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து அண்ணா.. நான் நான்.. என்றார்கள்! எல்லோரையும் ஒன்றாக அமரவைத்து க்ளிக்கி... டேய் பசங்களா... கட்டாயம் இதை பேஸ்புக்கில் போடுவேன் என்றேன். விஸ்வநாதன் சொன்னான்.. அண்ணா பேஸ்புக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு லைக் பிச்சிக்கிட்டு போகும் பாருங்க என்றான். சரிடாப்பா.. அதையும் பாப்போமே என்றேன். அந்தச் சிறார்களின் "கோவிந்தா கோவிந்தா" சப்தம் மலை முழுதும் எதிரொலித்தது.

ஆக ... இப்படியாக இன்றைய புரட்டாசி சனிக்கிழமை, அடியேனுக்கு ஒரு பெருமாளையும் சில பக்த சிரோமணி சிறார்களையும் அறிமுகப் படுத்திவிட்ட நாளாக அமைந்துவிட்டது!


















ஞாயிறு, அக்டோபர் 04, 2015

ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்


இந்த சைலன்ட் ஜோக், எனக்கு இரு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.
ஒன்று, இன்றைய ஸ்வச்ச பாரத் அபியான். தூய்மை இந்தியா திட்டம், இந்தப் படத்தில் காணும் வகையில்தான் பல இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை நகரே அதற்கு சாட்சி.
இரண்டு, இதை அனுப்பிய கீதா, விஜயகீதா, ஏழ்வரைக்கடியான் என்ற பெயர்களில் உலவிய ராமரத்னம் சாரின் ஒரு செயல்...

'தி ஹிந்து' அலுவலகத்தில் புகைப்பட ஆர்கிவ்ஸ் செக்‌ஷனில் பணிபுரிந்தவர் ராமரத்னம். கன்னடம், தெலுங்கு உள்ளிட்டவற்றில் பழக்கம் உண்டு. நான் மஞ்சரியில் பணிபுரிந்தபோது அமைந்த நல்ல நட்புக்களில் இவரும் ஒருவர். அழகாக தென்னாச்சார்ய சம்ப்ரதாயத்தை பளிச்செனக் காட்டும் திருமண் துலங்க வருவார். ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஒரு முறை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஒரு நாடகத்துக்கு வந்திருந்தார். உடன் அவருடைய மகள், உறவினர்களும் வந்திருந்தனர். என்னைப் பார்த்ததும் என்னுடன் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருடன் கொஞ்சம் சப்தமாகப் பேச வேண்டும்... சீராம் வாயேன்... கொஞ்சம் வெளில போவோம்னு அழைத்தார். இருவரும் வெளியில் வந்தோம். சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். தி ஹிந்துவில் போட்டோக்கள் வரிசைப் படுத்தி வைக்கும் முறை, கட்டுரைக்கு தக்க படத்தை எடுத்துக் கொடுக்க அவர் கையாளும் முறை... எல்லாம் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது இன்டக்ஸிங் வெகு சுலபம். படங்களை நிகழ்வுகள் வாரியாக ஏ டூ இஸட் இன்டக்ஸ் செய்து, கீ வேர்ட் கொடுத்து டேடாபேஸில் சேமித்து, தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால் கணினி வராத காலத்தில் எப்படி பெட்டிகளை அடுக்கி, அவற்றில் காலவரிசை, அகரவரிசைப் படி போட்டோக்கள் வைத்திருப்போம் என்ற பணி நுட்பத்தை சொல்லிக் கொண்டிருந்தார்....

கென்னடி தெரு முனையில் உள்ள பெட்டிக் கடையில் வெத்தலை பாக்கு பீடா வாங்கி வாயில் போட்டு விட்டு என் தோளைப் பற்றிய படி நடக்க முனைந்தார்... அதை மெல்லத் தொடங்குவதற்குள் என்ன ஆனதோ....  (கொஞ்சம் லோக்கல் மொழியில் செல்லமாகத் திட்டியபடி) வரா வரா... என்று சொல்லிக் கொண்டே... வாயில் போட்ட  பீடாவை அப்படியே உள்ளங்கைக்கு கொண்டு வந்து, கைகளைப் பின்னால் கட்டி மறைத்துக் கொண்டு... பேசத் தொடங்கினார்.

அப்போது அவரது மகள், உறவினர்கள் சிலர் எங்களைக் கடந்து போனார்கள். அவர்களிடம் நான் சீராமோட வரேன்... நீங்க போங்கோ... என்று சொல்லி விட்டு மெதுவாக நடந்து வந்தார். பின்னர் சொன்னார்... என்னை வெத்தலை போடக்கூடாதுன்னு பொண்ணு கண்காணிச்சிண்டிருப்பா .. பின்னாடியே வந்துடுவா.... என்று சொல்லி பீடாவையும் 'தி ஹிந்து' அலுவலகக் கதையையும் மென்றுகொண்டு வந்தார்.  (நிற்க...)

எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க.. இதைப் போயா பகிருந்து கொள்வது என்று இதைப்  படிக்கும் உங்களுக்கு தோன்றக் கூடும். இதை நான் சொல்லக் காரணம், ஒரு குடும்பத்தில் உள்ள முதியவரின் குழந்தைத்தனமான மனநிலையை ஒரு இளைஞனாக நான் கண்டுகொண்ட ஒரு சம்பவம் இது என்பதால்தான்! உடல் நலம் சார்ந்த பிரச்னைகளை முதியவர்கள் சந்திக்கும்போது, உணவு முறைகளில் நாம் கட்டுப்பாடுகளை விதிப்போம். அது நம் நல்லதுக்குத்தானே என்ற எண்ணம் அந்த நேரத்தில் ஒரு சிலருக்கு வராது. குழந்தைகள் ஐஸ்க்ரீம்க்கு அடம்பிடிப்பதுபோல்... யாருக்கும் தெரியாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டு... பின்னர் சளி, தொண்டைப் பிரச்னை என்று அவதிப்படுவதுபோல்தான்... ஆனால், நாம் அந்த முதியவர்களை அவர்களின் மனநிலையில் அனுக மறந்துவிடுகிறோம் என்று தோன்றும். இன்றும் என் தந்தையின் பொடி போடும் பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை. சட்டையில்தான் மூக்குப் பொடி எல்லாம் தன் வண்ணத்தைக் காட்டியிருக்கும்..! முதலில் சொல்லிப் பார்த்தேன். இப்போது அவர் போக்கில் விட்டுவிட்டேன்!

மீண்டும் ராமரத்னம் சார் கதைக்கு வருகிறேன்....
மஞ்சரிக்கு துணுக்குகள் அதிகம் அனுப்புவார். அவர் படித்த இதழ்களில் வரும் துணுக்குகள், சைலன்ட் ஜோக்ஸ், படங்கள், சார்ந்த செய்திகள், சிறு சிறு மொழிபெயர்ப்புகள், ஓரிரு முறை கதைகள் கூட அனுப்பியிருக்கிறார். ஏழ்வரைக்கடியான், விஜயகீதா, எம்.ஆர்.எம்., ராமரத்னம் உள்ளிட்ட பெயர்களில் அவற்றை அப்போது மஞ்சரியில் பிரசுரித்திருக்கிறேன். அவ்வாறு அவர் அனுப்பிய இந்தப் படம்...  அன்று அவர் வெத்தலையை உள்ளங்கைக்கு அனாயாசமாக வாயில் இருந்து எவருக்கும் தெரியாமல் சடாரெனக் கொண்டு வந்த அந்தக் குழந்தைத்தனமான செயலை நினைவுபடுத்திப் பார்க்க வைக்கும். வயதாகிவிட்டாலே குழந்தைத்தனம் குடிகொள்ளும் என்பதை அவரிடம் நான் முழுமையாகக் கண்டேன். அப்போது அவர் 70ஐக் கடந்துவிட்ட மனிதர். அவரை என் வண்டியில் அமரவைத்து ஓரிரு முறை ஆழ்வார்பேட்டை தி ஹிந்து பணியாளர்களுக்கான அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.

அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது,  நங்கநல்லூர் ஹிந்து காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு இரு முறை சென்றிருக்கிறேன். 2010க்குப் பின் அவரைப் போய்ப் பார்க்க நேரம் அமையவில்லை.

அவர் நம் நண்பர் புகைப்படக் கலைஞரும்,  இதழாளர் எழுத்தாளருமான க்ளிக் ரவி யின் சிற்றப்பா முறை உறவினரும் கூட. அவ்வகையில் க்ளிக் ரவி எங்கெல்லாம் தட்டுப் படுகிறாரோ... அவருடன் போனில் எப்போது பேச வாய்ப்பு வந்தாலும் அப்போதெல்லாம் ... ராமரத்னம் சார் எப்படி இருக்கார் என்று நலம் விசாரிப்பேன். இரு வாரங்களுக்கு முன்னர் கிருஷ்ண கான சபா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோதும், க்ளிக் ரவி சார்.. சித்தப்பா எப்படி இருக்கார் என்று நலம் விசாரித்தேன். அவர் பாவம் சார்.. படுத்த படுக்கையா இருக்கார். ரொம்ப கஷ்டமான நிலைதான் என்றார். அப்போதே ஒரு முறை சென்று நேரில் பார்த்து வர எண்ணம்... ஆனால் தள்ளிப்போடப்படும் வேலைகளால் இவ்வாறு சில நெகிழ்வான தருணங்களை வாழ்க்கையில் இழக்க நேரிடுகிறது.

காரணம் இன்று க்ளிக் ரவி அனுப்பியிருந்த குறுந்தகவல். ஏழ்வரைகடியான் - எம்.ராமரத்னம் காலமானார். இன்று 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் அவரது நங்கநல்லூர் இல்லத்தில் இருந்து என்று!

வேறு என்ன செய்வது? என் மன நிலையை இப்படித்தான் என்னால் வெளிப்படுத்த முடிகிறது! 

வெள்ளி, அக்டோபர் 02, 2015

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!





காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா... அது நல்லாருக்குமா?

காந்தி ஜெயந்தி என்றதும்... எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு வந்தனர்.

காந்திஜியின் உதவியாளராக இருந்த திரு.கல்யாணம் 14 வருடங்களுக்கு முன்... ஒரு முறை தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்துக்கு வருமாறு சொல்லியிருந்தார். சில அரிய புகைப்படங்கள் காட்டுகிறேன் என்றார். போய்ப் பார்த்தேன். நான் சென்ற அந்த நேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட்டில் வசிக்கும் திரு.கல்யாணம், கீழே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளை விளக்குமாறு கொண்டு பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். சிரித்துக் கொண்டே அவரிடம் காரணம் கேட்டேன்... "காந்திஜி கட்டளை" என்றார்.

எல்லா வசதிகளும் இருந்தும், உடன் அதிகம் பேர் இருந்தும் தனக்கான வேலையை தான் பார்ப்பது, தன் இருக்குமிடத்தை தானே தூய்மைப் படுத்துவது... இப்படியாக அந்தப் பேச்சு சென்றது. 

(நானும் கூடத்தான். எனக்கான வேலைகளை நானே செய்து கொள்கிறேன். சமைப்பதும், துவைப்பதும், தூய்மைப் படுத்துவதும் என... [ அட.... இது வேறு வழியில்லாமல்... காலத்தின் கட்டாயம்ங்க... அதையெல்லாம் இப்படித்தான் காந்தி ரேஞ்சுக்கு நாங்களும்தான்னு விளம்பரப்படுத்திக்கணும்... இல்லைன்னா எந்தப் பய நம்ம மதிப்பான்? எல்லாத்துக்கும் ஒரு வெளம்பரம் தேவைப்படுது இல்ல..?!! ]

ஆக.. அப்படியாக... அந்த வகையில்... நாமும் காந்தி வழியில் நடக்கிறோம்; அதை இந்த காந்தி ஜெயந்தியில் ஊருக்கு நல்லது சொல்வோம்னும், உண்மை தெரிந்தது சொல்வோம்னும் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டு... ஒரு புத்தகம் குறித்த தகவலையும் சொல்லிவிடலாம் என்று தோன்றியதன் பேரில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். )

மயிலாப்பூரில் அமைந்த - வயதுக்கு மீறிய - நட்புகளில் ஒருவர் நாடகப்பணி அருணகிரி. ம.பொ.சி ரேஞ்சுக்கு வெளுத்த முறுக்கிய மீசையுடன் வருவார். ஒல்லியான உருவம். நாடகங்கள் பல எழுதியவர். சென்னை வானொலியில் வைத்து எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால்... சென்னை வானொலி நிலையத்தில் மாதம் ஐந்தாறு முறை சென்றபோதே பல பேருடைய அறிமுகம் கிடைத்தது எனலாம். நாடகக் கலைக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அருணகிரி ஐயாவுக்கு நாடகப்பணி அருணகிரி என்றே பெயரும் சேர்ந்து அமைந்துவிட்டது. நாடகம், திரைக்கலை, நாடகக் கலைக்காக பத்திரிகைகளை நடத்தியவர்.

ஒரு முறை "ஊருக்கு ஒரு மனிதர்" என்ற நாடகத்தின் அச்சுப் பிரதியை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது அடியேன் மஞ்சரி இதழாசிரியர் பணியில். 2005 ல் ! பத்து வருடங்கள் ஓடி விட்டன. இப்போதும் பசுமையாக நினைவில் உள்ள சம்பவம்.  இந்த நாடகத்தை 1998ல் எழுதி மேடை ஏற்றினாராம். அந்த நாடக நூலுக்கு அணிந்துரை எழுதித் தர வேண்டும் என்றார். அடடா.. சார். நான் முப்பது வயதைக் கடக்காத ஒரு சிறு இளைஞன். என்னிடம் போய்.... என்று இழுத்தேன். வற்புறுத்தி பிரதியைக் கொடுத்து விட்டு சொன்னார்... இந்த நாடகம் இளைஞர்களிடம் செல்ல வேண்டும். நீங்கள் தேசியம் தெய்வீகம் இரண்டிலும் ஆழமான பற்று கொண்டவர். மேலும் அணிந்துரை என்று யாரிடம் கொடுத்தாலும், ஓரிரு பக்கங்களுக்கு மேல் எழுதித் தரமாட்டார்கள். நீங்கள் இதனை முழுதாகப் படித்து, எனக்கு ஐந்தாறு பக்கம் வருவது போல்... பெரிதாக எழுதித் தரவேண்டும்... என்று அன்புக் கட்டளை  இட்டார்.

அந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தேன். காந்தியவாதியாக ஒருவர் எப்படி ஊரைத் திருத்துகிறார்; இளைஞர்கள் துணையுடன் ... என்ற வகையில் அமைந்த கதை. அதற்கு அடியேன் எழுதிய அணிந்துரையை  விருப்பமுள்ளவர்கள் படித்து அனுபவிக்கலாம். அவற்றின் ஒளிப்பட நகல் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix