சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஜூன் 05, 2013

பேரளியும்... பெருங்கதையும்!

பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி... பெரம்பலூர் - அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம்.
மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின் மூலம் அறிமுகமானவர் நண்பர் ஸ்ரீனிவாசன். இந்தப் பேரளியில் தொழில்முனைபவராகத் திகழ்கிறார். அவருடைய தந்தையார் நீலமேகம் ஐயங்கார் நல்லதொரு ஆன்மிகச் சொற்பொழிவாளராக, ஆன்மிக நிகழ்ச்சிகள், குடமுழுக்கு உள்ளிட்ட விழாக்களை நடத்தி அந்தப் பகுதியில் நற்பெயர் பெற்றவர். நான் எழுதியிருந்த புத்தகங்கள் ஓர் இரண்டைப் படித்துவிட்டு என் மீது நல்ல அபிமானம் கொண்டிருந்தாராம். நண்பர் ஸ்ரீனிவாசன் அடிக்கடி தொலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் அவரைப் பார்த்து நமஸ்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் துரதிருஷ்டம், சென்ற வருடம்(2012) அக்டோபர் மாதக் கடைசியில் அதே பேரளியில் ஒரு சாலை விபத்தில் சிக்கிய அவர் பின்னர் மருத்துவமனையில் வைத்து காலமானாராம். தந்தையார் மீது பெருமதிப்பு கொண்டிருந்தது நண்பரின் அந்தக் குடும்பம்.
அப்போது, நண்பர் ஸ்ரீனிவாசன் ஒரு செய்தி சொல்லியிருந்தார். அவர்கள் ஊரில், ஊரை விட்டு சற்றே ஒதுக்குப்புறத்தில், வயல்களின் ஊடே இரண்டு பாழடைந்த கோயில்களை இவர்கள் கண்டார்களாம். முட்புதர்கள் சூழ மிகவும் பாழடைந்து வெளித்தெரியாது இருந்த இரு கோயில்களை ஊர் மக்கள் ஒத்துழைப்பில் முட்புதர்களை அகற்றி உழவாரப் பணி மேற்கொண்டார்களாம். அப்போதுதான் தெரிந்தது, இரு கோயில்களும் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் என!  ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு இருந்த அந்தக் கோயில்களில் உழவாரப் பணி செய்து, கோயில்களில் தினமும் விளக்கேற்றி, பூஜை செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக நீலமேகம் ஐயங்கார் பரமபதித்துவிட, எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சி.
கோயில் பணிகளில் இருந்து சற்றே பின்வாங்கினார்கள் சிலர். நண்பர் ஸ்ரீனிவாசனுக்கோ அவரது இளைய சகோதரர்களுக்கோ பெரும் துயரம். இனி இந்தக் கோயில்களுக்கு பூஜை செய்யலாமா? கூடாதா? இறைவன் நம்மை ஏன் இப்படி சோதித்தான்... இப்படியாக உள்ளூர எண்ணம் அவர்களுக்கு!
இதனிடையே, கோயில் உழவாரப் பணிகள் குறித்து பரவலாக செய்தி வெளியான போது, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வந்து பார்க்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் பகுதியிலும் பழைமையான கோயில்கள் இருந்துள்ளனவே என்ற ஆச்சரியத்தில்!
ஆனால், இது அருகில் இருந்த வயல், தோப்பு தொரவு உரிமையாளர்களுக்கோ, அல்லது ஊர் நலன் விரும்பாத ஒரு சிலருக்கோ பிடிக்கவில்லையோ என்னவோ? கோயிலில் இருந்து எடுத்து வைத்த கற் சிலைகள் சில திடீரென காணாமல் போயின! இடையில் சிலர், அந்தக் கோயில்களுக்குள் சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றில் அந்தக் கால மன்னர்கள் தங்கம், வெள்ளி, நவரத்தினங்களை புதைத்து வைத்திருப்பார்கள் என்று கட்டி விட, புதையல்  ஆசையில் ஒரு கூட்டம் கோயில்களை நோட்டம் விடத் தொடங்கியது.
விடுவாரா.. நம் ஆவியின் சூவியார்?! இப்படி ஒரு கட்டுரையையும் எழுதி இதழில் வெளியிட்டும் விட்டார்கள்...
------
சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?
தங்கப் புதையல் இருப்பதாகப் பரவிய செய்தி பெரம்பலூர் மாவட்டத்தை தகதகக்க​வைத்துள்ளது!  சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி - மருவத்தூர் இடையே முட்புதர்களுக்குள் பழைமையான இரண்டு கோயில்களைக் கண்டு​பிடித்தனர் கிராம மக்கள். 'அந்தக் கோயில்களில் இருந்த சில சிலைகள் திருடப்பட்டுள்ளன என்றும் தங்கப் புதையல் இருக்கிறது’ என்றும் பரபர தகவல்கள் கிடைக்கவே, விசாரணையில் இறங்கினோம். காட்டுப் பாதைக்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோயில் திடீர் பிரபலம் ஆகி விட்டதால், ஏராளமான மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வணங்கிச் செல்கிறார்கள். கோயிலைச் சுற்றிப் பார்த்த பிறகு, ஊர்ப் பெரியவரான ஆறுமுகத்திடம் பேச்சுக் கொடுத்தோம். ''அந்தக் காலத்துல கோயில்களைச் சுற்றி பேரளி கிராமம் இருந்ததாகவும், அதன்பிறகு, பேரளி மருவத்தூர், பேரளி, பனங்கூர் என்று மூன்று ஊர்களாகப் பிரிஞ்சுட்டதாகவும் சொல்வாங்க. மக்கள் புழக்கம் இல்லாததால், நாளடைவில் கோயில்​களைச் சுற்றி முள்வளர்ந்துடுச்சு. ஒரு கட்டத்தில் கோயில்களையே மறைச்சிடுச்சு. -
--
என்று கட்டுரை நீண்டுகொண்டே போனது!
ஆட்சியருக்கு செய்தி பறந்தது. தொல்பொருள் இலாகா- தூக்கம் கலைந்தது. ஓடி வந்தார்கள் பேரளியில் பேரணியாக! கோயில்களின் சுவர்களை அளவெடுத்தார்கள். அங்குலம் அங்குலமாக அடியெடுத்து கற்களையும் சிலைகளையும் கணக்கெடுத்தார்கள்...
ஊர் மக்களுக்கு ஒரு நம்பிக்கை! சரி.. அரசு ஏதோ செய்கிறது. நம் ஊர் கோயில்கள் திரும்பவும் ஒரு நல்ல நிலையை அடைந்துவிடுமென்று!
இப்படியாக மூன்று நான்கு மாதங்கள் கழிந்த நிலையில்தான்....
நண்பர் ஸ்ரீனிவாசன் திரும்பவும் என்னை தொலைபேசியில் அழைக்கத் தொடங்கியிருந்தார். எங்கள் ஊருக்கு வாருங்கள். அந்தக் கோயில்களை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். என் அப்பா உங்களைப் பார்க்க ஆசைப்பட்டார்... உங்களை அழைத்துக் கொண்டு அந்தக் கோயில்களுக்குப் போய்க் காண்பிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்... இப்படியாக நண்பர் அவரது அப்பா பெயரைச் (செண்டிமெண்டை) சொன்னதும் எனக்கும் ஆவல் அதிகமாயிற்று! சரி போய் வருவோமே என்று எண்ணி, அவரிடமும் நான் வருவதாகச் சொன்னேன்.
அதற்கு நான் தேர்ந்தெடுத்தது, என் பிறந்தநாளை! மார்ச் 14. ஸ்ரீரங்கத்திலிருந்து காலை கிளம்பி, திருப்பட்டூர் சென்றுவிட்டு, அங்கிருந்து பெரம்பலூர் சென்றேன். (இந்தக் கோயிலை மறு மாதமே தினமணி - வெள்ளிமணியில், தலையெழுத்தை மாற்றித்தரும் பிரம்மா கோவிலாகப் பதிவு செய்தேன்..)
மதியம் பேரளி சென்று அவர் வீட்டை அடைந்தது முதல் அப்பாவைப் பற்றியும், அந்தக் கோயில்களைப் பற்றியுமே சொல்லிக் கொண்டிருந்தார். உண்டு முடித்து சற்று நேரத்தில் அவருடன் அந்தக் கோயில்களைப் பார்க்கலாமே என்று கிளம்பினேன்!
எத்தனையோ பாழடைந்த கோயில்களைப் போய்ப் பார்த்து எழுதியிருக்கிறோம். அவற்றின் அவல நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்... அதுபோல் எண்ணி இந்தக் கோயில்களுக்கும் சென்றேன். கிராமத்துச் சாலையின் இரு புறத்திலும் பார்த்தால்... கீழ்ப் பக்கம் சிவன் கோயிலும் மேற்புறத்தில் பெருமாள் கோயிலுமாக வெளித்தெரிந்தது. கோயில்களைச் சுற்றியிருந்த புதர்களை அப்புறப்படுத்தியிருந்தார்கள். கோயில் நன்றாகவே வெளியில் தெரிந்தது.
சிவன் கோயிலுக்கு முதலில் அழைத்துச் சென்றார் நண்பர். வௌவால்களின் வாசம்... அந்த வாசத்தால் வெளிப்பட்ட வாசம்... எல்லாம்தான்! கையில் எண்ணெய் திரியுடன் சென்ற நண்பர், உள்ளே விளக்கேற்றி, தீப ஆராதனையும் செய்து, கற்பூரத்தைக் கொளுத்தி வெளிச்சத்தை ஏற்படுத்தி வெளியில் வந்தார்.
கோயில் பகுதியைச் சுற்றிப்பார்த்து வந்தேன்.
சுரங்கம் இருப்பதாகச் சொன்ன ஒரு இடம்... பின்னப்பட்டுப்போன விக்ன விநாயகர் சிற்பம், கொடிமரம், இடிந்து விழுந்த நிலையில் அம்பாள் சந்நிதி, சுற்றிவலம் வரும்போது சண்டிகேசர் சந்நிதி, நந்தி, பலிபீடம்... எல்லாம் ஒரு பழமையின் செழுமையை கண்ணில் காட்டியது.
அடுத்து பெருமாள் கோவிலுக்குப் போனோம். நல்ல அமைப்பு. துவஜஸ்தம்பம், விளக்குத்தூண் போல்! பெருமாள் சந்நிதி. நல்ல அமைப்புடன் விக்ரஹம். பன்னிரு ஆழ்வார்கள் விக்ரகங்கள், தாயார் சந்நிதி உரு மாறாமல்.. தாயார் விக்ரஹம் மிகத் திருத்தமாக அழகுடன்! இப்படியே பார்த்து வந்தபோது, பெருமாள் சந்நிதி பின்புறத்தே மேற்சுவரில் ஒரு சிற்பம் மிக அழகாக இருந்ததைக் கண்டேன்.
மூன்று பேர் இருவர் போல்  தோற்றம் அளிக்கும்  வண்ணம் ஒட்டியபடி செதுக்கப்பட்ட சிற்பம், இடது புறத்தை மறைத்தால் வலது புறத்தில் ஒருவர் ஓடுவது போல், வலதுபுறத்தை மறைத்தால் இடது புற நபர் ஓடுவதுபோல், இரண்டு கைகளையும் மறைத்துப் பார்த்தால் நடுவில் ஒருவர் நிற்பதுபோல்... ஆசனத்தில் அமர்வதுபோல் என்று வித்தியாச சிற்பம்...
இப்படியாக இந்தக் கோவில்களைப் பார்த்துவிட்டு வெளிவந்தேன். ஏற்கெனவே இவர்கள் நம்பிக் கொண்டிருப்பதுபோல்....இந்தக் கோயில்களைப் பார்த்துவிட்டு வந்ததால் நம் ராசியும் தலைஎழுத்தும் எப்படி இருக்கப்போகிறதோ என்ற குதர்க்கமான (அல்லது நக்கல் கலந்த) எண்ண ஓட்டத்துடன் வண்டிபிடித்து, பெரம்பலூர் புறவழிச்சாலை அடைந்து, வந்து நின்றவுடனே விருட்டென வந்த சென்னை விரைவுப் பேருந்தில் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்...
(ம்ஹும்... அப்பாடா....! ஒரே மூச்சு.. பெருமூச்சு!)




















Rathnavel Natarajan சொன்னது…

பேரளியும் பெருங்கதையும் - நண்பர் செங்கோட்டை ஸ்ரீ ராம் அவர்களின் அருமையான பதிவு - பழங்கால கோவில்கள் எப்படி பராமரிக்கப் படாமல் கிடக்கின்றன என அவர் ஆதங்கத்தைப் பதிந்திருக்கிறார். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நண்பர்கள் படிக்க வேண்டுகிறேன்.
நன்றி.

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix