சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

Interview with Writer Balakumaran



photo click and interview ©senkottai sriram...

எழுத்தாளர் பாலகுமாரன் உங்களுடன் பேசுகிறார்.... இப்படி.
இது முழுக்க முழுக்க எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் பேச்சு நடையே...

விகடன் பிரசுத்தின் வெளியீடுகளை விளம்பரப்படுத்தி, வாசகர்களின் சுவைக்காக பேட்டிகள், கட்டுரைகள், டிப்ஸ் போன்றவை தாங்கி, விகடன் புக்ஸ் என்ற இலவச பிரதியை விகடன் நிறுவனம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதற்காக ஒரு நாள் எழுத்தாளர் பாலகுமாரனை சந்தித்து அவருடைய எண்ணங்களை வாசகர்களுக்காக எழுதினால் என்ன என்று தோன்றியது.

ஏற்கெனவே பல முறை அவரை சந்தித்திருந்தாலும், ஒரு சந்திப்பு என்னால் மறக்கமுடியாது. பாலகுமாரனின் உடையார் நாவலைப் படித்துவிட்டு, டாக்டர் ஒருவர் எப்படியாவது அவரை சந்தித்தே ஆகவேண்டும் என்றார். அவர் மலேசியாவில் புகழ்பெற்ற டாக்டர் ராமச்சந்திரன் என்பவர். அவருக்கு வரலாற்று புதினங்களில் ஆர்வம் அதிகம். அதனால் ஒரு முறை கலைமகள் நிறுவனத்துக்கு வந்திருந்தபோது, கலைமகள் பத்திரிகையில் போட்டி ஒன்றை அறிவிக்கச் செய்து பரிசுப் பணத்தையும் கொடுத்தார். அப்படியே கலைமகளில் 2004ல் சரித்திர நாவல் போட்டி நடத்தப்பட்டது.

அப்படி ஒரு வரலாற்றுப் புதினப் பித்தரான டாக்டர் ராமச்சந்திரனுக்கு உடையார் நாவல் உசுப்பேற்றியதில் வியப்பு ஒன்றும் இல்லையே. அதனால் நான், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், டாக்டர் ராமச்சந்திரன் மூவரும் பாலகுமாரன் அவர்களின் இல்லத்துக்கு ஒருநாள் சென்றிருந்தோம். மதிய வேளை அவருடைய இல்லத்தில் சாப்பாட்டோடு, வரலாற்று இலக்கியச் சாப்பாடும் நடந்தது.

அவருடன் நேர்காணல் நடந்தது. அதன் சுருக்கப்பட்ட பகுதி விகடன் புக்ஸ்ஸில் மார்ச் மாத இதழில் வெளியானது. ஆனால் அவருடைய ஒரு மணிநேர முழு பேட்டியிலும் அவர் சொன்ன விஷயங்கள் மிகப் பெரிது. அதை என் பிளாக்கில் இப்போது நெட் வாசகர்களுக்காகத் தந்திருக்கிறேன்.)
---------------------------------------------------------------------------------



(எழுத்துலகுக்கு வரவேண்டும் என்றால் நிகழ்வுகளை, சமூகத்தை உற்று கவனித்தல் என்பது மிக முக்கியமாச்சே என்று சொல்லிவிட்டு, நீங்கள் உற்று கவனித்த விஷயம் என்ன என்று கேட்டதற்கு அவரிடம் இருந்து வெளிவந்த சரளமான பதில் இது...)

என்னுடைய ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள பழமறநேரி. எங்கப்பாவுக்கு மருவூர். அருகில் உள்ள கிராமம்தான். இரண்டுமே மிகச் செழிப்பான கிராமங்கள். ஆனால் நான் கிராமத்தில் வளரவில்லை. இளவயதிலேயே பட்டணத்துக்கு வந்துவிட்டேன். முன்னர் சுஜாதா ஒரு வெண்பாவில் எழுதியதுபோல், நான் ராயப்பேட்டை பாலு. வசித்தது பட்டணமாயிருந்தாலும், கிராமத்து அந்தணக் குடும்பத்துக்குரிய ஆசார ஒழுக்க வகைகள் என்னிடம் இருந்தன. இந்த முரண்பாடு ஒரு குறிப்பிட்ட வயதுவரை அதிகமாக இருந்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் பழகும் எல்லா இடத்திலும் அந்தண மொழியே பேசிக்கொண்டிருத்தல்....

பலர் கேலி செய்தபோதும்கூட, அதை மாற்றிக்கொள்ளமுடியாமல் தவித்தேன்.
ஒரு பொதுவான தமிழுக்கு வர எனக்கு 20 வயது பிடித்தது. இப்படி கிராமத்து நகரத்து வேறுபாடுகளுக்கிடையில் வளர்ந்துவந்த எனக்குள் இந்த முரண்பாடு அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தின. இது என்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். ஆனால் மக்களை உற்று கவனிக்க இது முக்கியமாக இருந்தது. என் இள வயதில் பிராமண எதிர்ப்பு அதிகம் இருந்தது. டேய் குடுமி, பாப்பான் என்று கேலி பேசுகின்ற அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டுதான் வளர்ந்தேன். இப்படிச் சொல்கிறார்களே, நாம் எப்படி நடந்துகொள்வது என்ற குழப்பம் என்னுள் இருந்தது.

இதுதான் என்னை அந்த வயதில் உற்றுப் பார்க்க வைத்தது. மற்றவர்களையும் உற்றுப் பார்க்க வைத்தது.

என்னுடைய கிராமத்தில் அந்த மாதிரியான எதிர்ப்பு இல்லாததால் எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால் நகரத்துக்கு வந்தபின்பு அந்த எதிர்ப்புகளுக்கிடையே வாழ வேண்டியிருந்ததால், அதுவே என்னை விழிக்கச் செய்து இந்த உலகத்தைப் பார்க்க வைத்தது.

பின்னாளில் உலகத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தபோது, இந்தப் பிரிவுகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று எனக்குப் புரிந்தது. இந்தத் தெளிவு என்னுள் பிறந்த போது, நான் எழுதத்தொடங்கினேன். என்னுடைய அறிவுரைகள்... குழம்புங்கள். குழம்பியதுதான் தெளியும். அர்ஜுனனுக்கு பெரிய கலக்கம் வந்தது. எதிரே குருமார்கள். உறவினர்கள். சகோதரர்கள். எல்லோரையும் வெட்டி எறியவேண்டும், கொல்லவேண்டும் என்கின்ற நிலை. இது எப்படி சாத்தியம் என்று அவன் குழம்பினான். அப்போது அவனைத் தெளிவித்ததுதான் கீதை. அவனுக்கு அதில் தெளிவு அறிவுறுத்தப்பட்டது.

இது விஷாத யோகம். குழம்பியபின் அடையும் தெளிவு. என்னுடைய இளவயதில் பல்வேறு விஷயங்களால் கலங்கிய படி இருந்ததால். பெண்கள் நடத்தப் படுகின்ற விதம். ஆனால் பெண்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற அலட்டல்...பெண்களை அடிமைகளாக முட்டாள்களாக ஆண்கள் வைத்திருப்பதும், புத்திசாலிப் பெண்கள் மருகித் தவிப்பதும் நான் நிறையப் பார்த்திருக்கிறேன். இந்தத் தாக்கமும் என்னுள் அதிகம் இருந்தது.

அதேபோல அடுத்த கட்டத்துக்கு நான் வந்தபோது, மூத்த தலைமுறையினர் காட்டிய கடும் எதிர்ப்பு... என் தந்தை பேண்ட் போட்டுக் கொண்ட போது கடுமையாக கேலி செய்திருக்கிறது. குடுமியை எடுத்துக் கொண்டபோது, கடுமையாக எச்சரித்திருக்கிறது. அதேபோல் நான் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டபோது என் தந்தையார் என்னை கடுமையாக எச்சரித்தார். சினிமா ஒரு மனிதனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடும்; சினிமாவுக்குப் போகக்கூடாது என்று தடுத்தார். அதனால் ஒரு வருடத்துக்கு ஒரு சினிமாவோ ரெண்டு சினிமாவோ பயந்து பயந்து பார்த்திருக்கிறேன். சினிமாவின் பரிச்சயமே இல்லாமல் இருப்பவனே உத்தமமான இளைஞன் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் அவர். இன்னொரு கருத்து என் நண்பர்களிடையே இருந்தது. அதாவது, கதை புத்தகம் படித்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற கருத்து.

பொதுவாக புத்தகமே படிக்கக்கூடாது; அப்படியே படித்தாலும் திருக்குறள் பகவத்கீதை என்றுதான் படிக்கணும். பாடப்புத்தகம் தவிர படிக்கிறதுக்கு என்ன இருக்கு என்று கேட்கிற நண்பர்கள் இருந்தார்கள். இப்படி மழுங்கிய மனிதர்கள் என்னைச் சுற்றி இருந்ததைப் பார்த்து, நம் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டேன்.

இந்தத் தெளிவு எனக்கு என் தாயார்மூலம் பிறந்தது. அவர் என்னிடம் கதைப்புத்தகம் படி என்று சொன்னார்கள். பொன்னியின் செல்வன் வாங்கிக் கொடுத்தார்கள். காமிக்ஸ் என்ற ஆங்கில சித்திரக் கதைகள் நிறையப் படித்தேன்.அந்தப் படிப்புத்தான் என்னை உற்றுப்பார்க்க வைத்தது. கற்பனை வளர்த்தெடுக்கத் தூண்டியது. இது ஒரு சந்தோஷமான மாற்றம். தான் துணையாக இருக்க முடியாத நிலையில் எனக்குத் துணையாக புத்தகங்களை அனுப்பினார். என் தந்தையின் சொற்படி நான் சினிமா அதிகம் பார்க்கவில்லை. எம்.ஜி.ஆரா சிவாஜியா என்று நண்பர்கள் மத்தியில் பேச்சு வந்தபோது நான் சிவாஜிகட்சிதான்! இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களின் தொகுப்பாக வளர்ந்தவன் தான் இந்த பாலகுமாரன்.
--------------------------------------------------------------

(இப்போது பழுத்த ஆன்மீகவாதியாகத் தோற்றமளிக்கும் உங்களுக்கு உள்ளுக்குள்ளே ஆன்மீகத் தேடல் எப்போது ஏற்பட்டது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் இது...)

இதே காலகட்டத்தில்தான் எனக்குள் ஆன்மிகத் தேடலும் ஏற்படத் தொடங்கியது. பத்திரிகைகள் படிக்கத் தொடங்கியிருந்தேன். மஞ்சரியில் தொடராக வந்த ரமணரின் வாழ்வும் வாக்கும் என்ற ஆன்மிகத் தொடரை தொடர்ந்து படித்து வந்தேன். அந்தத் தொகுப்புகளைத் திரட்டி வைத்தேன். ரமணரைப் பற்றி படித்தபோது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் ஒரு தேடலை எனக்குள் ஏற்படுத்தியது. தேடலின் ஆரம்பம் என்ன? வைராக்கியம். வைராக்கியம் எப்போது வரும்? ஜபம் செய்தால் வரும். ஜபத்துக்கு மூலம் எது? குரு? குருவுக்கு எங்கே போக...?

அப்போது அருகில் இருந்த கௌடியா மடத்துக்குப் போனேன். அந்த மடத்தில் சேர்ந்து ஒருமாதம் ஆகியிருந்த ஒரு பிரமசாரி ஸ்வாமியிடம் போய் எனக்கு ஜபம் செய்ய ஏதாவது மந்திர உபதேசம் செய்யுங்களேன் என்று வேண்டினேன். ராமா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டிரு என்று சொன்னார். இல்லை இல்லை எனக்கு ஏதாவது மந்திரம் சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டேன். அப்படியா கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இந்த மடத்தில் சுற்றிச் சுற்றி வா என்றார்.

நானும் சுற்றத் தொடங்கினேன். நூறு சுற்று சுற்றிவரச் சொன்னார். நான் அவர் அங்கு எங்காவது இருந்துகொண்டு நான் சுற்றுவதை எண்ணிக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டே சுற்றினேன். ஆனால் அவர் அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் 68 சுற்றோடு நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் அப்படிச் சுற்றியது என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அங்கே தியான ஹாலில் இருந்த கிருஷ்ணர் விக்கிரகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களில் கண்ணீர் பெருகியது.

அப்போதுதான் ஒரு விஷயத்தை எங்கிருந்து பார்க்க வேண்டும் என்ற சூட்சுமத்தைப் புரிந்துகொண்டேன். எதையும் நமக்குள் இருந்து விலகி நின்று பார்க்கக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனக்கு நிதானம் கைவந்தது.

இந்த குணமே எனக்கு கதை எழுத மிகவும் உதவிகரமாக இருந்தது. வாழ்க்கையின் பரந்த அனுபவங்கள், அத்தோடு சிறிதளவு ஆன்மிகத் தெளிவு இவையே அதற்கு உதவியது.
-----------------------------------------------------------------
(ஆன்மிகவாதியான உங்களுக்கு எப்போது இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்டது என்றும், இலக்கிய அமைப்புகள் எதனுடனாவது தொடர்பு கொண்டிருந்தீர்களா என்றும் கேட்டபோது, தன்னுடைய இலக்கிய ஆர்வம் துளிர்விட்ட கதையை அழகாகச் சொன்னார் பாலகுமாரன். அது...)

கசடதபற என்ற இலக்கிய வட்டத்துக்கு ஒருநாள் யதேச்சையாகப் போனேன். நா.முத்துசாமி என்ற கூத்துப் பட்டறை நண்பர் எனக்கு கசடதபற நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்தோம். அவர் அக்கவுண்ட்ஸ், நான் பர்ச்சேஸ். முத்துசாமியின் மூலம், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பரிச்சயம் கிடைத்தது. இவர்கள் மெத்தப் படித்தவர்கள். ஆங்கில இலக்கியம் தெரிந்தவர்கள். தமிழில் எழுத வேண்டுமென்றால் ஆங்கில இலக்கியப் பரிச்சயம் வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்தாக இருந்தது. இன்னொரு சாரார் தமிழில் எழுத வேண்டுமென்றால், பழந்தமிழ் இலக்கியங்களில் பழக்கம் இருக்க வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு கருத்துக்களுமே எனக்கு மிகுந்த உவப்பைத் தந்தன. ஆக, அந்த இளம் வயதில் எனக்கு ஆங்கில இலக்கியமும் பழந்தமிழ் இலக்கியமும் பழக்கமாகின.
ஹொரீஷியஸ் லீடர்.. நன்றாகப் படித்தேன். தடி தடியாகப் புத்தகங்கள் இருந்தன. ஹக்ஸ்லி, ஐண்ட் ராண்ட், கூந்தர் க்ராஸ் என்று நிறையப் படித்தேன். என் தாயார் தமிழ்ப் பண்டிதராக இருந்ததால், வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருந்தன... என் தாயார் நிறையச் சொல்லித்தந்தார்கள். சுலோசனா என்று பெயர். பள்ளியில் பணியிலிருந்தார். யாப்பு சொல்லிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து மரபுக் கவிதைகள் முதலில் எழுதிப் பழகினேன். எதுகை மோனையும் சப்த ஒழுங்கும் அமைந்த கவிதைகள் புனைந்தேன். ஞானக்கூத்தன் முத்துசாமி போன்றவர்கள் உற்சாகப் படுத்தினார்கள். நான் நிறையப் படிப்பதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள்.

லாயிட்ஸ் ரோடில் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி வைத்திருந்த பழனி என்பவர் இருந்தார். அவரிடம் எல்லா புத்தகங்களும் இருந்தன. ஒரு புத்தகத்துக்கு ரெண்டு அணா. அவ்வளவு ரெண்டணா என்னிடம் இல்லை என்பதால், பல புத்தகங்களை இந்தா சீக்கிரம் படிச்சிட்டுக் கொடு என்று புத்தகங்கள் நிறையக் கொடுத்தார். அவர் கொடுக்கும் புத்தகங்கள் நன்றாகவே இருக்கும். காசு இல்லாமல் அவருடைய லெண்டிங் லைப்ரரியில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்.

கசடதபற மற்றும் நண்பர்கள் கொடுக்கும் புத்தகங்கள், ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி என்ற இந்த வட்டத்துக்குள்ளேயே என் புத்தக வாசிப்பு வட்டம் அமைந்துவிட்டது. பல ஆங்கிலப் புத்தகங்கள் அங்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற அளவுக்கு சேர்த்து வைத்திருந்தார். உதாரணத்துக்கு ஜேம்ஸ் ஹால்டிசேஸ் புத்தகம். அது வேறு எங்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்தப் புத்தகத்தைப் படித்தால் ஆங்கிலம் சரளமாக வந்துவிடும். காரணம் அதில் நிறையப் பொதிந்துள்ள டயலாக்ஸ்... அதனால் ஆங்கில பேச்சுத்திறனும் வளரும் என்பது அந்தப் புத்தகங்களின் பலம். என்ன பேசுகிறார், என்ன கேட்கிறார் என்று புரிந்துவிடும். ஆங்கில வொக்கப்லரி அருமையாக அமைந்துவிடும்.

அலுவலகச் சூழல், இதுபோன்ற புத்தகங்களின் துணை போன்றவற்றால் என் ஆங்கில அறிவு நன்கு வளர்ந்தது. இப்படி முதலில் கவிதை பழகி, அதன் பின் கவிதையிலிருந்து உரைநடைக்குத் தாவினேன். அதனால் உரைநடை நன்கு கைவந்தது..
------------------------------------------------------------------
(அப்பாடா... எல்லோரையும்போல நீங்களும் கவிதைக்குத்தான் வந்தீர்களா? அப்படியிருந்தும் நீங்கள் ஏன் கவிதையைக் கைவிட்டீர்கள்? என்று கேட்டதற்கு அவரிடமிருந்த வந்த பதில் இதுதான்...)

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அந்த சமயங்களில் கதை, கவிதைகளுக்கு நல்ல மதிப்பும் வரவேற்பும் இருந்தது. ஆனால் முன்னர் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் அவ்வளவாக மதிப்பும் இருந்ததில்லை; புறக்கணித்தலும் தொடர்ந்தது. அதற்கு முன்னர் எல்லாவற்றிலும் ஆங்கிலமே கோலோச்சியது. ஒரு கடிதம் எழுதினால்கூட, நமஸ்காரம் ஹவ் ஆர் யு? என்றுதான் கடிதம் தொடரும். ஆங்கிலம் அறிந்திருத்தலே அறிவு என்று கருதப்பட்ட காலம் ...

இப்படிப்பட்ட கும்பல் சூழ்ந்திருந்த நிலையில் இருந்து சற்றே விலகி, தமிழில் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அது அவ்வளவாகப் பாராட்டப்படவில்லை... பின்னாளில் நான் அதிகம் எழுதியபோது என்னை கவனிக்கத் தொடங்கினார்கள். கசடதபற-தான் முதல் கதைக்கு கை கொடுத்தது. அதன் பின் கதைகள் எழுத பயிற்சி மேற்கொண்டு நிறைய கதைகள் எழுதத் தொடங்கியிருந்தபோதுதான், குமுதம் நிருபராக இருந்த பால்யூவின் அறிமுகம் கிடைத்தது.

அந்த நிலையில் குமுதம் பால்யூவின் நட்பு இல்லையென்றால் நான் தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே! குமுதத்தில் கதை எழுதணுமே என்று எண்ணியபோது, பால்யூதான் பாலமாக இருந்தார். எப்படி எழுதுவது என்று யோசித்தபோது, உனக்கு என்ன வருமோ அதைச் செய், அவர்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் வரும்... என்ன வாசகர்களுக்கும் புரிகிற மாதிரி எழுதணும்; அதைத்தானே அவர்களும் எதிர்பார்ப்பார்கள் என்று கூறி என்னை உசுப்பேற்றினார்.

ஒரு விஜயதசமி நாளில் என்னயும் நண்பர் சுப்பிரமணிய ராஜுவையும் குமுதத்துக்கு அழைத்தார். எஸ்.ஏ.பி எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு, ரா.கி.ரங்கராஜனிடம் இவர்கள் இருவரும் கெட்டிக்காரர்கள் என்று சின்முத்திரை காட்டிச் சொன்னார். அது பெரிய விஷயம் என்று பின்னர் பால்யூ என்னிடம் சொன்னார். அதன்பிறகு குமுதத்தில் கதைகள் எழுதினேன். அது ஒரு மகத்தான ஆரம்பம் எனக்கு. கெட்டாலும் ஆண்மக்கள் என்ற கதை எழுதினேன். நல்ல வரவேற்பு இருந்தது. நடை நன்றாக இருக்கிறதே என்று அப்போது இருந்த எழுத்தாளர்கள் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன். அது என் நான்காவது கதை என்றாலும் அதிகம் பேர் என்னை கவனிக்க வைத்த கதை.
---------------------------------------------------
(உங்களுடைய முதல் நூல் எது என்று நினைவிருக்கிறதா? அந்த நூல் வெளியான போது உங்கள் உணர்வு எப்படியிருந்தது என்று கேட்டபோது அவருடைய சிறுகதைத் தொகுப்பு நூல்தான் முதல் நூல் என்று சொல்லி சிலவற்றைச் சொன்னார், இப்படி...)

சிறுகதைத் தொகுப்பு நூல்தான்! சின்னச்சின்ன வட்டங்கள்-. அதை நர்மதா பதிப்பகம் தொகுத்து வெளியிட்டது. அதன்பிறகு குங்குமத்தில் சாவி ஆசிரியராக இருந்தபோது, அதில் ஒரு குறுநாவல் எழுதச் சொன்னார். நன்றாக வந்தது. அந்த நேரம் குங்குமத்திலிருந்து, சாவி என்கின்ற புதிய பத்திரிகையைத் தொடங்கினார். ஒரு புதிய பத்திரிகை, புதிய சூழல் என்று நானும் அவருடனேயே சென்றேன். அவர் சாவி பத்திரிகையை முதலில் கல்கண்டு போல் செய்திகளின் தொகுப்பாகக் கொண்டுவரவே எண்ணினார். ஆனால் பிறகு, அதில் சிறுகதை, கவிதை, பேட்டி என்று இடம்பெறச் செய்ய எண்ணினார். என்னையும் முதலில் நேர்காணல்கள் எடுத்துத் தரவே பணித்தார். நானும் பேட்டிகள் எடுத்து எழுதத் தொடங்கினேன்.
-----------------------------------------------------------
(பேட்டிகள் எடுத்தேன் என்று சொன்னவுடனே உங்களுக்கு நன்கு நினைவில் இருக்கும் பேட்டி என்று கேட்டேன். ஆனால் அவருடைய பேட்டி, ஒரு நேரடிப் பேட்டியாக அமையாமல் ஒரு பேட்டிக் கட்டுரையாக அமைந்திருக்கிறது. அதை அவர் சொன்னபோது, மகிழ்வும் துக்கமும் ஒருசேர இருந்ததை உணரமுடிந்தது. காரணம் என்ன என்பதை அவருடைய வார்த்தையிலேயே நீங்கள் பார்த்தால் தெரியும்...)

நன்றாக நினைவிருக்கிறது... நடிகை ஷோபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சமயம். பால்யூவின் மகன் உடனே போன் செய்து, அந்தத் தகவலை என்னிடம் சொன்னார். நானும் ராணிமைந்தனும் அங்குப் போனோம். போலீஸ் வரும் முன்னே அங்குப் போய் பார்த்தேன். அவர் அம்மா மிகவும் அழுதார்கள். அவர்களிடம் பேசினோம். என் பொண்ணு போயல்லோ; என் ஜீவன் போயல்லோ என்று அரற்றினார்கள். அதையே தலைப்பாக வைத்து ஒரு கட்டுரையை எழுதினேன். அது அப்போது மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.
-----------------------------------------------------
(இந்த நிலையில் பாலகுமாரன் என்ற பத்திரிகையாளன் சிறப்பாக ஜொலித்திருக்க முடியும். ஆனால் தனக்குள் மறைந்திருந்த எழுத்தாளனை விழிக்க விட்டு, பத்திரிகையாளனை அவர் மீளாத் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டார் என்பதை அவர் சொன்ன விதம் இப்படித்தான்...)

பேட்டிகள் எடுத்துக் கொண்டிருந்தபோது, அது எனக்கு திருப்தி தரவில்லை. எனக்கு பத்திரிகையாளனாக வேண்டும் என்ற ஆசை துளிக்கூட இல்லாதிருந்தது. எனக்குள் இருந்த எழுத்தாளன் அவ்வப்போது கொம்பு சீவிக்கொண்டிருந்தான். சாவியில் மாலனும் சுப்பிரமணிய ராஜுவும் இருந்தார்கள். மாலனுக்கு பத்திரிகையாளனாக ஆசை இருந்தது. ஒருமுறை எம்.ஜி.ஆரோடு நேர்காணல் எடுக்க ஒரு வாய்ப்பு வந்தது. என்னை அவர்கள் அழைத்தார்கள். ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்னை பத்திரிகைப் பணியிலேயே முழுவதுமாக இருத்திவிடுவீர்கள்; எனக்கு எழுத்தாளனாகவேண்டும் என்ற விருப்பம்தான் உள்ளது என்று சொல்லி அதைத் தவிர்த்துவிட்டேன்.

நான் கதை எழுத ஆயத்தமாக இருந்தேன். சிம்ப்ஸன் நிறுவனத்தில் பணி செய்தபோது, ஆளும் தி.மு.க அரசை எதிர்த்து அப்போது ஒரு வேலை நிறுத்தம் நடந்தது. கம்யூனிஸ்டுகளின் அந்தப் போராட்டம் மோசமான முறையில் எதிர்கொள்ளப் பட்டது. எனக்கும் அது மோசமான அனுபவமாகவே இருந்தது. சிறை அனுபவமும் இருந்தது. இதை மனதில் வைத்து மெர்க்குரிப் பூக்கள் என்று ஒரு நாவல் எழுதினேன்.

அந்த நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது, சாவி என்னை அழைத்து எழுதுங்கள்; நன்றாக வந்தால் தொடர்ந்து போடுவேன், இல்லை என்றால் ஐந்தாவது வாரத்திலேயே நிறுத்தி விடுவேன் என்றார். அதனால் திரும்பத்திரும்ப பார்த்துப் பார்த்து எழுதினேன். அது நன்றாகவே வந்தது. நீயே படம் வாங்கிக் கொடு என்றார். அதனால் அதை எடுத்துக் கொண்டு மணியம் செல்வனிடம் ஓடுவேன். இந்த இடத்துக்கெல்லாம் பஸ்ஸில் செல்வேன். சைக்கிளும் பஸ்ஸும்தான் அப்போதைய துணை. ஆனால் பஸ்ஸை விட சைக்கிளே எனக்கு துணையாக இருந்தது. ஒரு நாளுக்கு நான்கு மணிநேர தூக்கமே இருக்கும். இளம் வயதில் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் வேலை வேலை என்று இருப்பேன். அலுவலகம் என் வயிற்றுக்காக! இலக்கியம் என் வாழ்வுக்காக என்று தெளிவாக இருந்தேன். இந்த இரண்டையும் விடவில்லை. சனி ஞாயிறுகளில் எல்லோரும் ஓய்வாக இருக்கும் போது நான் இதற்காக ஓடிக்கொண்டிருப்பேன்.
-------------------------------------------
(உங்களுடைய பிரபலமான தொடர்கள் என்ன என்றுகேட்டபோது அவருடைய பழைய நினைவுகளை இப்படி வெளிப்படுத்தினார்...)

விகடனின் ஒரு முறை தனிப் புத்தகமாகப் போடுவதற்கு வாய்ப்பு அமைந்தது. மூன்று பெண்களைப் பற்றிய நாவலாக அது அமைந்தது. அந்த மாதிரியான ஒரு திறப்பு விகடனில் அமைந்தது. அதன் பிறகு எழுதுவது எனக்கு வெறியாகப் போனது. விகடனில் வந்தபிறகு நாம் ஒரு சாதாரண எழுத்தாளன் இல்லை; மிகப் பெரிய எழுத்தாளன் என்று எனக்குள் ஒரு கர்வம் ஏற்பட்டது. ஆனால் அதை எங்கும் வெளிப்படுத்தியதில்லை; எனக்குள்ளேயே வைத்துக் கொண்டேன்.

அதன் பிறகு இரும்புக் குதிரைகள் \ கல்கியில் வந்தது. தாயுமானவன்; ஆனந்த வயல் போன்றவை பிறகு விகடனில் வந்தது. மீண்டும் குமுதத்தில் ஒரு தொடர்கதை... இப்படி ஒரு கட்டத்தில் ஏழு நாட்களிலும் ஏழு பத்திரிகைகளில் என் தொடர் வந்தது. எதில் திருப்பினாலும் என் படைப்புகள். ஒரு சமயத்தில், தீபாவளி மலர்கள் எல்லாவற்றிலும் என் படைப்புகள் இடம்பெற்றன. விகடனில் ஒரு படி கூடுதலாக, பேனர்கள் வைத்து நன்றாக விளம்பரப்படுத்தி உற்சாகப் படுத்தினார்கள். இப்படிப்பட்ட சந்தோஷங்கள் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்க வேண்டும், அது எனக்கு நன்றாகவே கிடைத்தது. அதை நன்கு அனுபவித்தேன்.

இந்த நேரத்தில் என்னால் டிராக்டர் கம்பெனியில் தொடர்ந்து பணியில் இருக்க முடியவில்லை. முழுநேர எழுத்தாளனாக விரும்பினேன். அதனால் கம்பெனியின் சேர்மென் சிவசைலம் அவர்களிடம் போய், நான் வேலையை விட்டுவிட்டு எழுத்துலகத்துக்குப் போகப்போகிறேன். அப்படி அங்கு ஜெயிக்க முடியாமல் போனால் மீண்டும் எனக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுத் தரவேண்டும் என்று கேட்டேன். அவரோ, நீ இங்குத் திரும்பி வரமாட்டாய்; எங்கோ உயரத்துக்குப் போகப் போகிறாய். நன்றாக வருவாய் என்று ஆசியளித்து அனுப்பிவைத்தார்.

பத்திரிகையில் சேர்ந்தால் வெளியில் எழுத விடமாட்டார்கள். நேரமும் இருக்காது என்பதால், வெறுமனே வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டேன். அதற்கு மிக முக்கியக் காரணம் என் இரு மனைவிகள். அவர்கள் இருவரும் அரசுப்பணியில் இருந்தார்கள். அவர்களது வருமானம் போதும் என்று தெரிந்தது. எனவே அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டார்கள். நான் சந்தோஷமாக அமர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். எந்தக் கவலையும் இல்லாமல், எனக்குப் பிடித்த நேரத்தில், எனக்குப் பிடித்த விஷயத்தை எனக்குப் பிடித்த வகையில் எழுத எனக்கு வாய்ப்பு அந்த நடுத்தர வயதில் கிடைத்தது. அது ஒருவகையில் கொடுப்பினைதான்!
------------------------------------------------
(எழுத்தாளனாக உங்களுடைய பயணம் நன்றாக அமைந்திருந்தது. அதுபோல் சினிமாத்துறையிலும் ஒரு எழுத்தாளனாக நுழைந்து உங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்தினீர்களே... அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டபோது, தனக்கு அச்சு ஊடகங்களில் கிடைத்த செல்வாக்கும் திருப்தியும் வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்னதாகத்தான் நான் உணர்ந்தேன். அவர் சொன்னதைப் படித்தால் உங்களுக்கும் அதுபோன்ற எண்ணம் தோன்றலாம். அவர் சொன்னது இதுதான்...)

நன்றாக எழுதிக்கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் சினிமாவுக்குள் போக வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட்டது. இன்றைய நிலையில் பாரதியாக இருந்தாலும் குறைந்தபட்சம் கவிதை எழுதவாவது சினிமாவுக்குள் பிரவேசித்திருப்பார். எனக்கு ஆசை வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இயக்குனராக ஆசை இருந்தது. சினிமாத்துறை என்பது நிர்வாகம் சேர்ந்தது. எழுத்தாளன் வெகுளித்தனமானவன்.

ஆனால் சினிமாவுக்கு நிர்வாகத் திறனும் தேவை என்பதால் என்னால் அதன் வேகத்துக்கு, அதன் தன்மைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனால் என்னை சினிமாத்துறை நன்றாகவே வைத்திருந்தது. பாலசந்தரிடம் போய்ச் சேர்ந்தேன். இருந்தபோதும் அத்துறை எனக்கு தெளிவில்லாமலே இருந்தது. சினிமா ஒரு கலைத்துறை என்று கலைக்கண்ணோட்டத்தோடு போகிறவன் விழிபிதுங்கிவிடுவான். சினிமா ஒரு பக்கா வியாபாரம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாவுக்கு ஒரு ஆடிட்டர், எம்.பி.ஏ, ஒரு நிர்வாகிதான் தேவை. அதோடு கொஞ்சம் கலை ஆர்வமும்வேண்டும். எனக்கு பலரும் சொன்னார்கள். ஆனால் அது சரியாக என் மூளையில் பதியவில்லை. என்னிடம் ஒரு எழுத்தாளனுக்குரிய வெகுளித்தனமே இருந்ததால் என்னால் அதில் பெரிதாக வெற்றி பெறமுடியவில்லை.

---------------------------------------------------
(சினிமாவைப் பற்றி அவருடைய கருத்து இப்படிப் போய்க்கொண்டிருந்ததால், அவரிடம் சினிமாவுக்கும் கதை எழுதுவதற்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன விளக்கங்கள், எழுத்துத் துறையில் இருக்கும் அனைவருக்கும் ஒரு டிப்ஸ் போல அமைந்திருந்தது. அவர் சொன்ன விளக்கங்கள் இவைதான்...)

சினிமாவுக்கு செய்திகளும் அலங்கார விவரணைகளும் தேவையில்லை. ஆனால் கதைக்கு இது தேவை. என்ன சொல்லப்போகிறோம் என்பதை விட எப்படி சொல்லப்போகிறோம் என்பதுதான் முக்கியம். ஆனால் கதையில், என்ன சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். மேட்டர் இல்லை என்றால் கதை வெற்றிபெறாது. சினிமா விஷுவல் என்பதால், ஒருவன் சொல்வதை ஓடி வந்து சொல்கிறனா, நடந்து வந்து சொல்கிறானா, உருண்டு வந்து சொல்கிறானா என்பதை எல்லாம் காட்சிகளில் காட்டியாக வேண்டும்.

அம்மா நான் பாஸாயிட்டேன் என்று எம்.ஜி.ஆர் சொல்கிறார். அதில் இந்த வசனம் முக்கியம் இல்லை. எம்.ஜி.ஆர் எப்படி வந்து சொல்கிறார் என்பதுதான் முக்கியம். கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு திபுதிபுன்னு ஓடிவந்து வசனத்தைச் சொல்லி, அப்படியே அம்மாவை கட்டிக்கொண்டு ஒரு சுற்று சுற்றி மீண்டும் மூச்சு வாங்க அம்மா நான் பாஸாயிட்டேன் என்று காட்சியில் ஒரு விறுவிறுப்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடலாம். ஆனால் இந்த அனுபவத்தை கதையில் கொடுக்க முடியாது. கதையில் வேகமாக நகர்த்தணும். அதனால் வர்ணனைகளைத் தவிர்த்துவிடுவேன். சினிமாவில் உணர்ச்சிக் கொந்தளிப்பு இருக்கவேண்டும். கதையில் அதை வார்த்தையில் கொடுத்துவிடலாம். சினிமாவில் அதன் பிறகு அம்மா திருஷ்டி கழித்துப் போடுகிறேன் என்று சொல்லி, உணர்ச்சியின் விளிம்புக்கு எடுத்துச் சென்று நிகழ்வைக் காட்டும்போது பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுடைய முகத்திலும் சிரிப்பும் மகிழ்வும் தாண்டவாமாடும். ஆனால் படிக்கும் வாசகன் இதை தனக்குள் அனுபவித்துக் கொள்ளவேண்டும்.

சீதா லட்சுமி அழகாக இருந்தாள். இந்த ஒரு வார்த்தை எழுதினால் போதும். ஊரே அவளைக் கண்டு வியந்தது. இது எக்ஸ்ட்ரா. பக்கத்துவீட்டு பாலு அவளை விரும்பினான். அவ்வளவுதான் இதோடு முடிந்து போகும். இனிமே சீதாலட்சுமி என்ன செய்கிறாள், பாலு என்ன பண்ணுகிறான் என்பதெல்லாம் கதையில் போய்க்கொண்டிருக்கும். ஆனால் சினிமாவில் காட்டும்போது, அந்த சீதாலட்சுமி அழகாக இல்லை என்று ரசிகன் மனதுக்குத் தோன்றினால்... போயும்போயும் இதப் போய் அழகுங்கிறானே... என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவான். எழுத்தில் அந்த நிலை இல்லை. எழுத்து வாசகனுக்கு கற்பனையை ஏற்படுத்தும். சினிமாவுக்குள் நான் இருந்தபோது அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதைப் புரிந்து கொண்டபோது எனக்கு வயதாகிவிட்டது.
----------------------------------------------
(உங்களுடைய நாவல் அனுபவம் எப்படி அமைந்தது என்று கேட்ட போது, அவருடைய பதில் இப்படி இருந்தது...)

யோகி ராம்சுரத் குமார் நட்பு கிடைத்தது. கடவுள் தரிசன அனுபவம் அது. அவர் எழுத்தின் ஆரம்பப் புள்ளியை அணுகும் அனுபவத்தைத் தந்தார். அதன் பிறகு கவித்துவ நடையோடு எழுத்து அமைந்தது. சரித்திரம் பக்கம் பார்வை சென்றது. சரித்திர நாவல் எழுதவேண்டும் என்பதற்காக அது தொடர்புடைய இடங்களுக்குச் சென்று அவற்றோடு ஒட்டி உறவாடி, அந்த அனுபவத்தை கற்பனையில் கொண்டுவந்து எழுத்தில் வடித்தேன். அதற்காக குதிரையேற்றம் கூடக் கற்றுக் கொண்டேன். சரித்திரக் கதைக்காக குதிரையேற்றம் கற்றுக் கொண்டது நான் ஒருவன்தான் என்று நினைக்கிறேன். இப்படி கதைக்குத் தொடர்பானவைகளை நேரில் கண்டு அதன் வர்ணனைகளோடு எழுத ஆர்வம் பிறந்து.

அதன் ஒரு வெளிப்பாடாகத்தான், பயணிகள் கவனிக்கவும் என்று விகடனில் எழுதினேன். விமான நிலையத்துக்குச் சென்று, அங்கு நடப்பவைகளை துல்லியமாகக் கவனித்து எழுதினேன். அடுத்தடுத்து பல நாவல்கள் இந்த அனுபவத்தைக் கொடுத்தன.

கல்திரை நாவல் எழுதும்போது, அந்த நாவலின் மையக்கருத்துக்கான கல்வெட்டு கிடைத்தது. தொல்பொருள்துறையைச் சேர்ந்த நண்பர்கள் உதவினார்கள். சரித்திரக் கதை எழுதும்போது, பெரும்பாலும் தொல்பொருள் வல்லுனர்களை பலரும் மறந்துவிடுவார்கள். ஆனால் நான் உடையார் நாவல் எழுதியபோது, அவர்களுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்திருக்கிறேன்.

----------------------------------------------------
(உங்களுடைய எதிர்கால எழுத்துலக ஆசைகள் என்ன என்று கேட்டபோது கனத்த மனத்துடன் சிலவற்றைச் சொன்னார்....)

லைப் ஆப்டர் டெத்... அதாவது மனிதன் இறந்த பிறகு அவன் வாழ்க்கை என்ன என்பதைப் பற்றி எழுத ஆசை. தமிழில் அது எழுதப்படாத நாவலாக இருக்கும். அது வெறும் ஆவி உலகம் தொடர்பானதல்ல...

வெற்றியடைவதற்கு மூச்சுப் பயிற்சி தியானம் கடவுள் நம்பிக்கை போன்றவை தொடர்பான ஒழுக்க விதிகளை வைத்து ஒரு நூல் எழுத ஆசை.

யோகிராம் சுரத் குமாரின் வாழ்க்கைப் பதிவுகளை எழுத ஆசை.

அதற்கு பிறகு ஒன்றும் எழுத மாட்டேன் என்று நினைக்கிறேன்.

237 நாவல்கள், படைப்புகள் இதுவரை எழுதியாயிற்று. 62 வயது. இரண்டு மனைவிகளோடு அறுபதாம் கல்யாணம் நிறைவாக நடைபெற்றது. ஒரு மகள். அவளுக்குத் திருமணமாகி இப்போ எனக்கு ஒரு பேரன் இருக்கிறான். மகன் நல்ல வேலையில் இருக்கிறான். அவனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும். ஒரு எழுத்தாளனாக வாழ்ந்து நான் ஜெயித்திருக்கிறேன். ஏன் எழுத வந்தோம் என்று இதுவரை எண்ணியதில்லை.

-------------------------------------------------
(எழுத்தாளனாக வாழ்ந்து ஜெயித்திருக்கிறேன் என்று நிறை மனதோடு சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பேர் ஏன் இந்தத் துறைக்கு வந்தோம் என்று அலுப்பையும் சலிப்பையும் வெளிப்படுத்தும்போது, அவருடைய தன்னம்பிக்கை பதில் எனக்கு உற்சாகத்தைத் தந்தது, எனக்கு மனச்சோர்வு வரும்போதெல்லாம் இந்த வார்த்தைகள் காதுகளுக்கருகில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டே விடைபெற்றேன்.)

புதன், ஏப்ரல் 22, 2009

பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் 2008 விருது...


பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் 2008 விருதினை ஏப்ரல் 18ம் தேதி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரிய எழுத்தாளர் புகழ்பெற்ற திரு.ரமாகாந்த் ரத் வழங்க அடியேன் பெற்றுக்கொண்டேன். நிகழ்ச்சி மதியம் 2.30க்கு மேல் நடந்தது. காலை நடந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து சாதனா சம்மான் விருதினைப் பெற்றுக்கொண்டார்.
------------------------------------------------------------------
இது பற்றிய பத்திரிகைக் குறிப்பு:


ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் இளைஞர்களுக்காக வழங்கப்படும் பாரதிய பாஷா பரிஷத்தின் யுவ புரஸ்கார் -தேசிய இலக்கிய விருதை, இந்த ஆண்டு தமிழ்நாட்டின் இளம் எழுத்தாளர் செங்கோட்டை ஸ்ரீராம் பெற்றார்.
கொல்கத்தாவில் உள்ள பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு, நம் நாட்டின் அனைத்து மொழிகளில் இருந்தும், இலக்கியச் சேவை செய்பவர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, நாட்டின் உயரிய மொழி, இலக்கிய அமைப்பாகப் போற்றப்படுகிறது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த இலக்கியவாதிகளையும் ஒரே மேடையில் அமரவைத்து கௌரவிக்கிறது. விருதுக்கு, வரிஷ்த புரஸ்கார் (சான்றோர்) மற்றும் யுவ புரஸ்கார்(இளைஞர்) என இரண்டு பிரிவுகளில் தலா நால்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கொல்கத்தாவில் ஏப்ரல் மாதம் 18ம் தேதி பாரதிய பாஷா பரிஷத் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யுவ புரஸ்கார் இளைஞர் விருதினை புகழ்பெற்ற ஒரிய எழுத்தாளர் ரமாகாந்த் ரத் வழங்க, செங்கோட்டை ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார். இந்த விருது, 11,000 ரூபாய் பொற்கிழியும் நினைவுப் பரிசும் கொண்டது.
தேசிய இலக்கிய விருது பெறும் செங்கோட்டை ஸ்ரீராம், இளம் வயதிலேயே பாரம்பரியம் மிக்க மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கருத்துகளைத் தாங்கிய கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். தேசியக் கண்ணோட்டத்துடன் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் குழு மூலம் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். பழந்தமிழ் இலக்கியத்தை புதிய கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். மஞ்சரி இதழில் உங்களோடு ஒரு வார்த்தை எனும் தலைப்பில் இவர் எழுதிய இலக்கியத் தொடர் கட்டுரைகள், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தற்போது விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் இவர், இலக்கியம், ஆன்மிகம், வரலாற்றுச் செய்திகள் தாங்கிய ஆறு நூல்களை எழுதியுள்ளார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாக இவர் தெரிவித்தார்.
-------------------------------------------

வியாழன், ஏப்ரல் 09, 2009

தென்றலில் இருந்துதான்; ஆனால் வீசுவது புயல்!


வட அமெரிக்கத் தமிழர்கள் சார்பில் நடத்தப்படும்
தென்றல் மாத இணைய இதழிலிலிருந்து...
மனத்துள் புயலை வீசச்செய்யும் ஒரு கடிதம்...



ஹிட்லரின் தீர்க்கதரிசனம்- |ஏப்ரல் 2009


என்னுடைய பெயர் ப்ரியா. வயது 14. நான் ரொறொன்ரோவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் எட்டாவது படிக்கிறேன். என்னுடைய பெற்றோர் இலங்கையிலிருந்து வந்து அகதிகளாகக் குடியேறிய தமிழர்கள். நான் பிறந்தது கனடாவில். எனக்குத் தமிழ் எழுதவோ வாசிக்கவோ கதைக்கவோ தெரியாது. நான் ஆங்கிலத்தில் படிக்கிறேன். ஒரு மருத்துவராக வரவேண்டும் என்பது என் கனவு.

என் பெற்றோரின் சொல்லைக் கேட்காமல் வெள்ளை மாளிகை முன்பு பிப்ரவரி 20ம் தேதி நடக்கப்போகும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொள்ள முடிவு செய்தேன். இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் தினம்தினம் ராணுவத்தினரால் கொல்லப்படுவதைக் கண்டிப்பதுதான் இந்த நிகழ்வு. ரொறொன்ரோவில் இருந்து நூற்றுக் கணக்கான பஸ்களும் வான்களும் கார்களும் புறப்பட்டன. நானும் அதில் சேர்ந்து கொண்டேன். பத்து மணி நேரம் பயணம் செய்து வெள்ளை மாளிகைக்கு முன்னால் காலை 11 மணிக்குக் கூடினோம். அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்தும் தமிழ் மக்கள் அங்கே வந்து திரளாகக் குழுமியிருந்தனர்.

இந்தப் பிரயாணம் எங்களுக்கு இலகுவாக அமையவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து எதிராளிகள் செய்த சதியில் கைமாறிவிட்டது. ஆறுதல் சொல்லவேண்டிய பஸ் சொந்தக்காரர் எங்கள்மேல் ஆத்திரப்பட்டார். நான் “நீங்கள் முன்பு எனக்கு அப்பாவாக இருந்தீர்களா?” என்று கேட்டேன். அவர் “என்ன, என்ன?” என்றார். “நீங்களும் என்மேல் அப்பாவைப் போல பாய்கிறீர்கள்” என்றேன். பின்னர் ஒருமாதிரி சமாதானமாகி வேறு வாகனம் பிடித்துத் தந்தார். அதில் இரவிரவாக நானும் பல மாணவர்களும் பயணம் செய்தோம்.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவை உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவருவதும், போரை நிறுத்தக் கோருவதுமே இந்தப் போராட்டத்தின் நோக்கம். வாஷிங்டன் காலநிலை பூஜ்யத்துக்கு கீழே 5 டிகிரி. நாங்கள் தக்க குளிராடைகள் அணிந்திருந்தாலும் குளிர் நெஞ்செலும்பைத் தொட்டது. குதிரைகளில் வீற்றிருந்த வெள்ளை மாளிகைப் பொலீஸார் முன்னிலையில் 'நீங்கள் ரத்தம் கொட்டுகிறீர்கள்; நாங்கள் கண்ணீர் கொட்டுகிறோம்' என்றும் 'ஒபாமா ஒபாமா, எங்களைக் காப்பாற்று' என்றும் குரல் எழுப்பினோம். பார்ப்பவர்களுக்கு உலகம் எங்களைக் கைவிட்ட நிலையில் நாங்கள் எடுக்கும் கடைசி முயற்சி என்பது தெரிந்திருக்கும்.

சமீபத்தில் ஐ.நா. விசேட தூதுவர் இலங்கை ராணுவத்துக்குச் சொன்னார் ‘யுத்தம் தொடர்ந்தாலும் பொதுமக்கள் சாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று. அவருடைய உச்சமான கண்ணீர் கலந்த புத்திமதி இதுதான். இரண்டே வார்த்தைகள் ‘போரை நிறுத்தவும்' அவருடைய தொண்டையில் இருந்து வெளியே வராமல் வார்த்தை அடைத்துக்கொண்டது. இதைச் சொல்வதற்கா அவர் முதல் வகுப்பில் 10,000 மைல்கள் விமானத்தில் பறந்து சென்றார்?

சரி, ஒரேயொரு கேள்வி கேட்டிருக்கலாம், அவர் அதையும் செய்யவில்லை. ஒரு நாட்டின் குடிமகன் தன் நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போகலாம், வரலாம். அது அவன் குடியுரிமை. நாட்டு மக்களின் ஒரு பகுதியினரை முள்ளுக்கம்பி வேலி போட்டு அடைத்து வைப்பது என்ன நியாயம்? அவர்கள் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களுக்கு வேறு நாடு கொடுக்கப் போகிறார்களா? என் தாத்தா அடிக்கடி சொல்வார் ‘தமிழர்கள் சபிக்கப்பட்ட இனம்' என்று. அது என் கண் முன்னால் ஒவ்வொரு கணமும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இந்தப் போராட்டத்தை நடத்தியது ஒரு துளிக் கடைசி நம்பிக்கை இருந்தபடியால்தான். எல்லாக் காசும் செலவழிந்த பிறகு முடிவில் எஞ்சியிருக்கும் ஒரு டொலர் குற்றிபோல. ஒபாமா ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். கொடுமை அவருக்கு அந்நியமானதல்ல. அவர் கன்னத்தில் கண்ணீர் வழிந்து ஓடியிருக்கிறது. நித்தமும் குண்டுகள் விழுந்து அப்பாவித் தமிழர்கள் செத்து மடிவதைக் கண்டு அவர் மனம் இரங்கலாம்; போரை நிறுத்த உதவலாம்.


மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் எங்கள் இன அழிப்புப் பிரச்சினையைச் சொல்ல ஒருவருமே இல்லை. உலகத்தில் மிக மோசமாக உதாசீனம் செய்யப்படும் இனம் தமிழ் இனம்.

இரண்டு நாள் முன்பாக ஒபாமா கனடாவுக்கு வந்திருந்தார். அவரை முதலில் சந்தித்தது கனடா நாட்டு ஆளுநர், மிக்கையில் ஜோன், ஒரு கறுப்பினப் பெண். அவர் ஹைட்டியிலிருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர். அவர் ஒபாமாவிடம் ஹைட்டி நிலவரத்தை எடுத்துச் சொன்னார். எங்கள் லிபரல் கட்சித் தலைவர் ஒபாமாவுடன் குவண்டனாமா சிறையில் அடைபட்டிருக்கும் ஒரேயொரு சிறைக்கைதி பற்றிப் பேசினார். மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் எங்கள் இன அழிப்புப் பிரச்சினையைச் சொல்ல ஒருவருமே இல்லை. உலகத்தில் மிக மோசமாக உதாசீனம் செய்யப்படும் இனம் தமிழ் இனம்.

நான் வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் பதாகையுடன் நின்றபோது என்னோடு படிக்கும் மாணவிகளிடமிருந்து செல்பேசியில் குறுஞ்செய்திகள் வந்த வண்ணமே இருந்தன. ‘நீ தமிழா? எதற்காக அங்கே குளிரில் நடுங்கிக்கொண்டு நிற்கிறாய்?' நான் பதில் அனுப்பவில்லை. கனடாவுக்கு திரும்பும் போதும் இதையே நினைத்துக்கொண்டேன். நான் பிறந்தது கனடாவில், படிப்பது ஆங்கிலத்தில். தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. நான் எப்படி தமிழாக முடியும்?

வீட்டுக்கு திரும்பியதும் அப்பா என்னுடைய கோட்டைக் கழற்றி கொழுவியில் மாட்டினார். அம்மா தலையைத் தடவி ஆறுதல் சொன்னார். பாட்டி கோப்பையில் சுடச் சுடச் சாப்பாடு பரிமாறி சாப்பிடச் சொன்னார். தொலைக்காட்சியில் நேற்று திருப்பித் திருப்பி ஒரே காட்சியைக் காட்டினார்கள். இரண்டு நாளில் அந்த ஈழத்துச் சிறுமி நாலு இடம் மாறினாள். அப்படியும் எறிகணை வீச்சில் அவள் செத்துப்போனாள். நான்தான் அந்தச் சிறுமி. நான் தவறிப்போய் இங்கே பிறந்துவிட்டவள். அங்கே எத்தனைபேர் இன்று வீடில்லாமல், உடுப்பில்லாமல், உணவில்லாமல் எப்பொழுது அடுத்த குண்டு விழும் என்று ஆகாயத்தைப் பார்த்தபடி காத்திருக்கிறார்கள்!

எங்கள் வகுப்பில் வரலாறு படிப்பித்த ஆசிரியர் சொன்ன ஹிட்லரின் வாசகம் நினைவுக்கு வருகிறது. ‘பூமி சுழன்று கொண்டிருக்கிறது. மனிதன் மிருகத்தைக் கொல்லலாம் அல்லது மிருகம் மனிதனைச் சாப்பிடலாம், பூமி தொடர்ந்து சுழலும். வலியது வெல்லும் என்பது இயற்கையின் விதி. அது ஒரு போதும் மாறுவதில்லை.'

‘நீ எதற்காக அம்மா போனாய். படிக்கிற வேலையைப் பார்' என்று சொல்லியபடி படுக்கைப் போர்வையை இழுத்து என்னைப் போர்த்திவிட்டு, அறை லைட்டையும் அணைத்துவிட்டு அம்மா போனார்.

2050ம் ஆண்டில் என் மகள் தன் பூர்வீகத்தைப் பற்றி வரலாற்றில் ஆராய்வாள். இலங்கையில் தன் இனம் முடிந்து போனதைக் கண்டுபிடிப்பாள். அப்போது “அம்மா, இலங்கையில் எங்கள் இனம் அழிந்தபோது நீ என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்பாள். நான் சொல்வேன், “மகளே, வெள்ளை மாளிகையின் முன், பூஜ்யத்துக்கு கீழே ஐந்து டிகிரி குளிரில் ‘இன ஒழிப்பை நிறுத்து' என்று பதாகைகள் ஏந்திப் போராடிய பத்தாயிரம் சனங்களுடன் நானும் நின்றேன்”.

ப்ரியா, கனடா
தமிழில்: ரஞ்சனி

வெள்ளி, ஏப்ரல் 03, 2009

Chennai Digest published the award news

வியாழன், ஏப்ரல் 02, 2009

Dakshinamurthy Sthothram

ஸ்ரீ விருஷபதேவர் அருளிச் செய்த



ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்



அகணித குணகண மப்ரமேயமாத்யம்

ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்

உபரத மநோயோகி ஹ்ருந் மந்திரம்தம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (1)



நிரவதி ஸுகம் இஷ்ட தாதார மீட்யம்

நதஜந மநஸ்தாப பேதைக தக்ஷம்

பவ விபிந தவாக்னி நாமதேயம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (2)

த்ரி புவன குரும் ஆகமைக ப்ரமாணம்

த்ரி ஜகத்காரண ஸூத்ரயோக மாயம்

ரவி சத பாஸ்வரம் ஈஹித ப்ரதானம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (3)

அவிரத பவ பாவனாதி தூரம்

பத பத்மத்வய பாவினா மதூரம்

பவ ஜலதி ஸுதாரணாங்க்ரி போதம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (4)



க்ருத நிலய மநிஸம் வடாக மூலே

நிகம சிகா வ்ராத போதிதைக ரூபம்

த்ருத முதுராங்குளி கம்ய சாரு போதம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (5)



த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்

பதபத்மாநத மோக்ஷ தாந தக்ஷம்

க்ருத குருகுல வாஸ யோநி மித்ரம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (6)



யதி வர ஹ்ருதயே ஸதா விபாந்தம்

ரதி பதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்

பரஹித நிரதாத்மனாம் ஸுஸேவ்யம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (7)



ஸ்மித தவள விகாஸிதாந நாப்ஜம்

ச்ருதி ஸுலபம் வ்ருஷாபதிரூட காத்ரம்

ஸித ஜலஜ ஸுஸோப தேஹ காந்திம்

ஸதத மஹம் தட்சிணாமூர்த்தி மீடே (8)



வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்

குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:

ஸகல துரித துக்க வர்க ஹாநிம்

வ்ரஜதி சிரம் க்ஞானவான் சம்புலோகம் (9)

Some Dakshinamurthy Temples


திருவலிதாயம் - பாடி:
குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரைச் சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கினால் பாவம்நீங்கி, அவருக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார். அதன்படி இங்கு வந்த வியாழனாகிய குருபகவான், இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இந்தத் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பதும், தலத்து தட்சிணாமூர்த்தியைவணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை. இந்தத் தலத்தில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை வணங்கினால் திருமணத்தடை, நோய்கள் போன்றவை நீங்கும் என்றும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட, ஞானம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
சென்னை, பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி நிறைய உள்ளன.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
இலம்பையங்கோட்டூர்:

தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இந்தத் தலத்துக்கு வந்து தங்களது அழகு என்றும் குறையாமல் இருக்கவேண்டும் என்று அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவபெருமான், 'யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படி அருள் புரிந்தார். இவரே கோஷ்ட தெய்வமாக சின்முத்திரை தாங்கி, வலது கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோக பட்டையம் தரித்து, அபூர்வமான திருக்கோலத்தில் காட்சிதருகிறார்.
பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் பொலிவையும் மன அழகையும் பெறலாம் என்று சொல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இவரை வணங்கினால் நல்ல அழகு வாய்க்கப் பெறுவார்களாம். கோயிலின் நுழைவாயிலின் அருகே தேவதைகள் வணங்கிய சிவபெருமான், ரம்பாபுரிநாதராக, 16 பேறுகளை அளிக்கும் வகையில் 16 பட்டைகளுடன் மேற்குநோக்கி காட்சி தருகிறார்.
இந்தத் தலம் காஞ்சிபுரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவு. சென்னை பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் சென்று, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். இங்கு குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
----------------------------------------

திருநெறிகாரைக்காடு:

பொதுவாக தட்சிணாமூர்த்தி தெய்வத்துக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வர் மட்டும் இருப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்திப் பெருமான் ஏழு சீடர்களுக்கு ஞானம் தருவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் தெளிந்த ஞானம் பிறக்கும்.
இந்தத் தலம் கவுதம ரிஷியிடம் சாபம் பெற்ற இந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்ட தலம். மேலும், பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் மையல் கொண்டு, அவள் மூலம் சந்திரனுக்குப் பிறந்த புதன், தான் பிறந்த முறையில் வெறுப்பு கொண்டு, தனியாக இந்தத் தலத்துக்கு வந்து, தனக்கு கிரக பதவி அளிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டானாம். சிவபெருமானும் வரம் தர, உரிய காலத்தில் புதனுக்கு கிரக பதவி கிடைத்ததாம். எனவே, இந்தத் தலத்தை புதன் தலமாகவும் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தலம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்காலிமேடு என்றும் அழைக்கப்படுகிறது இந்தத் தலம்.

------------------------------------------------------------

சிம்ம தட்சிணாமூர்த்தி - மன்னார்குடி

குருபகவானுக்கு உரியதலமாகப் போற்றப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்மராசியில் குருபகவான் பிரவேசிக்கும் போது மகாமகம் வரும். இந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தி நான்கு சிங்கங்களின் மேல் அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்குமாம்.
ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார்களாம். அப்போதுஇவர்களை துவாரபாலகர்கள் தடுக்கவே, இவர்களுக்குக் கோபம் வந்தது. அதனால் முனிவர்கள் துவாரபாலகர்களுக்கு சாபம் கொடுத்தனர். அப்படி சாபம் கொடுத்ததால், முனிவர்கள் நால்வருக்கும் தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்கவேண்டும் என்பதற்காக இந்தத் தலத்து இறைவன் பாமணி நாகநாதரையும் சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனராம். சிம்மம், கும்பம், கடகம்,தனுசு, மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களும், லக்னத்துக்குரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
வியாழன், அக்டோபர் 25, 2007

கோவை 'சிறை' வாசியின்(வாசகனின்) மடல்.



"மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்!"

கோவைச்சிறை * 23.08.2006 புதன்


பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய, இராஜபாளையம் கம்பன்கழ‌கப் பொதுச் செயலாளர் அய்யா உயர்திரு. என். எஸ். முத்துகிருஷ்ணராஜா அவர்களுக்கு,

கோவைச் சிறைவாசி மு. ஏகாம்பரம் வணக்கம் கூறிப் பணிவுடன் எழுதும் நன்றி மடல்.

எனது கடித வேண்டுகோளினை ஏற்றுத் தாங்கள் பரிவுடன் கூரியர் அஞ்சலில் அனுப்பித் தந்த

1. கம்பனின் வாழ்வியல் நெறிகள்
2. இரமனைத் தரிசிப்போம்
3. சரணடைவோம்! -
ஆகிய மூன்று நூல்களும் நேற்று 22. 08. 2006 அன்று கிடைக்கப் பெற்றேன்.

தங்களுக்கும் தங்களின் கம்பன் கழகத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்கிப் பெருமகிழ்வு கொள்கிறோம்.

இராமாயணம் முழுமையும் உள்ள 6 காண்டங்களில் இராமபிரானின் நிலைகளையும் செயற்பாங்கினையும் கற்றுணர்ந்த 6 ஆய்வாளர்களின் கட்டுரைகளின் வாயிலாகத் தொகுத்து அளித்துள்ள பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது.

இராமபிரானின் பண்புநலன் வழியே கதை முமமையும் சுருக்கித் தரப்பட்டுள்ளது. ஆங்காங்கே கம்பநாடனின் உயரிய கவிதை வரிகள் தரப்பட்டது.மேலும் கதை முழுமையும் கம்பனின் சொர்சித்திரம் வாயிலாகப் படித்து இன்புற வேண்டும் என்ற ஆவலையும் வேட்கையையும் தூண்டுகிறது.

சிறைவாழ்வுக்கும் இராமாயணத்திற்கும் ஒருவகையில் தொடர்பு உண்டு என்றுதான் ஆயுத்தண்டனை (எ) ஜென்ம தண்டனை பெற்றவர்கள் நம்புகிறார்கள்; நம்புகின்றோம்.

இராமனின் கானகவாசம் 14 ஆண்டுகள்; பாரதத்திலே பாண்டவரின் கானகவாசமும் 14 ஆண்டுகள் - இந்தியாவில் ஆயுட் தண்டனைச் சிறைவாச காலமும் 14 ஆண்டுகளே!


2
'ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்களும் தவம் மேற்கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி
ஏழிரண் டாண்டின் வா என்றியம்பினன் அரசன் என்றாள்!'

இத்தகு ஏழிரண்டாண்டு கானக வாசத்தைத்தான் பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும் பெற்றனர். அத்தகைய மறைவு சிறைவாழ்க்கையில் உள்ள எங்களுக்கு இராமாயணமும், மஹாபாரதமும் மிகவும் பிடித்த காப்பியங்கள் ஆகிவிட்டதில் வியப்பேதுமில்லை.

சர்வ வல்லமை பெற்ற கடவுளர்களே மானிட அவதாரம் எடுத்து பூமியில் பிறக்கும்போது பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் எவ்வளவு? எத்தகையது! என்பதை நினைத்துப் பார்க்கும்போது எங்களின் இந்த சிறைவாசம் தூசுக்குச் சமானமாகும் என்ற ஆறுதலும் தேறுதலும் அவற்றைப் படிக்கும்போது எங்களுக்கு ஏற்படுகிறது.

பாரத கதாபாத்திரப் படைப்புகளை விட இராமாயண பாத்திரப் படைப்புகள் - அதிலும் குறிப்பாகத் தமிழில் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் கண்ணோட்டத்தில் மிகவும் உன்னதமான நிலையிலும், முறையிலும் காட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். சுவாமி விவேகானந்தரும் கூட இதே கருத்தையே சீதையையும், இராமனையும் நமது பாரத கண்டத்தின் அபிபந்த இந்து கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாகப் பின்பிற்றி ஒழுகிட வேண்டும் என்று தமது நூலில் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

மகன், மாணவன், கணவன், சகோதரன், சான்றோன், நண்பன், சக்ரவர்த்தித் திருக்குமாரன், மாவீரன், மன்னிக்கும் மாதவன் - என பல்வேறு முகங்களாய் விரிந்து காவிய முழுவதும் இராமன் காட்சி தருகிறான்!

கம்பனின் தத்துவக் கருத்துக்களும், உவமைகளும் அற்புதமாக பொருத்தமாக அமைந்துள்ளது. இலக்குவனிடம்,
"நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்ற
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!"

எனும் இராமபிரான் கூற்று வரிகள் எம் போன்றோருக்கு மிகுந்த ஆறுதலையும் தேறுதலையும் தருவனவாகும்.

இதே கவிதை வரிகளை கவிஞர் கண்ணதாசன்,'தியாகம்' என்னும் திரைப்படத்திற்கான பாடலில்
"நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன?விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?...
என்று எடுத்தாண்டு இருக்கிறார்.

(பாடலின் முதல்வரி: 'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - ஒன்று மனசாட்சி- ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்பது)

3
இதனையே நகர்நீங்கு படலத்தில் வசிட்டரின் வாய்மொழியாக,
"சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும்
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?- என்றும்

நல்தவமுனி பரத்துவாசன் - வழி வனம் புகு படலத்தில் 'அந்தோ! விதி தருநனை' என்பான் இற்றது செயல் உண்டோ கிளி? என இடர் கொண்டான்' - என்றும்

சடாயூ இராமனைப் பார்த்து வருத்தத்துடன்,

'அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்
விதிவயம் என்பதை மேற்கொளாவிடின்
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ?

எனும் கம்பனின் வரிகள் துயருறுவோர்க்கு அவன் தடவும் அருமருந்து!மனக் காயங்களுக்கு இதமான இன்பமளித்து ஆற்றுப்படுத்துவது.

பேராசிரியை இளம்பிறை மணிமாறன் அவர்கள்,

"There is a Divinity that shapes our ends.."
என்னும் ஷேக்ஸ்பியரின் கூற்றையும்

'Heaven from all creatures hides the book of Fate'
என்ற அவரின் மற்றுமோர் கவிதை மூலமும்,

கெதேவின்
"All is created and goes according to order - yetover our life time rules an uncertain Fate!'

என்பதையும் எடுத்தியம்பி ... இறுதியிலே,

'Fate is the friend of the Good,
the guide of the wise,
the tyrant of the foolish
the enemy of the bad...'

எனும் W.R ஆல்ஜெர் எனும் அறிஞனின் கருத்தோடு ஒப்பிட்டு 'கம்பனின் வாழ்வியல் நெறிகள்' நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார்.


இத்தகு நூல்களை இளமையிலே படிக்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நாங்கள் ஒருவரும் சிறை புகுதற்கான சந்தர்ப்பமே அமைந்திருக்காது என்பது உறுதி. எனினும், சிறைவாசத்தின் போதாவது தங்களின் உதவியினால் இத்தகு அரிய நூல்களைப் படித்துணரும் பாக்கியம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.

வாழ்வினில் ஒவ்வொரு மாந்தரும் செய்யத்தக்கவை என்ன? செய்யத்தகாதவகைகள் என்ன? எனும் அரிச்சுவடியை விளக்குகிறது.
4
அரசு அளித்த சலுகையால் நாங்கள் பலரும் கோவை பாரதியார் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்களில் அஞ்சல்வழி தொலைதூரக் கல்வியில் பல்வேறு பட்ட வகுப்புகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். அதில் நாங்கள் 20 பேர் சென்னைப் பல்கலையில் B.Lit எனப்படும் 'தமிழ் இலக்கியம்' பாடத்தை தேர்ந்தெடுத்து தற்போது மூன்றாம் (இறுதி) ஆண்டுத் தேர்வுகளை எழுதியுள்ளோம்.

அதில் இரண்டாம் ஆண்டில்," காப்பியங்கள் சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்"- எனும் பாடத்தில் கம்பராமாயண - சுந்தர காண்ட 'சூடாமணிப் படலம்' பாடப்பகுதியாக வந்திருந்தது. அதிலே இடம் பெற்ற 'சொல்லின் செல்வன் அநுமன் - சீதாப்பிராட்டியார்' இடையே அசோக வனத்தில் நடைபெற்ற உரையாடல் கவிச் சக்ரவர்த்தியின் காவிய வரிகளின் வழியே படித்தறியும் பாக்கியம் கிடைத்தது. அ·தே கம்பனை மேலும் மேலும் அறிந்திட வேண்டுமென்ற வேட்கையை தூண்டியது என்பதனை மிக்கப் பணிவுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

தாங்கள் தற்போது மனம் உவந்து அனுப்பித் தந்த மூன்று நூல்களும் முத்தானதும் சத்தானதுமாக உள்ளது. இங்கு படிப்பும் எழுத்துமே எங்களுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் தந்து வேதனைகளை மறக்க உதவுகின்றன. நான்கு சுவர்களுக்கு மத்தியிலே ஆண்டுக்கணக்காகஅடைபட்டு, தவிக்கும் எங்களுக்கு தங்களின் இராஜபாளையம் கம்பன் கழக வெளியீடுகள் மற்றும் இதர இலக்கிய நூல்களையும் அனுப்பித் தந்தால் மிகுந்த உதவியாயிருக்கும் என நம்புகிறோம்.

இத்தகு உயரிய கைம்மாறு கருதாத ஞானக்கொடை நல்கும் கம்பன் கழகப் புரவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கம் பெற்றுள்ள அங்கத்தினர் ஆகிய உங்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்த்திக் கரம் கூப்பிய நன்றிகளைச் சம்ர்ப்பிக்கின்றோம்.

தாங்கள் அன்புகூர்ந்து அனுமதி ஈந்தால் தொடர்ந்து தங்களுக்கு கடிதங்கள் எழுதியனுப்பிட ஆவலாயுள்ளேன்.

மற்றவை தங்களின் அன்பான பதில் பார்த்து.

இவண்,
தங்களன்புச் 'சிறை' வாசகன்'
மு. ஏகாம்பரம்
(மற்றும் நண்பர்கள்)
25.08.2006

Dinamani News about the Bharathiya Bhasha Parishad Yuva Puraskar 08

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix