சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, ஜூலை 26, 2014

பேய்ப் புராணம்





 
வேப்ப மர உச்சியில் நின்று
பேயொன்னு ஆடுதுன்னு...
விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க...
பட்டுக்கோட்டையார் அவ்வப்போது மனசுக்குள் பாட்டு படிச்சாலும்... ம்ஹும்... சரியா அந்த நேரத்துக்கு இதயத் துடிப்புதான் அதிகமாகுமே தவிர... புத்தி வேலை செய்யாது!
இது எனது சிறுவயது அனுபவம்...

அப்போது வயது 10,11 இருக்கலாம். தென்காசியில் குலசேகரநாதர் கோவில் அருகில் உள்ள விண்ணகரப் பெருமாள் கோயிலில்
புரட்டாசி சனிக்கிழமை பூஜை, கருடவாகன சேவை முடித்து, இரவு 12 மணி அளவில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவிலுள்ள கீழப்புலியூர் வீட்டுக்கு சைக்கிளில் தனியாக வருவேன். கையில் பெருமாள் பிரசாதமாக பூமாலைகள், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சகிதம் சைக்கிளில் மாட்டிக் கொண்டு வருவேன். கீழப்புலியூர் ரயில் நிலையம் கடந்து, சாலை முனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சற்று முன்னர் இருக்கும் இந்தச் சிறிய பாலம் கடக்கும்போது தான் கதிகலக்கும்...
காரணம், அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் நாய், அல்லது கழுதை இந்தப் பாலத்தின் அடியில் அடிபட்டு, நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கும்.
அதற்கு ஒரு கதை கட்டிவிட்டார்கள் சிலர். இந்தப் பாலத்தின் அருகில் வயக்காட்டுக்குள் ஒரு சமாதி. அதிலிருந்து பேய் ஒன்று இப்படிச் செய்கிறது என்று!
கிராமத்துக் கதைகளுக்கு கட்டுப்பாடா இருக்கிறது..?!
கட்டற்ற கதைக் களஞ்சியங்களாயிற்றே!~
ஒரு சனிக்கிழமை... தெரு விளக்குகள் எதுவும் இல்லை. அப்போதே கிலி பிடித்துக் கொண்டது. துணைக்கு யாரும் இல்லை! தனியனாக சைக்கிளில் நள்ளிரவு 12.30க்கு மிதித்துக் கொண்டு வந்தேன்... பேய் இருக்குமோ..? அது எப்படி வரும்? எந்த உருவில் வரும்..? நம்மை என்ன செய்யும்?! எல்லாம் யோசித்து யோசித்து வந்தபோது... இரும்பையோ செருப்பையோ வைத்திருந்தால் பேய் ஒண்ணும் செய்யாது என்று ஒரு பரிகாரமும் சொல்லியிருக்கிறார்களே! அப்படி என்றால் ஒரு இரும்புக் கம்பியை கையில் வைத்துக் கொள்ளலாமா? எண்ண அலைகளுடன்... சைக்கிளை படுவேகமாக மிதித்து... துரத்துதுரத்து என்று துரத்தி... சரியாக இந்தச் சாலை திருப்பத்தில் வந்தபோது சைக்கிள் செயின் கழன்று கொள்ள... அவ்வளவுதான்.. இதயத் துடிப்பின் வேகத்தை எண்ணுவதற்கு எந்தக் கருவியும் உலகில் இல்லை!
சைக்கிளின் ஹாண்ட்பாரைப் பிடித்துக் கொண்டு, இந்த இரும்பைத் தொட்டுக் கொண்டிருந்தால்... பேய் ஒண்ணும் செய்யாதுல்ல... என்ற மன சமாதானம்.. இருந்தாலும் கேட்கவில்லை! சைக்கிளில் இருந்து இறங்கி... ஓட்டமும் நடையுமாக தள்ளிக்கொண்டு... பிள்ளையார் கோவிலைக் கடந்து.. ஒரு தெரு விளக்கு வெளிச்சத்தில் நின்றபோதுதான்.. இதயத்துடிப்பின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டது... ஆனாலும் பேயும் வரவில்லை, பிசாசும் வரவில்லை! பயம்தான் மிஞ்சியது!
அந்த ஒரு நாள் பயத்தின் உச்ச அனுபவம்... அதன் பின்னர் காணாமல் போனதுதான் ஆச்சரியம்! ஏனென்றால், இனிமேல் அதற்கு மேல் பயப்பட வேறு எதுவுமில்லை... அந்தப் பேயே ஒன்றும் இல்லாமல் போச்சே! அப்புறம் வேறு பேயென்ன பிசாசென்ன? என்ற எண்ணம்தான்!
பதின்ம வயது கடந்து 4 வருட மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்) பணியில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி, இராப் பகல் பாராமல் தெருக்களில் அர்த்த ராத்திரிகளில் சுற்றி... ம்ஹும்... பேயுமில்லை பயமுமில்லை!!!
இந்த ஊருக்கு எப்போதாவது செல்வதுண்டு. தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் அழகான இயற்கை வெளி வழி! வயல் சூழ்ந்த பகுதி! நீர் சலசலத்து ஓடும் சிற்றாற்றின் கிளைக் கால்வாய்கள் அழகு! மணிரத்தினத்தின் ரோஜா படத்திலும், புதுநெல்லு புதுநாத்து படத்திலும் இன்னும் சில திரைப்படங்களிலும் அள்ளிப் புகுந்துகொண்ட அழகு இடம்! என் இளமைக் கால ரசனை மனதில் வெளிப்பட்டுக் கிளம்பிய கவிதைகளின் கருவாய் அமைந்த அழகு பூமி!
புலிக்குட்டி விநாயகர் என்ற பெயரோடு அமைந்த பிள்ளையார்! அந்தத் தெருவில் இருந்த இந்த வீடு! எல்லாம் இப்போதும் அடிக்கடி கனவில் வருவதுண்டு. இனம்புரியாமல் நானும் எழுந்து அமர்ந்து அசை போடுவதுண்டு. சின்னஞ்சிறு மனதில் ஆழப் பதிந்த காட்சிகளாயிற்றே!
இன்று அந்த வீடு... பாழ் பட்டு பூட்டப்பட்டுக் கிடக்கிறது. 5 வீடுகளை அடுத்து நான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்ட அந்த வீடு.. பாட்டு மாமி என்று நாங்கள் அன்போடு அழைக்கும் அந்த லட்சுமி மாமி இருந்த வீடு.. இப்போது மதிமுக கொடிக் கம்பத்துடன் கட்சி அலுவலகமாக இருக்கிறது...
தெருவின் கடைசியில் உள்ள தோட்டம்... பச்சைப் பசேல் என விளையும் கீரை! நாலணாவும் எட்டணாவும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குக் காலையில் சென்றால்... ஒரு அம்மா பிறையாய் வளைந்த கீரையறுப்பு அரிவாளால் அழகாகக் கொத்துக் கொத்தாக கீரையை லாகவமாகப் பிடித்து அறுத்துக் கொடுப்பார்.. அதன் சுவை... இன்றுவரை கிட்டவில்லை! ஏற்றம் இறைக்கும் அழகைக் கண்டு ரசித்திருக்கிறேன். பம்புசெட் புகுந்திராத தோட்டம். கிணற்றுக்கு உள்ளே அது புகுவதும், காளைகள் இரண்டு இழுப்பதும், நீரை மொண்டு கொண்டு வெளியே ஊற்றி அது மீண்டும் நீர் தேடித் தாழ்வதும்... எல்லாம் இப்போதும் நெஞ்சில் இழையோடுகிறது...
பழைமை நினைவுகளினூடே அமைந்த இந்த முறைப் பயணம்... நினைவில் நின்ற ஒன்றுதான்!
(5 photos)

வெள்ளி, ஜூலை 25, 2014

நம் வழக்குரை காதை!


பீலா மன்னா புலம்புவது கேளேன்
நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்ப
புல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்ப
வாயிலோர் நற்சொல் வருதலும் விலக்க
பூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் அறிவை ஆழியில் மடித்தனை....
(இது நம் - வழக்குரை காதை)

அக்ஞாத வாசம் அல்லது தலைமறை வாழ்க்கை!


















முகநூலில் என் (ஃபோட்டோ) படங்களைப் போடுவதில் நண்பர் சந்திரசேகரனுக்கு விருப்பம் இல்லை. வெளிப்படையாகவே கருத்துக் கூறியிருந்தார்....
என் புகைப்படத்துக்கு அவர் இட்ட கருத்துகள்...
***
Chandra Sekaran முகம் காட்டாதிருப்பதே நல்லது என்று கருதுகிறேன். ந்மக்கு நெருக்கமானவர்கள் நேரில் பார்க்கப் போகிறார்கள். இங்கே போடும் கருத்துகளுக்காக இணைப்பில் சேருபவர்களுக்கு நம்முடைய முகத்தைப் பற்றி என்ன வேண்டியிருக்கிறது?

Senkottai Sriram-> Chandra Sekaran-> இதை நான், எடிட் செய்யும் பத்திரிகையில் கொள்கையாக வைத்திருந்தேன். நான் எடிட் செய்யும் பத்திரிகையில் என் புகைப்படத்தை இதுவரை போட்டுக் கொண்டதில்லை. இது முக நூல் என்பதால் மூஞ்சி காட்டினேன்!

Chandra Sekaran சுய புகைப்படம் போடுவதை நிறுத்தறதுதான் எப்பவும் நல்லது. எல்லோருக்கும். பல சிக்கல்களை தவிர்க்கலாம். நம்மை பற்றி பிறர் ஒரு அனுமானமாகவே இருப்பார்கள்.

Senkottai Sriram Chandra Sekaran உங்கள் கருத்தை ஏற்கிறேன்... எப்போது வேண்டுமானும் பொதுவெளியில் திட்டித் தீர்ப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். போகட்டும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்... புகைப்படம் போடுவதை!
***
- இ
ப்படி அவருக்கு வாக்குறுதி கொடுத்தாலும், அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எல்லாம்.. அல்ப ஆசைதான் காரணம்! நம் தனிப்பட்ட முகநூல் பக்கம், தனிப்பட்ட வலைப்பூ எனக் கருதும் மன எண்ணம்தான் காரணம்!
***
- இன்னொரு நண்பர் சக்ரவர்த்தி பாலசுந்தரம் --- ஒரு முறை அவரின் கவிதையை ரசித்து விரும்பியிருந்தேன். அதற்கு அவர் அளித்த பதில்.
***
Chakravarthy Balasundaram பொதுவாக, கவிதை எழுதுபவர்கள், அத்தனை எளிதில் பிறரது கவிதைக்கு விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள். நீங்கள் எனது டைம்லைனுக்கு சென்று, லைக் தந்துள்ளது, உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. செங்கோட்டை ஸ்ரீராம், வாழ்த்துக்கள் நன்றி.

Chakravarthy Balasundaram முதலில் நான் ஒரு பத்திரிகையாளன்... இலக்கிய ரசிகன். குறிப்பாக இலக்கியத் தரமான பத்திரிகைகளில் அதிகம் பணி செய்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக, இதழாசிரியராக, பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறேன்...
என் முதல் பணியே... ரசிப்பது. சரிசெய்வது, வெளியிடுவது, படைப்பாளனை வெளிக் கொணர்வது. என்னால் அடையாளம் காட்டப்பட்ட, முன்னிலைப் படுத்தப் பட்ட திறமையாளர்கள் அதிகம். என்னை அறிந்தவர்கள் அதனை உணர்வார்கள்.
நண்பரே...
பத்திரிகை ஆசிரியன் முதலில் தன்னை விட, தன் எழுத்தை விட, பிறர் எழுத்தை ரசித்து உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்தக் கொள்கையில் இப்போதும் மாறாமல் இருக்கிறேன்...
நான் கர்வத்துடன் சொல்லிக் கொள்வதுண்டு...
மிகச் சிறு வயதில், அதாவது 26 வயதில் எனக்கு மஞ்சரி இதழின் பொறுப்பாசிரியர் பணியை மிகவும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் அளித்தார் கலைமகள் இதழின் பதிப்பாளர் எம்.எல்.ஜே, பிரஸ் அதிபர் திருவாளர் நாராயணஸ்வாமி ஐயர்.
அவர் நம்பிக்கையை காப்பாற்றியது மட்டுமல்ல... எனக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன்...
நான் ஆசிரியராக இருந்து பணிபுரியும் இதழில் என் புகைப்படத்தை பிரசுரித்துக் கொள்ளக் கூடாது என்று! அதை இன்றளவும் 99% காப்பாற்றி வருகிறேன்.
மஞ்சரி இதழில் கடைசிப் பக்கத்தில் உங்களோடு ஒரு வார்த்தை என்று ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அந்த ஒரு இடத்தில் மட்டும்தான் என் பெயரை முழுமையாக... செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம் என்று போட்டுக் கொண்டேன்.
மற்ற இடங்களில் மொழிபெயர்ப்போ, கட்டுரையோ எழுத நேர்ந்தால்... புனை பெயர் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தேன்.
இன்றளவும் அந்த சபதத்தைக் காத்து வருகிறேன்.
தினமணி ஒலிச்செய்திகள் என் குரலில் வெளியானாலும், இதுநாள் வரை வாசிப்பவர் என்று என் பெயரை சொல்லிக் கொண்டதில்லை...
என் புகைப்படங்களை என் தனிப்பட்ட ஃபேஸ்புக், என் வலைப்பூ தவிர தினமணியின் எந்தப் பக்கத்திலும் நீங்கள் காண முடியாது.
காப்பது - விரதம் ! என்பதை எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடிகிறது பார்க்கலாம்...
எதற்கு இவ்வளவு சொல்ல வந்தேனென்றால்... உங்கள் கவிதையை வெறுமனே லைக் செய்ததற்காக மகிழ்கிறீர்கள்...
பத்திரிகைகளில் பணியாற்றும் நம் பணியே... படைப்பாளிகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவதுதானே...
இந்த முகநூலிலும் கூட... எத்தனை பேரை இனம் கண்டு என் அதிகார எல்லைக்கு உட்பட்ட தளங்களில் படைப்புகளை வெளியிட்டிருக்கிறேன்... அது அவரவர்க்குத் தெரியும்.
***
ஆக, என் அல்ப ஆசைக்கு ஆட்பட்டு, 7 வருடங்களுக்கு முன்னர் 'க்ளிக் ரவி' எடுத்த இந்தப் படங்களை பொதுவெளியில் விடுகிறேன். இதுவரை எதிலும் வெளியாகாமல் என் கணினியின் சேமிப்பு அறையில் உறங்கிக் கொண்டிருந்தவை இவை. இன்றாவது விமோசனம் கிடைக்கிறதே! இந்தப் படங்கள், மஞ்சரி ஆசிரியராக பணிசெய்தபோது எடுக்கப்பட்டவை. கலைமகள், மஞ்சரி ஆண்டுவிழா நிகழ்ச்சி நவிமும்பை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்டவை. நான், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், இரு இதழ்களின் பதிப்பாளர் திருவாளர் நாராயணஸ்வாமி ஐயர்.. இந்தப் படங்களில்..!
இதழாசிரியனாக என்னை அமர்த்தி வைத்து அழகு பார்த்த நாராயணஸ்வாமி ஐயர், இந்த நிகழ்விலும் நாற்காலியில் அமரவைத்து மரியாதை செய்து அழகு பார்த்தார். அந்தப் படத்தில் அவரின் புன்னகையும், முகமலர்ச்சியும் அதைக் காட்டும். பத்திரிகை ஆசிரியனுக்கும் பதிப்பாளருக்கும் இடையே ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் அதைக் காப்பாற்றுதலும் முக்கியம். உண்மையும் நேர்மையும் அதில் சேரும்.
***
என்னுடையவை எல்லாமே பழைமைதான். சிறுவயது சாதனைகள்தான்! கடந்த நாலைந்து வருடங்களாக குறிப்பிடும்படியாக அப்படி எந்த (நிகழ்வுகளோ) சாதனைகளோ, ஆக்கங்களோ நான் செய்துவிடவில்லை. இது என் அக்ஞாதவாசம்!


திங்கள், ஜூலை 21, 2014

எனைவிட்டு விலகாத என் காதலியே!

முகத்திரை விலக்கி
உன் மேனியின்
துகில் கலைக்கிறேன்.
நீ
துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.

உன் மெல்லிய மேனியில்
என் கை விரல்கள் கோலம் போட...
என் ரகசியங்களை
எனக்கே தெரிய வைத்தாயோ?

என் பார்வை எப்போதும் உன் மீதடி...
உன் வசீகரிக்கும் ஒளியால்
என் கண்ணொளி காணாமல் போகுதடி
என் கண்மணியே....

என் மனம் எப்போதும்
உன் குரலுக்காக ஏங்கிக் கிடக்குது பார்...
மௌனத்தின் வலியை நீ அறியாயோ?
பார்...
வதைகின்றாய் என்னை..!

மின்சாரத் தழுவல் ...
சூடேற்றும் சேமிப்புக்கலன்...
நினைவலைகள் உன்னாலே
நெஞ்சத்தில் மோதுதடி..

விரல்கள் பரபரத்து
உன் மேனியில் உரசிப் பார்க்க...
விளங்காத உலகத்தை
விளக்குகிறாய்...

எனை விட்டு
என்றும் விலகாத
அடி என் ஸ்மார்ட்ஃபோன் பெண்ணே!

வெள்ளி, ஜூலை 18, 2014

கபிலவாணர் விருதும் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகமும்!


 

ஏ.என்.சிவராமன் - தினமணியின் ஆசிரியராக நீண்ட காலம் இருந்தவர். அவருக்கு மத்திய அரசின் மதிப்பு மிக்க விருதான பத்மஸ்ரீ விருது கொடுக்க அவரிடம் அணுகினார்கள். ஏ.என்.எஸ்., மறுத்துவிட்டார். தான் ஏன் இந்த விருதைப் பெற மறுத்தேன் என்பது குறித்து தினமணிக் கதிரில் ஒரு கட்டுரையாக எழுதினார். 

பார்க்க... 

http://www.dinamani.com/impressions/article1331359.ece

(1968ம் ஆண்டில், தனக்கு மத்திய அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் அளிப்பதாக இருந்த பத்மஸ்ரீ/பத்மபூஷன் விருதை தான் ஏன் ஏற்கவில்லை என்பதற்கு அன்றைய தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அளித்த பதில்.

1968ம் வருட தினமணிக் கதிரில் இது குறித்து அவர் எழுதிய விளக்கம் இது...) 

ஏ.என்.எஸ்ஸுக்கு பட்டங்கள், விருதுகள் பேரில் விருப்பம் துளியும் இருந்ததில்லை என்று என் நண்பரும் வழிகாட்டியுமான கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அடிக்கடி சொல்வார். அப்படி விருதுகள் பேரில் துளியும் விருப்பம் இல்லாமல் தவிர்த்து வந்த ஏ.என்.எஸ்., ஒரே ஒரு விருது தன்னைத் தேடி வந்தபோது, சரி என்று ஒப்புக் கொண்டாராம். அது, திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கடந்த 38 ஆண்டுகளாக நடந்து வரும் கபிலர் விழாவில், வழங்கப்படும் கபிலவாணர் விருது. 

இந்தக் கழகத்தின் தலைவர் டி.எஸ்.தியாகராஜன் வருடந்தோறும் விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார். அவருடைய இந்தப் பணிக்காகவே ஏ.என்.எஸ்., விருதைப் பெற ஒப்புக் கொண்டதாகக் கருத இடமுண்டு. 

பின்னர் இந்த விருதைப் பெற்ற அடுத்த தினமணி ஆசிரியர்- ஐராவதம் மகாதேவன். 

தற்போது, ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை தினமணி ஆசிரியருக்கு இந்த அமைப்பின் கபிலவாணர் விருது வழங்கப் படுகிறது. பொற்கிழியாக ரூ.1 லட்சமும் வழங்கப் படுகிறது.

நமது. வாழ்த்துகள் ! ! 

==================

இந்த நிகழ்ச்சி குறித்து தினமணியில் வந்த செய்தியில் இருந்து...

--------------------------------

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா, ஜூலை 18-ஆம் தேதி இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி நடைபெறும் விழாவில், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கபிலவாணர் விருதும், ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

கபிலர் விழா தொடக்க நாள் நிகழ்வுகளாக, 18-ஆம் தேதி காலை கபிலர் குன்று வழிபாடு, மங்கல இசை, ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் ஆசியுரை, இலக்கியச் சோலை, இசை மாலை, திருமுறை இன்னிசை, பட்டிமன்றச் சோலை ஆகியவை நடைபெறுகின்றன.

வரும் 19-ஆம் தேதி காலை இலக்கிய விழா, மாலை அறிஞர் உலா, இரவு பரிசு நிலா நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இராம.சுப்பிரமணியன் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

விழாவில், "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும், "கபிலவாணர்' விருதும் வழங்கி, மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம் பாராட்டிப் பேசுகிறார். புது தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் பொதுச் செயலர் எம்.என்.எஸ்.மணியனுக்குத் "தமிழ் ஞாயிறு' என்கிற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது.

தொடர்ந்து நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் இசை விழா நடைபெறுகிறது. வரும் 20-ஆம் தேதி காலை மங்கல இசை, தெய்வத் திருப்பாடல்கள் அரங்கு, இசை அரங்கு, நாகசுர இசை அரங்கு, திருமுறை இசை அரங்கு, நாட்டிய அரங்கு நடைபெறுகிறது.


வியாழன், ஜூலை 17, 2014

கொள்ளல் - கொல்லல்

கொள்ளலும் கொடுத்தலும்
எள்ளலும் ஏந்தலும்
அன்புடையோர் இலக்கணம்!

"என்னைக் கொள்" என் அன்பே...!

பல முறை பகன்றாலும்
பலன் மட்டும் இல்லவே இல்லை!

உதடுகள் ஒட்டாத தன்மை
உயிரோட்டம் இல்லாத வெறுமை!
நாவுக்கும் உதட்டுக்குமே
ஒட்டுறவு இல்லையே!

என்னால் மனத்தில்
நிறுத்த முடியாது - என்னை!

என்னாள் மனத்தில்
புகுத்த முடியாது - தமிழை!

என்னாழ் மனத்தில்
விலக்க முடியாது - அவளை!

ல-வுக்கும் ள-வுக்கும்
வேறுபாடி காட்டின்
லவ்வுக்கும் ளவ்வுக்கும்
போகும் எண்ணம்!

அட...
'என்னைக் கொள்' என் அன்பே!

நாள்கள் நகர்ந்தாலும்
நால்கல் மாறவில்லை!

ல் என்றே இயம்பி
என்னை இல்லாமல் ஆக்குகிறாள்...

கொன்று தின்னும் சாகசமோ?
லை....

கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின்
அழகும் மணமும்
அறியவும் உளவோ ..?
சூடிய பூவே அறிந்திலேன் ...
வாடிய பூவே இயம்புவாய் ...!



கைதிக் கிளி ஏ...!

ஒருமணியாய்க் கருமணியை
உன் கழுத்தில் கட்டிடவே
அருகினின் றழைக்கின்றேன் - ஒரு கிளியே...
உன்னை என் 

கைகளிலே தங்காமல்
கூண்டுக்குள் சிறைப்பிடிக்கும்
சின்ன வளையாளோ ... யாரோ....?




கட்டை விரல் காதலியே!

சுட்டு விரல் பிடித்த காதலி..
ஆள்காட்டி விரல் காட்டி
ஆளை மாற்றிக் கொண்டாள்..
கட்டை விரல் காதலியே
காலம் போக்க உதவுகிறாள்..
***
கண்ணொடு கண் நோக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...
- குறள் கருத்து

கண்கள் நாலும் பேசும் நேரம்
நானும் நீயும் ஊமையானோம்..
- அடி வான்மதி என் பார்வதி
(சிவா படப் பாடலில்)

வாழ்வின் துணையாக
இளையராஜாவும்
என் கட்டை விரல் காதலி
ஸ்மார்ட் போனும்...!!!

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!


குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக இருக்கும். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அருவியில் நின்றால், சிகைக்கால், ஷாம்பு போடாமலே தலையில் வைத்த எண்ணெய் காணாமல் போய் விடும்.
எண்ணெய் மாலிஷ் செய்து விடுவதற்கென்றே சிலர் அருவிக் கரைக்கு வெளியே அமர்ந்திருப்பார்கள். இப்போது அந்தக் காட்சிகளை எல்லாம் காண முடியாது. ஆனால்... அருவிக் கரை மிகத்தூய்மையாக உள்ளது. தண்ணீர் அதே தெளிவுடன் செல்கிறது. அருவி விழுந்து நீர் ஓடும் ஓடையில், பிளாஸ்டிக் கழிவு அடைப்புகள் இல்லாமல் நீர் சலசலத்து ஓடுகிறது.
ஆனாலும், வியாபாரிகள் அலுத்துக் கொள்கிறார்கள். கூட்டம் இல்லை... நீதிமன்ற உத்தரவு இப்படியா இருக்க வேண்டும்? குற்றாலக் குளியல் என்றாலே எண்ணெய்தானே! மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்கத்தானே குற்றாலம் வருகிறார்கள்... - இவ்வாறாக!~
திங்கள் அன்று குளிக்கச் சென்றேன். கூட்டம் ஓரளவு இருந்தது. நெருக்கியடிக்கும் நிலை இல்லை என்றாலும், அருவிக்கு அருகில் ஒரே தள்ளுமுள்ளு. ஆனால், அருவி நீர் நன்றாக விழும் நடுப் பகுதியில் நெருக்குதல் இன்றி, நன்றாகக் குளிக்கும் வகையில் இருந்தது.
முன்பெல்லாம் அருவி நீர் விழுகிறதோ இல்லையோ... ஒவ்வொருவர் உடலிலும் தேய்த்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்கை நம் உடலில் இழுவி விட்டுச் செல்வார்கள்... இப்போது அப்படி இல்லை என்றாலும், நெருக்கியடித்தலின் போதான வாடை... குறிப்பாக டாஸ்மாக் சரக்கு நெடி.. குமட்டத்தான் செய்கிறது. இத்தனைக்கும் அருவியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு டாஸ்மாக் கடைகளை மாற்றி விட்டார்களாம்.. இருந்தாலும் தண்ணி போடாமல் தண்ணியில் தலை காட்ட ஏன் இந்தக் குடிமகன்களுக்கு ஞானம் வர மறுக்கிறதோ தெரியவில்லை!
தமிழகம் தரம் தாழ்ந்து போவதற்கு, அளவுக்கு அதிகமான சரக்கு விற்பனை ஒரு காரணமாக அமையக் கூடும்!







பொதிகை அடிவார இயற்கைக் காட்சி...













 
 
எங்கள் ஊர் இயற்கைக் காட்சி... 
 
பொதிகை மலை அடிவாரத்தின் வண்ணக் காட்சி.

இன்னும் பிளாட்டுகள் அளந்து போடப் படாத பசுமை நிறைந்த மண். எப்போது என்னவாகும் என்று தெரியாது. வருங்காலத் தலைமுறைக்கு இதே பசுமையை நாம் விட்டுச் செல்வோமா தெரியாது... குறைந்தது.. இப்படி இருந்தது நம் மண் என்ற காட்சியையாவது இணையவெளியில் பதிந்துவிட்டுச் செல்வோம். அது நம்மால் முடியும்~!

ஒவ்வொரு வண்ணக் கலவையிலும், ஒளிக் கலவையிலும் ரசித்து எடுத்தேன்... இந்தப் படங்களை!

நல்ல அழகான பின்னணி. இதழ்களின் அட்டையிலோ, உள் பக்கங்களிலோ பின்னணிப் படங்களாக வைத்து லே-அவுட் செய்து வெளியிட ஏற்ற கவர்ந்திழுக்கும் தன்மை இவற்றில் இருந்ததை உணர்ந்தேன்.


 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix