சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், ஜூன் 08, 2015

வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?


ஆயிரம்தான் சால்ஜாப்பு சொன்னாலும்.... தமிழன் தமிழன் என்று பீற்றிக் கொண்டாலும்....

தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள்/ மக்களைப் போல் பேராசைக்காரர்களை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது. மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்த்துவிட பேராசை கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில்... தமிழ்நாட்டு ஆட்டோக்காரர்களைப் போல், குறிப்பாக சென்னை ஆட்டோக்காரர்களைப் போல் உச்சபட்ச தொகைக்கு பேசுபவர்களை இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. வாடிக்கையாளர்களை வாடிக்கையான ஏ.டி.எம்.மைப் போல் கருதும் கேவலம் இங்கே!

வில்லிவாக்கத்தில் இருந்து ஆட்டோவில் எழும்பூருக்குச் சென்றேன். வழக்கமாக ரூ.150 தான் என்று பேசியும், வீட்டு வாசலில் இருந்து ஏறியதால் ரூ.200ல் தொடங்கி, ரூ.180 பேரத்துக்கு வந்தார். கிளம்பும்போதே ஒப்புக்கு மீட்டரையும் போட்டுக் கொண்டார். கிளம்பும்போது சற்றே மழை பெய்தது. எழும்பூரில் நின்றபோது, மீட்டரில் ரூ.98.80ல் காட்டியது. எழும்பூரில் நின்றபோது, பின்னால் ஒரு கால்டாக்சி ஹார்ன் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொண்டிருந்தார். வேகவேகமாக இறங்க வேண்டிய நிலை. ஆட்டோவில் இருந்த ஒரு பையை கர்மசிரத்தையாக கீழே இறக்கி வைத்தார். ரூ.180 கொடுத்தேன். சார் நல்ல மழை. இப்படி பையை எல்லாம் வண்டியில் இருந்து யாரும் இறக்கி வைக்க மாட்டார்கள். இன்னும் ரூ. 20 கொடுங்க.. என்று மல்லுக்கு நின்றார். இன்னும் ரூ. 10ஆவது கொடுங்க என்றார். நானோ, மீட்டரை ஒரு எட்டு எட்டிப் பார்த்துவிட்டு... யப்பா... ரூ.180 கொடுத்திருக்கேன் சரியா இருக்கா பாரு.. என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.  இது போல் பல அனுபவம் இங்கே உண்டு.

இப்படி ஒரு நிலையை நான் வடக்கே பார்க்கவில்லை. அண்மையில் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்த யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார், பத்ரி ஆகிய சார்தாம் யாத்திரை, ஐந்து பிரயாகைகள், உத்தரகாசி, ரிஷிகேஷ், ஹரித்வார், நைமிசாரண்யம், காசி, கயா, புவனேஸ்வர், புரி என ஒரு நீண்ட 18 நாள் ஆன்மிக யாத்திரையை நண்பர்கள் குழுவுடன் மேற்கொண்டிருந்தேன்.

அன்று...  குழுவாக வெளியில் கிளம்பினோம். காசியில்!

கால பைரவரை தரிசித்து, காசி நாயகர் விஸ்வநாதரையும் தரிசித்து இரவு 9 மணி அளவில் அங்கிருந்து சங்கர மடம் இருந்த ஹனுமன் காட்-க்கு ஆட்டோ பேசினோம். ஒருவர் ரூ.150 என்றார். ஒருவர் இதில் 6 பேர் ஏறலாம். தலைக்கு ரூ. 20. ஆனால் நீங்கள் 6 பேர் வரவேண்டும். 5 பேர் ஏறினாலும், என்னால் ரூ.100  பெற முடியாது. 6 பேருக்கு உண்டான ரூ.120ஐத்தான் தரவேண்டும் என்றார்.
என்ன கணக்கோ... ஆனால், அவரின் இந்த டீல் பிடித்திருந்தது. 16 பேர் இருந்தோம். 3 ஆட்டோக்களில் சென்றோம். ஹனுமன் காட் என்று கேட்டு ஏறினாலும், ஓரிரு சந்து பொந்து கடந்து சங்கர மட வாசலில் இறங்கினோம். இந்த முட்டுச் சந்து, முடுக்குக்கெல்லாம் கொண்டு வந்து விட்டிருக்கிறேன். மேல அஞ்சு பத்து போட்டுக் கொடுங்கண்ணு ... ம்..ஹும். வாயே திறக்கவில்லை. கொடுத்த ரூ.120 ஐ வாங்கிக் கொண்டு மறு பேச்சில்லாமல் திரும்பிப் போனார்கள்.. மூவரும்!

அடுத்து....
சங்கடமோசன ஹனுமான் கோயில் செல்ல ஸ்டாண்ட்களில் இருந்த இரண்டு ஆட்டோக்களில் ஏறினோம். சங்கடமோசன் ஆலயம் சென்றுவிட்டு... ஆட்டோக்காரர் தானே சொல்லி சோழியம்மன் கோயிலுக்குச் சென்று இறக்கி விட்டு, நாங்கள் கும்பிட்டு வரும்வரை சில நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் எங்களை மீண்டும் சங்கர மடத்தின் வாசலில் இறக்கி விட்டார். பேசிய தொகைக்கு மேலும் கேட்பாரோ என்று நான் எதிர்பார்க்க... இந்தக் கோவில் அங்கிருந்து வரும் வழிதான். மேற்கொண்டு நீங்கள் எதுவும் தரவேண்டாம் என்று பேசிய தொகையை மட்டுமே பெற்றுக் கொண்டார்கள்.

கயாவில்...
எல்லோரும் கோயிலுக்குச் சென்று விட்டு வந்தோம். எனக்கு சற்றே காய்ச்சல் கண்டிருந்ததால்.... அறையில் நான் ஓய்வெடுத்தேன். மதியம் கர்மா செய்பவர்கள் அட்சய வடம் சென்றுவிட்டு சாப்பிட வந்துவிட்டார்கள். பிறகுதான் எனக்கு தெரிந்தது எல்லோரும் அட்சய வடம் சென்று வந்துவிட்டார்கள் என.

எனக்கோ அதனைப் பார்க்காமல் ஊருக்கு செல்லக் கூடாதென எண்ணம். சீதையின் சாபம் பெற்ற பல்குனி ஆற்றைப் பார்த்தோம். சாபம் பெற்ற பண்டிதர்கள்/பிராமணர்களைப் பார்த்தோம். ஆனால், சீதையின் ஆசியைப் பெற்ற அட்சய வடத்தைப் பார்க்காமல் போவதாவது... என்று கூறினேன். நண்பன் கௌதம் உடனே, சங்கர மடத்தில் இருந்த ஒருவரிடம் சொல்லி வாசலில் நின்ற ஆட்டோவில் என்னை மட்டும் தனியாக ஏற்றி விட்டார். ஆட்டோக்காரர் அட்சயவட இடத்துக்கு அழைத்துச் சென்று, படிகளில் ஏறி வழிகாட்டி, சில நிமிடங்கள் காத்திருந்து, என்னை மீண்டும் மடத்தில் இறக்கி விட்டார். மடத்தில் எவ்வளவு கொடுக்கச் சொன்னார்கள் என்று ஆட்டோக்காரர் கேட்டார். எண்பது என்றேன். நான் கொடுத்த ரூ.100ஐப் பெற்றுக் கொண்டு மறு பேச்சில்லாமல் ரூ.20 ஐ திருப்பிக் கொடுத்தார்.

இதே போன்ற ஆட்டோ அனுபவம் இலாஹாபாத் என்ற பிரயாகையிலும் அமைந்தது. எந்த இடத்திலும் நம்மூர்க்காரர்கள் போன்ற அடாவடித்தனத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.  ஆனால்.... தமிழ் தெரியாத வடநாட்டுக் காரர்கள் இங்கே ஆட்டோக்காரர்களிடம் தனியாக மாட்டிக் கொண்டால்... அவ்வளவுதான்!

இப்படி ஆட்டோ என்று மட்டும் இல்லை... பூ விற்பவராகட்டும், பிஸ்கட் விற்பவராகட்டும், கடை வைத்து டீ, காபி தருபவராகட்டும்... எல்லாவற்றிலும் சொல்லி வைத்தாற் போன்ற வணிக நேர்மை அவர்களிடம் இருந்ததைக் கண்டு என் கண்களில் பெருமித உணர்வு ~ ஆனந்தக் கண்ணீர்.

ரிஷிகேஷில்... திரிவேணி சங்கமப் பகுதிக்கு அருகே படித்துறையில் சில பெண்கள் ஒரு தொன்னையில் பூக்களை வைத்து, கங்கா மாதாவுக்கு ஆரத்தி செய்யுங்கள் என்று வரிசையாக அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். (இந்தச் சிறு கட்டுரைக்காக இடப்பட்டிருக்கும் படத்தில் - பூ விற்றுக் கொண்டிருப்பவர்). நம் ஊர்களில் கோயில்களுக்கு அருகே பிரசாத ஸ்டால், பூ, தேங்காய், ஊதுபத்தி விற்பவர்களைப் பார்த்து விட்ட எண்ணத்தில், அனேகமாக இது ரூ.20 இருக்கலாம் என்ற கணிப்பில், ஒரு பெண்மணியிடம் எவ்வளவு என்று கேட்டோம்.  ஐந்து ரூபாய் என்று அவர் சொன்னதைக் கேட்டு, ஆச்சரியப் பட்டோம். அப்படியே வந்திருந்த எல்லாரும் ஆரத்தி செய்யட்டும் என்ற எண்ணத்தில் 30 எண்ணம் வாங்கி, பூஜித்து கங்கையில் விட்டோம். இத்தனைக்கும் அந்த தொன்னையில் பூக்கள், சிறு பட்டி, நெய், திரி, ஒரு கற்பூரம், சாம்பிராணித் துண்டு எல்லாம் இருந்தது. உண்மையில், நம் ஊர்க்கார வியாபாரியாக இருந்திருந்தால், ரூ.25க்குக் குறையாமல் அதை தலையில் கட்டியிருப்பார்.

இதே போன்ற வணிக நேர்மையை ஹரித்வாரிலும், பத்ரியிலும், கங்கோத்ரியிலும் கண்டு வியந்தேன்.

இன்று காலை. குற்றாலம் பராசக்தி பள்ளியில் மருமான் அரவிந்தனைச் சேர்த்துவிட்டு... தாகத்தால் அருகில் இருந்த கடையில் என் ஃபேவரிட் சுதேசி பானம் பவன்டோ இருக்கிறதா என்று கேட்டேன்.  பாட்டிலில் இல்லை என்று சொல்லி, ஆப்பிள் பானம் appy fizz எடுத்துக் கொடுத்தார். அதன் விலை ரூ.15. இவர் கேட்டதோ ரூ.18. அதற்கான காரணம்... பிரிட்ஜில் வைத்து கூலாக தருவதாலாம்.

இன்னும் எத்தனை பஸ்-ஸ்டான்ட்களில் எம்.ஆர்.பி.யை காட்டிலும் ரூ.2 முதல் கூடுதலாக பிஸ்கட், குளிர்பானங்கள் உள்ளிட்ட இத்யாதிகள் இங்கே விற்கப் படுகின்றன. கேட்டால்... நகராட்சிக்கு கொடுக்கவேண்டும், வரி கட்ட வேண்டும், மாமூல் கொடுக்க வேண்டும். இன்னும் என்னவெல்லாம் சொல்லலாம் என புதிது புதிதாக கண்டுபிடித்தபடி இருப்பார்கள்....

ஆனால்...
இதே appy fizz நான் வாங்கிய உத்தரகாசி, தேவபிரயாகை, ருத்ரபிரயாகை, ஹரித்வார், யமுனோத்ரி, மானா கிராமம், குப்தகாசி, ரிஷிகேஷ் என எல்லா இடங்களிலும் ரூ.15க்கே கொடுத்தார்கள். எங்கேயும் இதனை ஏ டண்டா ஹை என்று சொல்லி கூடுதல் காசு கேட்க யாரும் முயலவில்லை. 5 ரூபாய் பார்லி ஜி பிஸ்கட்டை அதே 5 ரூபாய்க்கே கொடுத்தார்கள். நிம்பு பானி - எலுமிச்சை நீர் சர்பத் ரூ.10க்கே கொடுத்தார்கள். டீ ரூ.10 தான். கரும்புச் சாறு ரூ.10ம் ரூ.15ம்தான். சுட்டுத் தந்த மக்காச் சோளம் பத்து ரூபாய்தான்... அதுவும் யமுனோத்ரி கங்கோத்ரி போகும் வழியிலும் நடைபாதையிலும்! இத்தனைக்கும் அவர்கள் இவற்றை எல்லாம் கழுதையில் பொதியாகச் சுமந்து கொண்டு வரவேண்டும். வண்டி வசதி ஏதும் கிடையாது. இல்லாவிடில் தங்கள் முதுகிலோ, டோலி சுமப்பவர் மூலமோதான் இவற்றை அவர்கள் மலை உச்சிக்குக் கொண்டு சென்றாக வேண்டும். அவ்வளவு சிரமப் பட்டாலும், அவற்றில் அதிக லாபத்தைப் பார்க்க அவர்கள் முயலவில்லை. இந்த சுற்றுலா பயண சீசனும்கூட, 6 மாதம்தான். அடுத்த 6 மாதம் அவர்கள் குளிரில் நடுங்கியபடி வீட்டில் முடங்கிக் கிடந்தாக வேண்டும். இந்த 6 மாசம் சம்பாதிப்பதே, அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டில் அடுப்பு எரிக்க ... பயன்பட்டாக வேண்டும்.

யோசித்த போது, அவர்களின் நேர்மை நம் மனத்தில் தைத்தது என்பதை விட, எங்கிருந்தெல்லாமோ இந்த இடத்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு உதவும் விதமாகவே அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்வது தெரிந்தது. மானா கிராமத்தை ஒட்டி ஓர் இடத்தில், சரஸ்வதி நதி கோயிலுக்கு வழி கேட்டபோது, ஒரு மூதாட்டி... சொன்னார்... உங்களுக்கு வழி சொல்வதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். இது எங்கள் பாக்கியம். எங்கள் கிராமத்துக்கு வந்ததற்கு நன்றி... என்று பொக்கை வாய் திறந்து பல்லும் சொல்லும் போன ஹிந்தியில் அவர் சொன்ன அந்த விதம்.... உண்மையில் அந்த சரஸ்வதி அப்போது என் கண்களில்தான் பிரவாகமெடுத்திருந்தாள்.

புவனேஸ்வர் கடந்து பூரியில்... கோயில் எப்போது திறக்கும். தேரோட்டமாயிற்றே. ஸ்வாமி புறப்பாடு எப்போது...? என்றெல்லாம் நம் உணர்வில் சிலரிடம் விசாரிக்க....

மகாபிரபு 7 மணிக்கு எழுந்திருப்பார். மகாபிரபு 7.30க்கு ஸ்நானம் செய்வார். மகாபிரபு 8 மணிக்கு மண்டபம் வருவார்...நீங்கள் டிக்கெட் வாங்கவில்லை எனில் மகாபிரபுவைப் பார்க்க முடியாது.....

யார் அந்த மகாபிரபு...? நம் மனத்தில் தோன்றும் கேள்விக்கான விடை... யாரை நாம் புறப்பாடு கண்டருள்வார் என்றும், கோயில் என்றும் நம்மை விட்டு அன்னியராய் அது ஏதோ ஒன்று என்ற ரீதியில் அன்னியப் படுத்திக் கொண்டிருக்கிறோமோ.... அந்த ஜகந்நாதரைத்தான்!
ஜகந்நாதர் அவர்களுக்கு மகாபிரபு. எஜமானன். அவரே எல்லாவற்றையும் செய்கிறார். நாம் எதையும் செய்விக்கவில்லை.

இந்த உணர்வு தான்.... ஸ்ரீவல்லபாசார்யர் அருளிய புஷ்டி மார்க்கத்தின் வேர். இந்த அடிப்படை உணர்வுதான் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
இந்த உணர்வு எல்லாம் பக்தர்களிடமும் வணிகர்களிடமும் கண்டேனே ஒழிய, அங்கிருந்த பண்டாக்களிடமோ, பண்டிட்களிடமோ, பிராமணர்களிடமோ.... ம்ஹும். காணவில்லை.

நேர்மையற்ற தன்மை அங்கிருந்த வேத பண்டிட்களிடம் இருந்தது. சில இடங்களில் இந்த பண்டிட்கள் என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சோதிக்கும்படியாய்... சூக்தாதிகளும், ருத்ர சமகங்களும் சொல்லி அவர்களின் அடிப்படையை ஒரு பார்வை பார்க்கும்படியாய் ஆனது.  அள்ளிக் கொடுத்தாலும் தகுதி அறிந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.  சொல்லி வைத்தாற்போல், யமுனோத்ரியிலும், பத்ரியிலும், கங்கோத்ரியிலும், கயாவிலும், புவனேஸ்வர் லிங்கராஜா கோயிலிலும்..... அடடா!

வந்ததும் கையில் பூவைக் கொடுத்து, சங்கல்பம் சொல்லி, பேரைச் சொல்லுங்க என்று கூறி.... ஒரு கட்டத்தில் நிறுத்தி.... ம் இப்போது சொல்லுங்க... எவ்வளவு பணம்...? குறைந்தது 551 என்று கூறி....  புவனேஸ்வர் லிங்கராஜா கோயிலில் அந்த பண்டாக்கள் கேட்கும்போது....

காசி விஸ்வநாதர் கோயிலில், மாலை நேர சப்த ரிஷி பூஜை ஆகிக் கொண்டிருக்க.... கிடைக்கும் சிறிய இடைவெளியில் ஜஸ்ட் ஒரு நிமிசம் எட்டிப் பார்த்து சுவாமியை தரிசிக்க.... ஆளுக்கு தலா ரூ. நூறு பேரம் பேசிய ஒரு புரோகிதர்...

கலர் கலராக கயிறு வைத்துக் கொண்டு, ஏதோ மந்திரம் முணுமுணுத்து, கையில் கட்டி விட்டு, ரூ.10 போடுங்க என்று சொல்லும் சில புரோகிதர்கள்....  (நைமிசாரண்யத்தில் இந்தப் போக்கில் இருந்து மாறுபட்ட புஜாரிகளைப் பார்த்து சந்தோஷப் பட்டோம் என்றாலும்.... ) - தினுசு தினுசாகப் பார்த்தாயிற்று!

இப்போது...
எனக்கு இதன் சூட்சுமம் நன்றாகப் புரிந்தது. வெகுஜனங்களிடமும், அங்குள்ள வர்த்தகர்களிடமும் இருக்கும் அந்த உணர்வு.... இழையோடிய ஆன்மிக உணர்வு. கங்கா மையா கீ .. ஜெய் என்று கோஷம் எழுப்பும்போதும், ஜெய் பத்ரி விஷால் கீ, யமுனா மையா கீ, போலோ கேதார் பகவான் கீ... எனும் போதும்,  அவர்கள் எவருமே வியாபாரத்தை வெறும் வியாபாரமாகச் செய்யவில்லை. உள்ளுள் கரைந்த ஆன்மிக உணர்வுடன், அதே ஆன்மிக உணர்வில் யாத்திரை வரும் சக ஆன்மிகருக்கு உதவி புரியும் விதமாய் நடந்து கொள்கிறார்கள்.
இந்த ஆன்ம உணர்வுதான் அடுத்த 6 மாசத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையைக் கூட அவர்களிடம் இருந்து அகற்றி விடுகிறது.

கொள்ளை லாபம் பார்க்கும் லாட்ஜ்-களை நாங்கள் பார்க்கவில்லை. பஸ்ஸில் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். மலைப் பாதை. இரவு 8 மணி. மேற் கொண்டு மலைப் பாதையில் போவது பாதுகாப்பற்றது என்று ஓட்டுநர் உணர்கிற போது,  ஓர் இடத்தில் நிறுத்துகிறார். அங்கிருக்கும் தங்கும் விடுதியில் அறைகளை வாடகைக்கு எடுக்கிறோம். நம் ஊர்களை யோசித்துப் பார்க்கும் போது, வாடகை வெகு சொற்பம். ஒரு படுக்கைக்கு ரூ.125. அல்லது சில இடங்களில் ரூ.150 என்று வருமாறு.... வாடகை. 4 பெட் போட்ட அறையில் ரூ. 600 வாடகைக்கு இரவு தங்கிக் கொள்ளலாம். கட்டில், மெத்தை, குளிருக்கு இதமாய் கம்பளி, கனத்த போர்வை... தேவைப்பட்டால் வென்னீர்.... இத்யாதிகள்.
உண்மையில் மலைப்பாகத்தான் உள்ளது.

உ.பி., பிகாரில் சாதாரண மனிதர்களின் கதை வேறென்றாலும், அவர்கள் அடாவடி செய்பவர்கள், ரயில்களில் அவர்களின் நடத்தை வேறு மாதிரி என்றாலும், ஆன்மிக உணர்வைப் பொறுத்தவரை நேர்மையாகவே இருக்கிறார்கள்.

இப்போது தமிழகத்தை யோசித்துப் பார்க்கிறேன்.

ஆன்மிகம் தழைத்த பூமி இதுவே. என்னதான் ராமனும் கிருஷ்ணனும் வடக்கே அயோத்யாவும் மதுராவும் என்று கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும் த்வைதமும் தோன்றியது தெற்கேதான். சங்கரரும் ராமானுஜரும் தமிழ் மண்ணில் தோன்றியவர்கள். அவர்களின் உபதேசங்களே பாரத தேசத்தை முழுதாக ஆண்டு கொண்டிருக்கிறது. ஆழ்வார்களின் பாசுரங்கள் வடக்கே நைமிசாரண்யம், பிரயாகை உள்ளிட்ட வடநாட்டு திவ்ய தேசங்களில் ஹிந்தியில் எழுதப்பட்டு, தமிழ் உச்சரிப்புடன் பாடப்படுகிறது. அதன் அர்த்தங்களை கோயில்களில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அப்படியாக தமிழும் தமிழனும் பாரதத்தின் ஆன்மிக வேரைக் கொண்டிருக்கும் போது.... தமிழகம் எப்படி இருந்திருக்க வேண்டும்..???

மூவேந்தர்கள் கோலோச்சிய தமிழகம். அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்.... என்று ஆன்மிகப் பயணத்தை ஊக்குவித்து, வசதிகள் செய்து கொடுத்த மன்னர்கள். ஏன்... பல்லவனும் சாளுக்கியனும்கூட அன்ன சத்திரத்தையும், ஆலயங்களையும் போஷித்தார்கள். யாத்ரீகருக்கு மன்னர்கள் செய்த மரியாதை தனி.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் கட்டடக் கலைக்கும் பிரமாண்டத்துக்கும் ஏணி வைத்தாலும் வடக்கு எட்டாதுதான்! ஆனால்... யாத்ரீகர்களுக்கு வசதி செய்து  கொடுத்து, இதே ஆன்ம உணர்வுடன் பார்ப்பதில்....? ம்ஹும்! நாம் ஏணி வைத்தாலும் அவர்களின் உணர்வுக்கு எட்டவே மாட்டோம்.

சத்திரங்கள் வைத்து போஷித்த இடங்கள் எல்லாம் இன்று சுவடு தெரியாமல் அழிந்து போய் விட்டன.

இன்று..? வடக்கேயிருந்து ராமேஸ்வரத்துக்கோ அல்லது திருவரங்கம், மதுரை, பழனி என ஆலயங்களுக்கோ வருபவர்கள்... தங்குவதற்கு ஏற்ற அன்ன சத்திரங்கள் கிடையவே கிடையாது.

நாம் வடக்கே சென்றால், ரூ. 5க்கு ஒரு ரொட்டி கிடைக்கிறது. 4 ரொட்டி, ஒரு தயிர் சாப்பிட்டாலே வயிறு நிறைகிறது. ஆனால், இங்கே 2 இட்லி கூட ரூ.25க்கு குறைந்து இல்லை.

நாத்திகம் பேசி நாட்டை நாறடித்தவர்களால்... இன்று தமிழகம் தலை தொங்கித்தான் கிடக்கிறது. கோயில்கள் - வணிக கேந்திரங்கள் ஆகிவிட்டன. சாமியைப் பார்க்க காசு. நடக்க காசு. செருப்பைப் போட்டால் காசு. பூவெல்லாம் வாங்கிப் போய் சாமிக்குப் போடவே முடியாது. அது பணக்காரனுக்கான அடையாளம். இங்குள்ள சுவாமிகள் எல்லாம் ஏழைகளிடம் இருந்து அன்னியப் பட்டு விட்டார்கள். ஆலயங்கள் வகை தொகை இல்லாமல் சாதி பேதமற்று அனைவருக்கும் பொது என்று ஆகிவிட்டன. ஆனால், வர்க்க பேதம் ஒன்றிலேயே அவை தற்போது நிலை பெற்று விட்டன. காசேதான் கடவுளடா என்று பாடிப் பாடி, காசில்லை எனில் கடவுள் இல்லை என்ற வர்த்தகத்தை பெரிதாக வளர்த்தாயிற்று.

எப்போது பள்ளிகளில் ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் ஒழுக்க நெறியும் என நல்போதனைகளை விட்டுவிட்டோமோ.... அப்போது முதல் ஒழுக்க நெறியை ஏளனப் படுத்தும் போக்கு பிஞ்சு நெஞ்சிலேயே நஞ்சாய் முளை விட்டாயிற்று. எல்லாவற்றிலும் தகிடுதத்தம். எல்லாரிடமும் நேர்மையற்ற தன்மை. எல்லாரிடத்தும் ஒழுக்கக்கேடு. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாய் வயிற்றுப் பிழைப்புக்கு நடிக்கும் மக்கள். காசுக்கு ஆலாய்ப் பறக்கும் போக்கு. ஒழுக்கம் விழுப்பம் தரலான் என வெறுமனே பாடம் படித்து விளக்கிக் கொண்டிக்கும் மனப்பாங்கு....

எப்படி இருந்த தமிழகம். ... இப்படி ஆகிவிட்டதே என்ற துர்பாக்கிய நிலைதான்!

இப்போதெல்லாம் எனக்கு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பொய்யாக வெற்று வார்த்தை சொல்லி பீற்றிக் கொண்டிருக்கத் தோன்றவில்லை.

நம் நெல்லை பரணிக்கரை பத்தமடையில் பிறந்து கங்கைக் கரை ரிஷிகேஷத்தில் ஐக்கியமான சுவாமி  சிவானந்தரின் வழியில்....

ரிஷிகேஷத்தையும் ஹரித்வாரையுமே என் மனம் இப்போது நாடுகிறது ! 

சொன்னது ஒன்று; புரிந்து கொண்டதோ வேறு: சம்ஸ்கிருத சிலேடை


பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்  பாடத்திட்டம் இல்லாமலே!  போன வருஷத்து அனுபவப் பாடமாம்! பள்ளி திறந்து மாதம் மூன்றாகி விட்டது; ஆனால் பாடத் திட்டம் வந்த பாடில்லை! அப்போது சொன்னார்… “நம்ம ஸ்கூலுக்கு சில ‘பஸ்’ தான் வருதேயொழிய, இன்னும் ‘சிலபஸ்’ வந்தபாடில்லை!”
அட! இந்த மாதிரி நாமும் பேசும்போது உபயோகித்தால் என்ன? என்ற ஆர்வம் அப்போது துளிர் விட்டது. அதன் பிறகு இருபொருள் தரும் சொல்லை அகராதியில் தேடத் தொடங்கியது மாணவ உள்ளம்.
இச் சொல் பயன்பாட்டில் சில நேரம் விபரீதம் தந்தாலும் பல நேரங்களில் சுகமாகத்தான் இருந்தது… காரணம் பலரும் பொருள் தெரிந்து ரசித்ததால். நம்மால் நாலுபேரை சந்தோஷப்படுத்த முடிகிறதே என்ற எண்ணம்தான்!
ஒரு நாள் இரவு பக்கத்து வீட்டு நண்பரிடம் “நாளை சீக்கிரம் எழுந்து நெல்லை ஜங்ஷனுக்குப்போகணும்…” என்று சொல்லி வைத்தேன். மறுநாள் காலை… வழக்கம் போல் சோம்பல். வியப்போடு பார்த்த நண்பர் கேட்டார்… “ஏ என்ன? போலயா?” கேள்வி கேட்ட வேகத்துக்கு ஈடு கொடுத்து “போல” என்றேன். விறுவிறுவென என் அப்பாவிடம் சென்ற நண்பர் சொன்னார்… “மாமா, உங்க பையன் என்னை ‘போல’ ண்ணு  சொல்லிட்டான்…”  ‘போகல’ என்ற சொல்லில் ‘க’ கண்ணாமூச்சி காட்டியதால் எழுந்த வினை இது!
சொலவடையா? சிலேடையா? எப்படி இருந்தால் என்ன? பயன்பாட்டில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்! என்ன பேசுபவருக்கும்  கேட்பவருக்கும் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்! கி.வா.ஜ வின் சிலேடைகளைக் கேட்டு இன்புறாத தமிழர் உள்ளமும் உண்டோ?
தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த உத்தி இருந்து வருகிறது. நம் இன்னொரு தொன்மையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் சிலேடைக்கவிகள் ஏராளம். அவற்றில் பெரும்பாலும் உவமையாகவே கையாளப்பட்டிருக்கும். தமிழில் கடைசி முடிப்பு, இரண்டுக்கும் பொதுவாக அமைந்து அழகு காட்டுவது போல், பெரும்பாலும் சம்ஸ்க்ருதத்தில் பாடலின் முதல் வரியிலேயே சிலேடை இன்பம் வெளிப்படும். காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை எவ்வளவு தூரம் நாம் அசை போட்டிருப்போம்…? ‘எள்ளுக்கும் பாம்புக்கும்’ காட்டும் ‘ஆடிக்குடத்தடையும்’ பாடல் நம் காதுகளிலே ரீங்காரம் இடுகிறதே!
ஒரு சம்ஸ்க்ருதக் கவி…
ஜீவனக்ரஹணே நம்ரா: க்ருஹீத்வா புநருந்நதா:/
கிம் கனிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: கடீயந்த்ரஸ்ய துர்ஜனா://
கடீ யந்த்ரம்  நீர் இறைக்கும் எந்திரம்  ஏற்றச்சால். துர்ஜனா  தீயோர். சந்தர்ப்பவாதி என்றும் கொள்ளலாம். இவ்விரண்டில் எந்திரம் தீயவனுக்கு இளையவனா? மூத்தவனா? என்று கேள்வி கேட்டு, இரண்டுக்குமான ஒப்புமையை இரு பொருள் தரும் வகையில் கவி கையாண்டிருக்கிறார். ‘ஜீவன க்ரஹணே’ என்றதில் ‘ஜீவனம்’ என்று, தண்ணீருக்கு ஒரு பெயர் உண்டு. ஜீவிகை என்றதான உயிர் வாழ்தலுக்கும் ஒரு பெயர் உண்டு. ஏற்றச் சாலில் தண்ணீர் மொண்டு கொள்வதற்காக அது கிணற்றில் இறங்கும்போது, தலை தாழ்த்தியிருக்கும். நீரை மொண்டு கொள்ளும் வரையில்தான் தலை வணங்கும்; மொண்டு கொண்ட பிறகு உடனே தலை தூக்கும். அதுபோல் தீயோர்(சுயநலவாதிகள்) பயன் அடையும் வரையில்தான் மற்றோர் காலில் விழுந்து கிடப்பர். பிறகு செருக்கோடு தலை நிமிர்ந்து அலைவர்.
இதுபோல் கத்திக்கும் கருமிக்குமான சிலேடை சுவையானது; உள்ளத்தை ஊடுருவுவதும் கூட!
த்ருடதர நிபத்தமுஷ்டே: கோச நிஷண்ணஸ்ய ஸஹஜமலிநஸ்ய/
க்ருபணஸ்ய க்ருபாணஸ்ய ச கேவலமாகாரதோ பேத://
க்ருபணன்  கருமி; க்ருபாணம்  கத்தி. இரண்டுக்கும் உச்சரிப்பில் ஒரு ‘ஆ’காரம்தான் வேற்றுமையே தவிர இரண்டின் சுபாவமும் ஒன்றுதான்! இவ்விரண்டின் சுபாவத்தை மூன்று விஷயங்கள் ஒற்றுமைப்படுத்தி, சிலேடை இன்பம் தருகிறது. ‘த்ருடதர நிபத்தமுஷ்டே’  கத்தியைக் கையில் பிடிக்க, நன்றாக முஷ்டி பிடித்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். கருமியும் அப்படியே! எங்கே கை திறந்தால் காசு விழுந்து விடுமோ என்று அஞ்சி கையை இறுக்கிப் பிடித்திருப்பான். ‘கோச நிஷண்ணஸ்ய’  கத்தி உறையையும் பொக்கிஷத்தையும் ‘கோசம்’ என்பர். கத்தி அதன் உறையில் தங்கும். கருமி எப்போதும் பொக்கிஷத்தைக் காவல் காத்து, பூட்டைப் பற்றியவாறு தொங்கிக் கொண்டு கிடப்பான். ‘ஸஹஜ மலிநஸ்ய’  கத்தி, இரும்பால் செய்யப்படுவதால் இயற்கையாகவே கருப்பாக இருக்கும்; அழுக்கடைந்து துருப்பிடித்து இருக்கும். கருமியோ வெள்ளைத் துணி அழுக்காகும்; அதை சலவைக்குக் கொடுத்தால் காசு செலவாகுமே என்று அஞ்சி அழுக்குத் துணியையே அணிந்திருப்பான். ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாமல் மலினனாகவே இருப்பான். அதனால் இவ்விரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ‘கேவலம் ஆகாரதோ பேத:’ என்றபடி ‘ஆ’கார சப்தத்தில் மட்டுமே வேற்றுமை என்பதை உணரலாம்.
இப்படி ஒரு பொருளுக்கும் மனிதனின் குணத்துக்கும் ஏற்ப ஒப்பிட்டு சிலேடை இன்பத்தைத் தருவது கவிகளுக்குக் கைவந்த கலையே!
கண்ணனைப் பாடிய கவிகள், எத்தனையோ சொல்லின்பத்தையும் பக்தி இன்பத்தையும் தந்திருக்கிறார்கள். கண்ணனின் குறும்புகளை தம் கவித்திறனால் அழகுற வெளிப்படுத்திய நம் பாரதியைப் போல், பிற இந்திய மொழிகளிலும் இச்சுவை உண்டு. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில்,  ‘பின்னலைப் பின்னின்று இழுப்பான், தலை பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்…’ என்று கோபியருடன் கண்ணன் செய்த குழந்தைத் தனக் குறும்புகளை பாரதி வெளிப்படுத்தியது போல், சம்ஸ்க்ருதக் கவிஞரும் இதைப் பாடியிருக்கிறார். அதிலே சிலேடை உண்டு; கண்ணனின் வார்த்தை சமத்காரமும் உண்டு.
அம்ஸே ஸலீலமதிரோப்ய சுகம் ஸ்வஹஸ்தாத்
கோப்யா பயாகுல த்ருச: குதுகீ முகுந்த:/
அம்ஸம்கதம் சுகமிஹா பநயேதி வாசம்
தஸ்யா நசம்ய ச ததம் சுகமாசகர்ஷ//
கண்ணனின் லீலா விநோதம் இந்தப் பாடலில் அனுபவிக்கப் படுகிறது. கண்ணன் ஒரு கோபியின் தோளில் விளையாட்டாக ஒரு கிளியை ஏறவிட்டான். திடீரென ஏதோ ஒன்று தோளில் தட்டுப்பட, பயந்து போன கோபி கண்ணனிடம் சொன்னாள்… “ஹே க்ருஷ்ணா, அம்ஸம் கதம் சுகம் அபநய…” என்று! அம்ஸம்  தோளை, கதம்  அடைந்திருக்கும், சுகம்  கிளியை, அபநய  அப்புறப்படுத்து… அதாவது, “கண்ணா! என் தோளின் மேல் ஏறியுள்ள இக் கிளியை அகற்று” என்ற பொருளில் சொன்னாள்.
ஆனால் அதை அப்படியே கேட்டுச் செய்தால் கண்ணனுக்கு என்ன சிறப்பு? கண்ணன் குறும்பு எப்படி வெளிப்படும்? கோபி சொன்ன வார்த்தைக்கு சிலேடையாகப் பொருள் கொண்டு, கண்ணன் ஒரு குறும்பைச் செய்கிறான்…
கோபி சொன்ன ‘அம்ஸம் கதம் சுகம் அபநய’  என்பதையே, ‘அம் ஸங்கதம் சுகம் அபநய’ என்று ஆக்கிக் கொண்டான் கண்ணன். அம் ஸங்கதம்  அம் என்ற எழுத்தோடே சேர்ந்த; சுகம் அபநய  சுகத்தைத் தள்ளு… அதாவது, அம் என்பதோடு சேர்ந்த சுகம்  அம்சுகம்! அதற்கு ‘ஆடை’ என்று பொருள்! இப்படிப் பொருள் கொண்டு, அம் என்ற சுகத்தோடு அம்சுகத்தைத் தள்ளு என்று பொருள் கொண்டு, கோபியின் தோளின் மேலேறியிருக்கும் மேலாடையைப் பிடித்திழுத்தான்… பிறகு “கோபி நீ சொன்னபடியேதான் நான் செய்தேன்…” என்று கள்ளச் சிரிப்பும் சிரித்தான்!
கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம்
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix