சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், மார்ச் 31, 2011

96க்கு பதிலடி தருமா இந்தியா? கொல்கத்தாவில் அடிச்சா மும்பையில் நெறிகட்டும்!?


ஜீதே கா ஜீதே கா... ஹிந்துஸ்தான் ஜீதே கா...

ஏய் இன்னா மன்னாரு... நம்ம தமிழ் கொஞ்சி விளையாடுற வாயில இன்னால்லாமோ உளறிட்டே வாரே... என்ன ஆச்சு உனக்கு?

எல்லாருக்கும் ஜுரம் வந்தா ஏதாவது உளறுவாங்கல்ல... அந்தமாதிரி இந்தியாவுல பெரும்பாலானவங்களுக்கு வந்த ஜுரத்துல எல்லாருமே சொல்லி வச்சாமாதிரி உளறின உளறல்னு வெச்சிக்கயேன்...

சரி இந்த ஜுரம் சரியாயிடிச்சா..? எப்போ குணமாகும்..?

அதுக்குள்ள எப்படி? இன்னும் சனிக்கிழமைவரை பொறுத்திருக்கணும். அப்புறமாத்தான் சரியாகும்.

அதுக்குப் பிறகு சரியாயிடுமா?

அதான கேக்கக்கூடாது... அதுக்குப் பிறகு ஐபிஎல் அப்படின்னு ஒரு ஜுரம் பிடிச்சுக்கும்... இது அப்போ அப்போ வந்துட்டுப் போற ஜுரம்... இதையெல்லாம் நீ சீரியஸா எடுத்துக்கக்கூடாது ஆமாம்..!

சரி சரி... இந்த ஜுரத்துக்கு மருந்து மாதிரி ஏதாவது...?

ஓ இந்தியா பாகிஸ்தான் மோதின அந்த மேட்ச் பாத்திருந்தா நீ இப்படி கேட்டிருக்க மாட்டே...

ஏன் அப்படிச் சொல்ற..?

அந்த விறுவிறுப்பு... அந்த ஆக்ரோஷம் எல்லாம்தான்!

என்ன சச்சினுக்கு வரிசையா கேட்ச் மிஸ் செஞ்சாங்களே... அதைத்தான சொல்றே...

அது அவங்களுக்கு அந்த அளவுக்கு பதற்றம்... நம்ம விட டென்ஷன் அவங்களுக்கு ரொம்ப அதிகம். அதைத்தான் நிறைய பேரு சொன்னாங்க... அவங்க நாட்டு அதிபர், முக்கிய அதிகாரிகள் நேர்லே மேட்ச் பாக்க வந்துட்டாங்க... அப்புறம் பாகிஸ்தான் முழுக்க வெறி பிடித்த ரசிகர்கள் நெறயப் பேரு எப்படான்னு காத்துக்கிட்டிருக்காங்க... இந்த ஒரு சூழ்நிலையில அவங்க எப்படி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க முடியும்னு சொல்லு பாப்போம்....

சரிதான் ஆனா... பாகிஸ்தானோட பந்துவீச்சும் பீல்டிங் செட்டப்பும் ரொம்ப மிரட்டிச்சுன்னுதான் சொல்லணும். ஏன்னா சேவாக் அதிரடி காட்டி ரன்ரேட்டை ஏகத்துக்கும் உயர்த்திட்டாரு. அவரு அவுட் ஆனதுக்குப் பிறகு ஒரு கட்டத்துல ரன் வருமான்னு தோணிடுச்சு. டெண்டுல்கர் வேற கேட்ச் கேட்சா கொடுக்க, ஏதோ ஒண்ணுரெண்டு தவறிடுச்சு... ஆனா, இந்த காம்பிர் ஏன் இப்படி அவசரப்பட்டு ரன் அவுட் ஆகுறாருன்னு தெரியலை. ஒன்னு ரன் அவுட் ஆகுறது, இல்ல... ஏதோ சிக்ஸர் அடிக்கிறமாதிரி ஏறிவந்து, குச்சியவுட்டுட்டு நிக்கிறது... ஸ்டம்பிங் ஆவுறதுன்னு ஒரு ஸ்டைல கடைப்பிடிக்கிறாரு... அவரை எப்படி திருத்தப் போறாங்களோ..? இதை விட்டுட்டுப் பார்த்தா பாகிஸ்தான் ரொம்பவே ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியதுன்னுதான் சொல்லணும். எப்படியும் 300 ரன்களுக்கு மேல போயிடும்னு இருந்த நேரத்துல 260 ரன்னுக்குள்ள நிறுத்தினாங்களே... அது நிச்சயமா நல்ல பீல்டிங், பவுலிங்காலதான்!

ஆனா... இதுல ஒன்ன சொல்ல மறந்துட்ட... சுரேஷ் ரெய்னா...

அட ஆமாம்பா... ஆஸ்திரேலியாவோட ஆன மேட்சிலயும் சரி... இந்த மேட்சிலயும் சரி... பொறுப்பா கடைசி வரை நின்னு நல்ல பந்து வந்தா தடுத்து, கொஞ்சம் மோசமான பந்துன்னா பவுண்டரி அடிச்சின்னு... ரொம்ப சரியான வேலை அது... என்னதான் சச்சின் சதம் அடிக்காம போனாலும், 85 ரன் எடுத்து கொடுத்தாரே அதுவே பெரிசுதான்...

ஆனா ஒரு விஷயத்தை கேட்டியா? சில ரசிகர்கள் வெளிப்படையாவே சொல்றாங்க... நம்ம டீமுக்கு ஒரு ராசி இருக்காம். சச்சின் செஞ்சுரி போட்டு நம்ம டீம் ரன் அதிகமா எடுத்தாலும், அதுல இந்தியா தோத்துடுமாம். அப்படி ஒரு ராசி... அதனால, சச்சின் 85 ரன் எடுத்து அவுட் ஆன உடனே ராசி ஒர்க் அவுட் ஆயிடிச்சாம். இன்னிக்கு நம்ம டீம்தான் ஜெயிப்பாங்கன்னு பெட் கட்ட ஆரமிச்சிட்டாங்க...

ஏ... என்னப்பா நீ... இப்படி எல்லாம் உளறாத... ஏதோ ஒன்னு ரெண்டு மேட்சுல அப்படி நடந்திருக்கலாம்.. அதுக்காக ராசி கீசின்னு கிறுக்குத்தனமா ஏதாவது பொய் பேசிட்டுத் திரியாதே... கிரிக்கெட் ஒரு கேம். அதுல இந்த ராசி எல்லாம் ஒர்க்-அவுட் ஆகாது தெரிஞ்சுக்க...

சரி சரி.. விடு. ஆனா, மேட்ச் ஆரமிக்கிறதுக்கு முன்னாடி தோனி சொன்னத கவனிச்சியா... இந்த ஆட்டத்துல வெற்றி தோல்வி ரெண்டு பக்கத்துக்கும் இருக்கும். ஆனா ரசிகர்கள் அதை பொறுமையா ஒரு விளையாட்டு உணர்வோட எடுத்துக்கணும்ன்னு முன் ஜாக்கிரதையா சொல்லிட்டாரு... நல்ல வேளை!

ஆனா இந்த மிஸ்பா உல்ஹக் மேட்டர்ல இவ்ளோதூரம் எல்லாரும் பயந்துபோய் கிடந்தாங்களே!

அட நீ வேறப்பா.. அவரு என்னவோ பேட்டிங் பவர்ப்ளேயிலதான் நல்லா விளாசுவாராம்...  அதுனால அந்த கடைசி கட்ட ஓவர்கள்ல அவரு டென்ஷனை ஏத்துவாருன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டிருந்தாங்க... நல்ல வேளை லீக் மேட்சுல இங்கிலாந்தோட ஆடின ஆட்டத்தை மாதிரி ஓவரைப் போடாம கொஞ்சம் நல்லா பவுலிங் செஞ்சாங்க... இல்லைன்னா ஆட்டம் திசை திரும்பியிருக்கும்...

இதுல ஒரு விஷயத்தை பாராட்டணும். நெருக்கடியான கட்டத்துல அப்ரிதி கொடுத்த ஒரு கேட்ச்சை பிடிச்சாரு பாரு நெஹ்ரா... மக்கள் எல்லாம் ஹோன்னு கத்த ஆரமிச்சிட்டாங்க. ஆனா, நெஹ்ரா அந்தப் பந்து தன் விரல்கள்ல பட்டு தரையில பட்டுடிச்சின்னும், அதுனால அது கேட்ச் இல்லைன்னும் வெளிப்படையா சொன்னாரு இல்லையா?! அதை ரொம்பவே பாராட்டணும்...

கரெக்ட்தான். எப்படியும் இன்னிக்கி வளர்ந்திருக்கர டெக்னாலஜியில எப்படியும் தெரிஞ்சிடப் போகுது. இருந்தாலும் தானா முன்வந்து சொன்னது பெரிய விஷயம்தான்!

சரி சரி.. எப்படியோ!? இரு நாட்டு உறவுன்னு ஒரு புறம்... அதிகாரிகள், அதிபர்னு பேச்சுவார்த்தை மறுபுறம்னு ஒரு கிரிக்கெட் மேட்ச் என்னல்லாம் விளையாடிட்டுது பாரு...

இரு இரு... இதே மாதிரி இன்னொரு விளையாட்டும் இருக்கு. அதுலயும் ராஜபக்‌ஷே, பிரதீபா பாட்டில்னு இரு நாட்டு ஜனாதிபதிகளும் வந்து ஒரு விளையாட்டு விளையாடப் போறாங்க...

என்னவோப்பா... ஒரு கிரிக்கெட் மேட்சுக்கு இப்படி எல்லாம் அரசியல் பூந்து விளையாட வேண்டாம்... சரி சரி... இப்போ இறுதிப் போட்டியில யாரு ஜெயிப்பாங்கன்னு சொல்லு...

ம்ம்... சனிக்கிழமை வேற... ஆனா என் ஆசை என்னான்னா... 96 உலகக்கோப்பை போட்டி ஆட்டம்... அரை இறுதிதான். இந்தியா இலங்கை மேட்ச். அப்போ கல்கத்தா மைதானத்துல கிட்டத்தட்ட லட்சம் பேரு முன்னாடி... சச்சின் அசார்னு எல்லாம் ஒருத்தர் பின் ஒருத்தரா போக... கடைசில வினோத் காம்ப்ளி கண்கள்ல நீர் கோக்க அழுதுக்கிட்டே அவுட் ஆகிட்டு போனாரு பாரு... மக்கள் கல்லெடுத்து அடிச்சி, நீங்களாவே வின் பண்ணிக்கிங்கடான்னு இலங்கைக்கு ரைட் கொடுத்து மேட்ச அத்தோட நிறுத்திட்டு போனாங்களே.... அதுக்கு பதிலடி கொடுக்கறா மாதிரி 2011ல இந்தப் போட்டி அமையுமான்னு ரசிகர்கள்லாம் காத்துக்கிட்டிருக்காங்கப்பா...

சரி சரி... தோனி ஏற்கெனவே எதிர்பார்ப்பைப் ப்பூர்த்தி செய்வோம்னு சொல்லியிருக்காரு... அதுனால அவரு பூர்த்தி செய்வாருன்னு நம்புவோமாக!

சர்ரி சர்ரி.. அப்படியே நடக்கட்டும்... போய் மேட்ச் பாத்துட்டு பிறகு உன்னை மீட் பண்றேன். வரட்டா... 

வெள்ளி, மார்ச் 25, 2011

மங்கி & மன்னாரு:: ஆஸ்திரேலியாவின் ஆட்டம் ஆட்டம் கண்டுடுச்சே...

ஹைய்யா ஹைய்யா இன்னா ஆட்டம் இன்னா ஆட்டம்... அப்படியே ஆட்டம் கண்டுட்டுது பாத்தியா...

வாய்யா வா மன்னாரு... என்னா ஆட்டம் கண்டுட்டுது..?

ஆஸ்திரேலியாதான்! இன்னா மெதப்புல இருந்தாங்க..? பாகிஸ்தான் கொடுத்துச்சு முதல் அடி... இப்ப இந்தியா குடுத்துட்டு ஒரே இடி!

ஒரேயடியா சொல்லாத மன்னாரு... இதுனால ஒண்ணும் ஆஸ்திரேலியாவோட கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்துடாதுன்னு பாண்டிங் சொன்னத கவனிச்சியா...

ஆமாம் ஆமாம்... அதுலயும் இன்னொண்ணும் சொல்லியிருக்காரு பாத்தியா! அது என்னவோ எனக்கு வயித்தெரிச்சல்ல சொன்னமாதிரிதான் இருக்கு...

என்னன்னு?

இந்தியா பாகிஸ்தானையும் ஜெயிக்கும். அப்படியே உலகக்கோப்பையும் ஜெயிக்கும்னு ஒரேயடியா அளந்துவிட்டுருக்காரே!

ஏம்பா தோத்ததுக்கு அப்புறம் ஏதோ உசுப்பேத்தி விடுறாருன்னு விட்டுடுவியா... இதப்போயி பேசிக்கிட்டு...!

இருந்தாலும் மங்கி.. எல்லாரும் யுவராஜப் போட்டு  அந்தத் தூக்கு தூக்குறாங்க... எனக்கு என்னமோ அவரு ஆட்டத்துல அப்படி ஒண்ணும் ஸ்டைல் இருக்கறாமாதிரி தெரியல... ஒண்ணு ஒண்ணா சேக்கிறதுக்கு என்னமா திணறிட்டிருந்தாரு... அதுவும்... ரொம்ப பயந்துக்கிட்டே ஆடினா மாதிரி இருந்துச்சு...

ஆமாம்.. விக்கெட் போயிடக்கூடாதுன்னு ஜாக்கிரதை இருக்கலாம் இல்லயா?

இல்ல மங்கி... யுவராஜுக்கு ஃபுட் ஒர்க் அப்படின்னு சொல்றதெல்லாம் சரியா வரல்லை... அவரு பாட்டுக்கு இருந்த இடத்துல இருந்துக்கிட்டு, அதுவும் கால ரெண்டும் எப்படி நிலத்துல ஊன்றிக்கிட்டு நிக்கிறாரோ அப்படியே நின்னுக்கிட்டு பந்து பேட்டுக்கு அடிக்க வர்றாமாதிரி வந்தாதான் அடிக்கிறாரோன்னு தோணுது எனக்கு...!

கரெக்டுதான்... ஆனா, அதுவும் ஒரு ஜாக்கிரதை உணர்வுதான்... ஆனா ரெய்னா இதுக்கு எவ்வளவோ பரவாயில்லை. எனக்கு தெரிஞ்சு தோனி செஞ்ச நல்ல காரியம்... ரெய்னாவையும் அஸ்வினையும் டீமுக்கு எடுத்ததுதான்னு சொல்லுவேன்..

சரிதான் மங்கி.. அஸ்வின் எடுத்த முதல் விக்கெட் ஒரு டர்னிங் பாயிண்டு.. அதே மாதிரி முதல் பத்து ஓவர்கள்ல அதிகமா ரன் எடுக்க வுடாம நல்லா காப்பாத்துறாருன்னு சொல்லு...

ஆமாம்... முதல் 10 ஓவர்கள்லயே சுழற்பந்துக்கு தயார்படுத்துறது நல்லதுதான்... இதே மாதிரிதான் அப்ரிடியும் அதிரடியா பந்துவீசறாரு. அவரும் இதேமாதிரி ஸ்லோ பிட்சுக்கு ஏத்ததுபோல் முதல்லயே சுழற்பந்து வீச்சைக் கொண்டுவந்துடறாரே... அதுவும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரா அவரு காட்டின டகல்டி வேலையெல்லாம் பாத்தியானா நீயும் சொல்லுவே...

ஆனா... இந்தியாவோட இந்த ஆட்டம் எடுபடுமான்னு பாக்கணும்... நீ என்ன சொல்லுறே... இந்தியாவா பாகிஸ்தானா..?

திரும்பத் திரும்ப இப்படி கேக்காதே... ரசிகர்களுக்குதான் இந்த விறுவிறுப்பு குறுகுறுப்பு எதிர்பார்ப்பு எல்லாம்... ஆனா ரெண்டு டீமும் அப்படியேதான் இருக்காங்க.. ஓவர் டென்ஷன் இருக்கும்னாலும் பாகிஸ்தான் டீம் முந்தி மாதிரி ஆக்ரோஷமா இல்லன்னுதான் தோணுது...

எப்டி சொல்றே...

இம்ரான், வாசிம், மியாந்தத் அப்புறம்.... இன்சமாம் காலத்துல இருந்த மாதிரி எல்லாம் டீம் இப்ப இல்லைன்னு தோணுது... பழக்கப்பட்ட மண்ணுங்கிறதால நல்லா ஆடிட்டிருக்காங்க...

சரி சரி... ஆனா இதுவரைக்கும் இந்தியா உலகக்கோப்பை போட்டிகள்ல பாகிஸ்தான்கிட்ட தோத்ததே இல்லைன்னு ஒரு சரித்திரம் இருக்கே... அது அப்படியே நிலைக்குமான்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு... அத நெனச்சா சோறுதண்ணி எறங்கமாட்டேங்கி...

அதுக்கு நீ ஏன் கவலைப்படுறே... போய் வேலையைப் பாரு.. பசங்க வேற எக்ஸாமுக்கு படிச்சிக்கிட்டிருப்பாங்க... அதுபாட்டுக்கு அது... நம்மபாட்டுக்கு நாம... என்ன சரியா?

சரி சரி போய் வர்றேன்...

மங்கி & மன்னாரு வழங்கும் அசத்தல் அரட்டை

மங்கி மன்னாரு

அடடே மன்னாரு... என்னப்பா இவ்ளோ சந்தோஷமா வர்றே... என்ன விஷயம்?

அது ஒண்ணுமில்ல மங்கி... நம்ம பயலுக வெஸ்ட் இண்டீஸ வறுத்து எடுத்து வேஸ்ட் இண்டீஸ் ஆக்கிடாங்க பாத்தியா? அதான் சந்தோஷமா வர்றேன்...

யோவ் மன்னாரு... கொஞ்சம் வாயப் பொத்துமய்யா... அன்னிக்கு இந்த ரவிராம்பால் கொடுத்தானே ஒரு சூடு... ஒண்ணா ரெண்டா அஞ்சு சூடு... அதப் பாத்ததுக்குப் பொறகும் உனக்கு சந்தோஷமா? என்ன துள்ளல்.! என்ன ஆக்ரோஷம்? விளையாட்டுல அதெல்லாம் வேணாமா? நம்ம பயலுகளும் சொல்லி வெச்ச மாதிரி கேட்ச் கொடுத்து அவுட் ஆனாங்க...

ஆனா ஜெயிச்சிட்டாங்கள்ல?!

ஏதோ அந்த யுவராஜ் சிங்கு கொடுத்த ரெண்டு கேட்ச்ச கோட்டை விட்டதுனால...! அத மட்டும் பிடிச்சிருந்தாங்களோ.. தெரிஞ்சிருக்கும் சேதி...

ஆனாலும் அவரு நல்லாத்தான வெளயாடினாரு.... அத பாராட்ட மாட்டேங்கிறியே!

யோவ் மன்னாரு... ரன் எடுத்தாருங்கிறது வாஸ்தவம்தான்! ஆனா அவுட் ஆன விதத்தைப் பாக்கலியா நீ! ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீக்னெஸ் இருக்கற மாதிரி யுவராஜ் சிங்குக்கு ஒரு வீக்னெஸ் இருக்கு! எல்லாரும் ஸ்லிப்ல கேட்ச் கொடுத்து அவுட் ஆவாங்க... ஆனா நம்ம யுவராஜ் சிங்கு பவுலருக்கே கேட்ச் கொடுத்து அவுட் ஆவாரு.... என்னமோ தெரியல... நம்ம ஊரு சின்னப் பசங்க மாதிரி தெருவுல கிரிக்கெட் ஆடி பழகினாரோ... இல்ல.... நெட் பிராக்டீஸ்ல நேரா அடிச்சி பவுலருக்கு கேட்ச் பிராக்டீஸ் கொடுத்தே பழகியிருக்காரோ தெரியல..! அது என்ன எப்ப பாத்தாலும் பேட் நேரா ஸ்ட்ரோக் அடிக்கவே வருதே.. இத மாத்திக்கவே மாட்டாரோ?

நீ சொல்றத பாத்தா சரியாத்தான் இருக்கு மங்கி. ஆனா பெரும்பாலான பேட்ஸ்மேனும் இப்படித்தான வெளயாடறாங்க..?

அப்படிச் சொல்லாத! சச்சின் ஸ்ட்ரைட் ட்ரைவ் அடிப்பாரு... ஆனா பந்து பவுலருக்கு லெப்ட்லயோ ரைட்லயோ தரையோட தரையா போகும். பாக்கவே அட்டகாசமா இருக்குமே!

ஆமா மங்கி! நீ சொல்லும்போதுதான் நெனவுக்கு வருது... அன்னிக்கி சச்சின் செஞ்சுரி போட்டு சென்னைக்கு ஒரு சாதனை பட்டியலைக் கொடுப்பார்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க... ஆனா இவரு இப்படி செஞ்சிட்டுப் போவார்னு யாருமே எதிர்பாக்கலை. என்ன இருந்தாலும் டாரென் சமி சொன்ன மாதிரி அவரு ட்ரூ ஜெண்டில்மேன்தான்!

சும்மா ஒளராத மன்னாரு... அதே மாதிரி இந்த விஷயத்துல ரிக்கி பாண்டிங் சொன்னத கவனிச்சியா? அம்யபர் அவுட் கொடுக்காத பட்சத்துல நீ ஏன் முந்திரிக்கொட்டைத் தனமா வெளில போகணும்? பொறகு அவரு எதுக்கு இருக்காரு? அப்ப அம்பயருக்கு நீ என்னத்த மதிப்பு கொடுக்கறேங்கறேன்!

சரி அப்ப என்னதான் செய்யணுங்கிறே! தான் அவுட்டுன்னு தெரிஞ்சும் அழுகுனி ஆட்டம் ஆடச் சொல்றியா?

இல்லை... அம்பயர் அவுட் கொடுத்து ரிக்கி பாண்டிங் மாதிரி களத்துல நின்னு அட்டகாசம் பண்றதும் தப்பு; அம்பயர் அவுட் கொடுக்காத பட்சத்துல தானே களத்தை விட்டு நடையைக் கட்டுறதும் தப்பு. அவுட் கொடுக்காத அம்பயர் மூஞ்சிய எங்க கொண்டுபோய் வெச்சுப்பாரு..?

அப்ப விளையாட்டுல நியாய தர்மம்னு ஒண்ணும் இல்லியா?

ஏன்.. மூணாவது அம்பயர்னு ஒருத்தரு இருக்காரு. அவர்கிட்ட அப்பீல் கேப்பாங்க... அதான் யுடிஆர்எஸ் முறைன்னு ஒன்னு இருக்கே அதச் சொன்னேன்... அப்ப எப்படியும் தெரிஞ்சு அவுட் கொடுப்பாங்க. அத வுட்டுட்டு ஏன் தேவையில்லாம வெளில போகணும்..?

அதான் சச்சின் த கிரேட்னு சொன்னேன்... அவரு மனசுக்கு நியாயமா பட்டதால வெளில போனாரு... எப்படியும் மூணாவது அம்பயர் பாத்துட்டு அவுட் குடுக்கப்போறாரு... அதுக்கு எதுக்கு டயத்த வேஸ்ட் பண்ணனும்னு நினைச்சிருக்கலாம் இல்லயா? அதனால அவுட்டுன்னு மனசுக்குப் பட்டுதுன்னா தானா முன்வந்து வெளில போறதுதான புத்திசாலித்தனம். அதத்தான் அன்னிக்கு அவரு செஞ்சாரு. இத ஒரு முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு, ஒவ்வொரு பேட்ஸ்மேனும் செஞ்சாங்கன்னா...

ஏன் மூணாவது அம்பயரே தேவையில்லின்னு சொல்லி அவங்க பிழைப்புல மண்ணைப் போடறியா?

அட ஆமாம்... எப்படி சரியா கண்டுபிடிச்சே! என்ன இருந்தாலும் மங்கி மங்கிதான்!

சரி சரி வரப்போற ஆஸ்திரேலியா ஆட்டம் எப்படி இருக்கும்னு நெனக்கிறே!

அதான் பேசிக்கிட்டாங்களே மங்கி! வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்துல இந்தியா தோத்துட்டா ஆஸ்திரேலியாவோட மோதுறதைத் தவிர்க்கலாம்னு ரசிகர்கள் பரவலா பேசிக்கிட்டாங்களே! ரசிகர்களுக்கே அவ்வளவு பயம்!

அடப் போய்யா... இப்படியெல்லாம் கணக்கு போட்டா... எல்லாம் பிணக்குதான்! ஒழுங்கா விளையாடச் சொல்லப்பா நம்ம பசங்களை! சரி சரி பிறகு பார்ப்போம்... போய் வா!

ஓகே மங்கி... வெற்றிச் செய்தியோட விரைவில் உன்னை வந்து சந்திக்கிறேன்!

வியாழன், மார்ச் 10, 2011

ஞானமலை மேவு பெருமானே! ஞான பண்டிதப் பெருமானே!

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix