சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Sunday, October 18, 2009

கதை சொல்லும் துவாரபாலர் சிலைகள்


கதை சொல்லும் துவாரபாலர் சிலைகள்

சிவன்கோட்டை... இதுதான் ஊரின் பழங்காலப் பெயராம். இன்னும் நிறைய பெயர்க் காரணங்களைச் சொல்கிறார்கள். சிருங்கேரி ஸ்வாமிகள் பதினைந்து வருடங்களுக்கு முன் இங்கே வந்திருந்தபோது, இந்த ஊருக்கு செழுங்கோட்டை என்று பெயராம்... அதுவே செங்கோட்டை ஆனது என்று சொன்னதாக நினைவு.

எனக்கு என்னவோ, சிவன்கோட்டைதான் பழைய பெயரோ என்று தோன்றுகிறது.
காரணம், சிவன் அடியார்கள் இங்கே அதிகம் பேர் இருந்தார்களாம். சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்தனராம். நகரைச் சுற்றிலும் ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் இருப்பதை இப்போதும் காண்கிறோம்.

முன்னர், கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்திருந்தது இந்தச் சிறிய நகரம். 1956ல்தான் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்துடன் இந்த ஊர் இணைக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன் நல்லூர்ராஜா என்பவரால் ஆண்டுவந்த பகுதி இது என்கிறது சரித்திரம். சிவன்கோட்டையின் மேற்குப் புறத்தில் இருந்த நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து, மகாதேவன் கோயில், அரண்மனை தீர்த்தக் குளம் போன்றவற்றை அமைத்தானாம். இப்போது காலம் சிதைத்த எச்சங்களே மிஞ்சியுள்ளன. இந்தக் கோட்டையை வைத்தே இந்த ஊருக்கு பெயர் வந்திருக்க வேண்டும். இப்போது, மேலூர் பகுதிக்கு மேற்கே, சிதிலமடைந்த சிற்சில மண்டபங்கள் காணக் கிடக்கின்றன. ஒரு முறை, செங்கோட்டை சுந்தரராஜப் பெருமாள், வேடுபறி உற்ஸவத்தின்போது, பெருமாளோடு இந்த மேற்குப் பகுதிக்குப் போயிருந்தேன். அதிகம் ஆட்கள் புழங்காத பகுதி. அப்போது அங்குள்ளவர்கள் சிலர் அந்த இடத்தைப் பற்றி சில தகவல்களைச் சொன்னார்கள். தற்போது கோட்டை போன்ற அமைப்பு இங்கே இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கற்பனைதான் செய்ய முடிகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கற்கள் சிதறிக் கிடக்கின்றன. அவ்வளவுதான்! இந்த சிவன்கோட்டையே காலப்போக்கில் மருவி, செங்கோட்டை ஆனதாகச் சொல்கிறார்கள்.

நீர்வளம் மிகுந்த இந்த நகரைச் சுற்றி 32 குளங்கள் உண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்த ஊரிலிருந்து எவரேனும் ஒருவர், திருவாங்கூர் மகாராஜாவை சந்திக்கச் சென்றால், ரெட்டைக்குளம் தண்ணீர் புன்னை மரத்தை தொட்டுட்டதா? என்றுதான் கேட்பாராம். அதுதான் கடைசிக் குளம். அந்தக்குளம் நிரம்பினால் முப்போகம் விளைவது உறுதி என்பது அவருக்குத் தெரியும்.

இன்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அடையாளங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் செங்கோட்டையின் நுழைவுப் பகுதியே வித்தியாசமாக இருக்கும். ஊருக்குள் வருபவர்களை வரவேற்று ஒரு வரவேற்பு வளைவு. அதன் இருபுறமும் கோயில் சந்நிதியில் இருப்பதுபோல், துவாரபாலகர்கள் சிலைகள் ஐந்தடி உயரத்தில் காட்சி தருகின்றன. வரவேற்பு வளைவின் மேற்பகுதியில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் சங்கு முத்திரை உள்ளது.

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானமே ஆன்மீக பூமியாக விளங்கியது. சமஸ்தானத்தின் நுழைவுப் பகுதியாக செங்கோட்டை இருந்ததால், அங்கே துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டன. நகரில் பழைமை வாய்ந்த கோயில்கள். சுற்றிலும் மகான்களின் திவ்ய சமாதிகள். எனவே, இந்தச் சிலைகள் பொருத்தமான ஏற்பாடுதான்!

ஊருக்குள் நுழையும்போது நாம் காணும் வலப்புற சிலை, உயர்த்திய கையில் ஒரு விரலைக் காட்டி, மற்ற கரம் மடித்து வைத்தபடி, ஊருக்குள் நுழைபவர்கள் ஒரு நிலைப்பாடுடன், மனதை அலைபாயவிடாமல் அமைதியாக வாருங்கள் என்றும், இடதுபுற சிலை, இறைவனை நம்பி இங்கு வந்தவர்கள், மனபாரம் அகற்றி வெளியேறுங்கள் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்துதான், ஆரியங்காவு, அச்சங்கோயில், சபரிமலை என கேரளத்தின் முக்கியமான தலங்களுக்குச் செல்ல வேண்டும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி என எல்லா ஊர்களில் இருந்தும் செங்கோட்டைக்கு பஸ் வசதி உள்ளது. ரயில் வசதி உண்டு. நீங்கள் யாரேனும் செங்கோட்டை வழியில் சபரிமலைக்கு, பம்பைக்கு செல்வதாயிருந்தால், சற்று வண்டியை நிறுத்தி இந்த துவாரபாலகர் சிலைகளையும் தரிசித்து, ஆசி பெற்றுச் செல்லுங்களேன்..!
Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix