சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, டிசம்பர் 05, 2008

இந்து மத பிரமாணங்கள்

இந்து மத பிரமாணங்கள்


நாம் வசிக்கும் பூமிக்கு ஜம்புத்வீபம் (நாவலந்தீவு) என்று பெயர். இது கர்மபூமி எனப்படுகிறது. இங்கு புண்ணிய நூல்கள் பல உண்டு. இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. புண்ணிய நதிகளும், புகழ்பெற்ற தலங்களும் ஏராளம். இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மதம் என்கிற வாழும் வழிமுறை ஒன்று தோன்றியது. கலைகளிலும், நாகரிகத்திலும் அம்முறையைப் பின்பற்றியவர்கள் ஒப்பற்ற புகழ் பெற்றிருந்தனர். அவர்கள் பேசிய மொழியிலிருந்து மற்ற நாட்டவர் நாகரிகத்தைக் கற்றுக் கொண்டதாகவும் சொல்வதுண்டு. அவர்கள் கடைப்பிடித்த வழிமுறையே, இந்து மதம் அல்லது சனாதன தர்மம் எனப்படுகின்றது.



இதற்கு ஆதாரமான கிரந்தங்கள் சம்ஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளன. அவை பலவாக வேறுபட்டிருப்பினும், ஒரே கடவுளைப் பற்றியே கூறுவன. அந்தக் கிரந்தங்கள், வேதங்களின் கருத்தையே வெளிப்படுத்துகின்றன. உயிரிகளுக்கு உறுப்புகள் எப்படி இன்றியமையாதவையோ, அப்படியே வேதத்துக்கு வேதாங்கங்கள் முக்கியமானவை.



வேதம், சில காரணங்களால் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வேதாங்கங்கள் 6; உபாங்கங்கள் 4... ஆக, 14 வித்யைகள் என்றும், உபவேதங்கள் 4 சேர்ந்தால் 18 வித்யைகள் என்றும் கூறுவார்கள். இவை அனைத்தும் வேதத்தைத் தழுவியவை ஆதலால் இவற்றிலிருந்து உண்டான மதங்களை வைதிக மதம், ஆஸ்திக மதம் என்றனர். வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாத மதங்களை அவைதிகம் நாஸ்திகம் என்றார்கள்.




வேதம்:


வேதம், அறிவைத் தரும் நூல். அதையே ச்ருதி என்பர். காதால் கேட்டுக்கேட்டு, உபதேசங்களின் மூலமாகப் பரவியதால், அப்பெயர் ஏற்பட்டது. வேதத்தைப் பின்பற்றி சில கிரந்தங்களை இயற்றிய பெரியோர்களும், வேத விளக்கங்களை (பாஷ்யம்) எழுதியவர்களும் வேதம் நித்யமானது; அனந்தமானது; மனிதனால் எழுதப்படாதது; ஈசன் முகத்திலிருந்து வெளிவந்தது; அதை மகரிஷிகள் தங்கள் தவ பலத்தால் அறிந்து உலக நன்மைக்காக வெளியிட்டார்கள் என்றே கூறியுள்ளனர்.



வேதவியாசர், ருக், யஜுர், ஸாம, அதர்வண என்று வேதத்தை நான்காகப் பிரித்தார். வேதத்திலுள்ள பெரும் பகுதி, யாகத்தைக் குறித்தே சொல்கின்றன. யாகத்தைச் செய்து முடிக்க ரித்விக்குகள் (கர்மாவைச் செய்பவர்கள்) வேண்டும். யாகம் செய்யும் எஜமானன், பிரும்மா, அத்வர்யு, ஹோதா, உத்காதா ஆகிய இவர்கள் முக்கியமானவர்கள். அந்தந்த தேவதைக்கு உரிய மந்திரங்களைக் கூறி, அவரவர் குணத்தை வெளியிடும் ஹோதாவுக்கு வேண்டியவற்றைக் கொண்ட ருக்வேதத்தை ஹோத்ருப்ரயோகம் என்பர்.



எல்லாத் தொழில்களையும், எஜமானனுக்காகச் செய்யும் அத்வர்யுவுக்கு வேண்டியவை, யஜுர் வேதத்தில் உள்ளன. பாடல்கள் தோத்திரங்கள் இசைத்து, தேவதைகளை மகிழச் செய்யும் உத்காதா என்பவருக்குரியது சாமவேதத்தில் காணப்படுகிறது. யாகத்துக்கு உபயோகப்படாமல், பொருள் வளர்ச்சி ஏற்படவும், ஆசைகள் உடனே நிறைவேறவும், எதிரியை வீழ்த்தவுமான உபயோகங்கள் அடங்கியது அதர்வண வேதம். இந்த நான்கு வேதங்களும், உலகத்துக்கு தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற நான்கு வித புருஷார்த்தத்தை அளிப்பன. வேதம் தர்ம காண்டம், பிரும்ம காண்டம் என இரு வகைப்படும்.



தர்ம, அர்த்த, காமம் என்ற மூன்று பலத்தை அளிக்கத் தக்கது தர்ம காண்டம். மோட்சத்துக்கேற்ற வழியைக் கூறுவது பிரும்ம காண்டம். கர்ம காண்டம், மந்திரம், ப்ராஹ்மணம் என இரு வகைப்படும்.



அனுஷ்டானத்துக்குரிய திரவியம், தேவதை முதலியவற்றை விளக்குவது மந்திரம். அது, பாதங்களோடு கூடி, காயத்ரி முதலிய சந்தஸ்களுடன் சேர்ந்திருந்தால், ருக் மந்திரம் எனவும், பாடலோடு சேர்ந்திருந்தால் சாம மந்திரம் எனவும், இந்த இரண்டோடும் சேரா விட்டால் யஜுர் மந்திரம் எனவும் சொல்லப்படும்.



விதி, அர்த்தவாதம் என, ப்ராஹ்மணம் இரு வகைப்படும். விதி பல வகையானாலும், ஒரு கர்மாவை விதிப்பதே அதன் கருத்து. விதித்த கர்மாவைப் பற்றித் துதிப்பதும், வேண்டாதவற்றை நிந்திப்பதும் அர்த்தவாதம். கர்ம காண்டத்தைப் பற்றி சூத்திரமாகவும் விளக்கமாகவும், மகான்களால் எழுதப்பட்ட சாஸ்திரங்கள் பூர்வ மீமாம்ஸை எனப்பட்டன.



பிரும்ம காண்ட உபநிஷத்தைப் பின்பற்றி, வேதவியாசரால் சூத்திரமாக வெளியிடப்பட்டு, சங்கரர் முதலான ஆசார்யர்களால் விளக்கம் எழுதப்பட்ட கிரந்தங்களுக்கு உத்திர மீமாம்ஸை அல்லது வேதாந்தம்! என்று பெயர்.

இந்த வேத அங்கங்கள் ஆறு வகைப்படும்.

சீக்ஷா:

வேதத்தை தவறாக உச்சரித்தால் பலனைத் தராததோடு, அப்படி சொல்பவரைக் கெடுக்கும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையோடு வேதத்தை ஓதச் சொன்னார்கள். உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் என ஸ்வரம் மூன்று வகைப்படும். அச்சு, ஹல் என்று அட்சரங்கள் இரு வகைப்படும். அச்சு - ஹ்ரஸ்வம், தீர்த்தம், ப்லுதம் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றைப் பற்றிக் கூறுவது சீக்ஷா என்ற வேதாங்கம்.



இவை, பாணினி முனிவரால் எல்லா வேதங்களுக்கும் பொதுவாக ஐந்து காண்டங்களாகவும், இன்னும் பலரால் ஒவ்வொரு வேதத்துக்கும் தனித்தனியாகவும் வெளியிடப் பட்டிருக்கின்றன.



வியாகரணம்:

இதை, இலக்கணம் என்பர். ஒவ்வொரு பதத்தையும் பிழை இன்றி உச்சரிக்க வேண்டும். சீக்ஷா என்பதால் எழுத்து சுத்தமாகத் தெரிந்தாலும், பதத்தை அறிய மற்றொரு நூல் அவசியம். நடராஜப் பெருமான் நடனம் செய்தபோது, அவரது உடுக்கையிலிருந்து கிளம்பிய 14 சூத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, பாணினி அவற்றை எட்டு அத்தியாயங்களாக எழுதினார். காத்யாயனர், அதற்கு ஒரு அமைப்பினை வகுத்தார். அதற்கு பதஞ்சலி மகரிஷி விளக்கவுரை எழுதினார். இன்னும் பலரால் பல வியாகரணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.


நிருக்தம்:

பொருளை உணராமல் சொல்லப்படும் வேத உச்சாடனத்துக்கு முழுமையான பலன் கிடைக்காது என்பதால், யாஸ்க முனிவர் பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட நிருக்தத்தை எழுதினார். நாம, ஆக்யாத, நிபாத, உபஸர்க்க என நான்கு வகை பதங்களை விவரித்து, அந்தப் பதங்களுக்கான பொருளும் அதில் கூறப்பட்டிருக்கிறது. வைதிக வார்த்தையின் பொருளை விளக்க, ஐந்து அத்தியாயங்கள் கொண்ட ஒரு நிகண்டுவும் அவராலேயே இயற்றப்பட்டது.



சந்தஸ்:

ஒவ்வொரு மந்திரத்தையும், அதற்குரிய ரிஷி, சந்தஸ், தேவதை இவற்றை அறிந்து உச்சரிக்க வேண்டும். எனவே, சந்தஸ்ஸை விளக்க ரிஷி பிங்களரால் எட்டு அத்தியாயங்களுடன் சந்தஸ் சாஸ்திரம் எழுதப்பட்டது. அதில் மூன்று அத்தியாயங்களில் காயத்ரி முதலிய வேத சந்தஸ்ஸுகளும், ஐந்து அத்தியாயங்களில் புராண இதிகாசங்களுக்குரிய லௌகிக சந்தஸ்ஸுகளும் விளக்கப் பட்டுள்ளன.



ஜோதிடம்:

வேதோக்த கர்மாக்களை அனுஷ்டிக்க, நாள் நட்சத்திரம் லக்னம் முதலியவற்றை விளக்கி, ஆதித்யர், கர்கர் முதலியவர்களால் ஜோதிடம் என்ற வேதாங்கம் எழுதப்பட்டது.



கல்பம்:


வேதம் எல்லையற்றது. எனவே, அதில் மறைந்துள்ள சாகைகளிலிருந்து எந்தக் கர்மாவை, எந்தக் காலத்தில், எதற்குப் பிறகு, எப்படிச் செய்வது என்பதை விளக்குவது கல்பம்.

உப அங்கங்கள்:


முன்னர் கண்ட ஆறு அங்கங்களுக்கும் சாதகமான அங்கங்களே உபாங்கங்கள். அவை புராணம், நியாயம், மீமாம்ஸை, தர்ம சாஸ்திரம் என நான்கு வகைப்படும்.


புராணம்:


உலகப் படைப்பு, அரச வம்சம், பெரிய அரசர்களின் சரிதம், மந்வந்தரம் முதலியவற்றை விளக்குபவை புராணங்கள். பிராம்மம், பாத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்னேயம், பவிஷ்யம், ப்ரும்ம வைவர்த்தம், லைங்கம், வாராஹம், ஸ்காந்தம், வாமனம், கௌர்மம், மாத்ஸயம், காருடம், பிரும்மாண்டம் என்ற பதினெட்டு புராணங்களை வேதவியாசர் இயற்றினார். நரசிம்மம், நாந்தம், சிவதர்மம், நாரதீயம், காபிலம், பிரும்மாண்டம், லிங்கம், ஸாம்பம், மாரீசம் முதலியன சில புராணங்களும் பல்வேறு மகரிஷிகளால் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு உப புராணம் என்று பெயர்.



நியாயம்:

இது, ஐந்து அத்தியாயங்களாக மகரிஷி கௌதமரால் இயற்றப்பட்டது. பிரமாணம் முதலிய பதினாறு பத அர்த்தங்களின் தத்துவத்தை அறிவதே இதன் பலன். கணாதர் என்பவரால் பத்து அத்தியாயங்கள் கொண்ட தத்துவமான வைசேஷிகம் தோற்றுவிக்கப்பட்டது. அதில் திரவ்யம் முதலிய ஆறு பத அர்த்தங்களின் தத்துவம் கூறப்பட்டுள்ளது. இதுவும் நியாய சாஸ்திரத்திலேயே சேரும். இவ்விரண்டையும் தர்க்க சாஸ்திரம் என்பர்.



கௌதமர், கணாதர் இருவரின் தத்துவங்களைத் தழுவியும் தழுவாமலும் மகான்கள் பலரால் கிரந்தங்கள் பல வெளியிடப்பட்டன. ஒவ்வொரு பொருளின் உண்மையையும் விவரிக்க, நியாய சாஸ்திரம் இன்றியமையாதது. பிரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சப்தம் முதலிய பிரமாணங்களுக்கு விரிவாக இதில் லட்சணம் கூறப்பட்டிருக்கிறது.

மீமாம்ஸை:

மீமாம்ஸை என்றால், கௌரவமாக விசாரிப்பது என்று பொருள். இது, கர்ம மீமாம்ஸை, சாரீரக மீமாம்ஸை என இரு வகைப்படும். கர்ம மீமாம்ஸை என்பது, ஜைமினி மகரிஷியால் பன்னிரண்டு அத்தியாயங்களாக எழுதப்பட்டது. இதில் தர்ம லட்சணம், எந்த மந்திரத்தை எங்கே படிப்பது முதலிய கர்மாவைப் பற்றிய தத்துவங்களும், கர்மங்களின் பலமும் கூறப்பட்டுள்ளது. வியாசரால் உபநிஷத அர்த்தங்களைக் கொண்ட பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்களாக இயற்றப்பட்டது. பக்தி, கர்மம் முதலியவற்றால் பெறும் சுகம் நிலையானது இல்லை. புண்ணியம் உள்ள வரையில்தான் இந்திரலோகம் முதலிய சுகம் கிட்டும். புண்ணியம் குறைந்தவுடன் முன் போலவே பூலோகத்தில் பிறக்க வேண்டும். அதற்கு சாதனமானது வேதாந்த சாஸ்திரம் ஒன்றே. வேதத்தின் முடிவான உபநிஷத்துகளை வேதாந்தம் என்று சொல்வதுண்டு. இவை, பரப்பிரும்மத்தை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கூறுவன. இதுவே சாரீரக மீமாம்ஸை.


தர்ம சாஸ்திரங்கள்:

தர்மம் என்ற சொல்லுக்கு (தன்னை அனுசரிப்பவனை நரகத்தில் விழவிடாமல்) நிறுத்தம் என்று பொருள். அவரவர் கடமையைச் செய்யும்படி சொல்வதால் இந்த நூலுக்கு தர்மசாஸ்திரம் என்று பெயர். இதை ஸ்மிருதி என்றும் சொல்வர்.



ராமாயணம்:

ஆதிகவி வால்மீகி இயற்றிய ராமாயணத்தை, நடந்த கதை ஆதலால் இதிகாசம் என்றாலும், ஸ்மிருதிகளுடனேயே சேர்ப்பர். தாய் தந்தையருடன் ஒரு மகன் நடந்து கொள்ள வேண்டிய முறை, பொய் சொல்லாமை, குருபக்தி, சகோதர பாசம், நீதி, மக்களை பாதுகாத்து ஆட்சி செய்வது, தினசரி கர்மாக்களைச் செய்தல், தர்ம யுத்தம், தீர்த்த கௌரவம், விருந்தினரை கௌரவித்தல், தானம், பணிவு, ஆண்&பெண் தர்மம், சத்திரிய தர்மம், பணிவிடை, கற்பு, தர்ம பலம் முதலிய பல தர்மங்களை விரிவாகவும் கதை வடிவிலும் எடுத்துக் காட்டியிருப்பதாலும், வேதமும் தர்மசாஸ்திரமும் எனது ஆக்ஞை என்று வாசுதேவனே நேரில் தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டியதாலும் ராமாயணத்தை வால்மீகி ஸ்மிருதி என்றனர்.



மகாபாரதம்:

வேதவியாசரால் சொல்லப்பட்ட பாரதத்தில் பல இடங்களில் கதை மூலமாகவும், நேராகவும், கேள்விக்கு பதிலாகவும் விரிவாக தர்ம விளக்கம் தரப் பட்டிருக்கின்றன. பாரத: பஞ்சமோ வேத: என்று ஒரு பழமொழி உண்டு. வேதம் என்றே சொல்லத்தக்க இந்நூலை தர்மசாஸ்திரத்தில் சேர்ப்பது பதினெட்டு புராணங்களையும் வெளியிட்ட வியாசர், மகாபாரதத்தின் இடையே பகவத்கீதை என்ற கிரந்த ரத்தினத்தையும் தந்துள்ளார். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிப்பதாக அரிய பல தத்துவங்கள் இதில் அடங்கியிருக்கிறது.



உப வேதங்கள்:


நான்கு வேதங்களுக்கும் நான்கு உபவேதங்கள் உண்டு. அவை முறையே, ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த(சாஸ்திரம்) வேதம் ஆகியவை.



ஆயுர்வேதம்:

மனிதனது ஆயுள், உடல், இந்திரியம் முதலியவற்றைப் பற்றிச் சொல்வது ஆயுர்வேதம். இது பிரம்மா, தன்வந்திரி முதலிய பலரால் வெளியிடப்பட்டது. அவற்றைத் தொகுத்து சரக ஸம்ஹிதை என்ற புத்தகமாக சரகர் வெளியிட்டார். வாக்படர் முதலிய பலரும் பல வைத்திய கிரந்தங்களை இயற்றியிருக்கிறார்கள். சுச்ருதர், வாத்ஸ்யாயனர் முதலியோர் வெளியிட்ட ரதி சாஸ்திரமும் இதில் அடங்கும். ஆயுர்வேதம் கிட்டத்தட்ட தர்ம சாஸ்திரத்தை ஒட்டி இருப்பதால், ஆயுர்வேதப்படி உணவுக் கட்டுப்பாட்டு முறைகள், உடலைப் பேணும் முறைகள் போன்றவற்றை கடைப்பிடிப்பவனுக்கு வியாதிகள் கிட்டே வராது. அப்படி கடைப்பிடிக்காததால் வரும் வியாதிகளுக்கும் இதில் பல வித சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.



தனுர்வேதம்:


வில், அஸ்திர சஸ்திரங்களைப் பற்றிக் கூறும் இந்த வேதம் நான்கு அத்தியாயங்களாக விஸ்வாமித்திரரால் வெளியிடப்பட்டது. அதில் யந்த்ர விதி, மந்த்ர விதி என இரு வகையான பிரிவுகள் உண்டு. பாணம், சூலம், கத்தி, சக்கரம் முதலியன எறியப்படுதல் முதல் வகையைச் சார்ந்தது. இவை அந்தந்த தேவதா மந்திர உச்சாடம் செய்து பிரயோகம் செய்யப்படும்போது இரண்டாவது வகையில் சேரும். தர்ம யுத்தம் நடக்கும்போது அம்புகளுக்கு பதில் அம்பினை செலுத்தும் நேர்மையைப் பார்க்க பல தேவரிஷிகள் கூடுவது வழக்கமாம். நாகாஸ்திரத்துக்கு கருடாஸ்திரமும் ஆக்னேயாஸ்திரமும் பதில் அஸ்திரங்களாகும். அஸ்திர சஸ்திரங்களுக்கு யார் அதிகாரி, யாரிடத்தில் எப்படிப் பிரயோகம் செய்வது போன்றவை இவ்வேதத்தில் அழகாகக் கூறப்பட்டுள்ளது.



காந்தர்வ வேதம்:

இது பரதரால் இயற்றப்பட்டது. கீதம், வாத்யம், நர்த்தனம் முதலியவை இதில் கூறப்பட்டுள்ளன. ஸ்ருதி லயப்பட்டு தாளம் தவறாமல் பக்தியுடன் இறைவனைப் பாடித் துதிப்பவர்களுக்கு, ஈசன் அருள் எளிதாகக் கிட்டும். கைலாய மலையைத் தூக்கித் தூரத்தில் எறிய எண்ணிய ராவணனின் கைகள், மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டன. நாரதர் கட்டளைப்படி சாம கானம் செய்து, இறைவனைத் துதித்து ராவணன் விடுபட்டான். மனத்திலுள்ள எண்ணத்தை சொற்களால் வெளிப்படுத்தாமல் கை, முகம், கண் முதலியவற்றால் வெளிப்படுத்துவதே நர்த்தனம். இறை வழிபாட்டில் இதுவும் ஒரு அங்கம். இவற்றைப் பற்றி மேலும் பலரால் பல கிரந்தங்கள் எழுதப்பட்டன. அவற்றில் சங்கீத ரத்னாகரம் என்பது முக்கியமானது. இதில் ஸ்வர பேதம், தாள பேதம், ராகங்களின் லட்சணம், பெயர், அதற்குண்டான காரணம், அந்தந்த ராகத்துக்கு ஏற்ற காலம், அதன் அதிகாரி முதலிய பல அரிய விஷயங்கள் அடங்கியுள்ளன.

அர்த்த (சாஸ்திரம்) வேதம்:

அரசாங்க விஷயமாக சுக்ர நீதி, கௌடில்ய நீதி என பல கிரந்தங்கள் உண்டு. குதிரை, யானை, பசு முதலிய மிருகங்களை எப்படி அடக்கி வசியப் படுத்துவது, பலன் அளிக்காதவற்றை எப்படி பலன் அளிக்கும்படி செய்வது போன்ற பலவற்றை உள்ளடக்கி சில சாஸ்திரங்கள் வெளியாயின. செடி, கொடி, மரங்களைப் பற்றியும், ஒவ்வொரு பொருளின் இயற்கை குணம், சேர்க்கை குணம், இவற்றைப் பற்றியும், அவற்றின் உடலமைப்பைப் பற்றியும், பட்சிகள் மற்றும் அவற்றின் சகுனத்தைப் பற்றியும், சித்திரம், அலங்காரம், பாகம் முதலியவை குறித்தும் பல கிரந்தங்கள் முனிவர்கள் பலரால் வெளியிடப்பட்டன. இவற்றில் பலவும் தற்போது கிடைக்கவில்லை. இவற்றைச் சேர்த்து அறுபத்துநான்கு கலைகள் என்பர்.



தத்துவங்கள்:

சாங்க்யம் - கபில மகரிஷியால் ஆறு அத்தியாயங்களாக எழுதப்பட்டது இந்தத் தத்துவம். பிரகிருதி, புருஷன் என்ற இரண்டில் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கூட்டான பிரகிருதியிடமிருந்தே உலகம் தோன்றியது. புருஷன், தான் ஒன்றும் செய்யாதவன் என்று அறிந்து வைராக்ய சம்பந்தனாக இருத்தலே சுகம் பெற வழி என்பது இந்தத் தத்துவம்.



யோகம்:

பதஞ்சலி முனிவரால் நான்கு பாகங்களாகச் செய்யப்பட்டது யோக சாஸ்திரம். இதில் யமம், நியமம் முதலிய எட்டு அங்கங்களால் மனத்தை ஓரிடத்தில் நிறுத்துவது, யோக சித்தியினால் தொலைவிலுள்ள விஷயத்தை இங்கே இருந்தபடியே உணர்தல், ஆகாய வழியிலும், நீரிலும், நெருப்பிலும் சஞ்சரித்தல், விரும்பியதைப் பெறல் போன்ற அணிமாதி, அஷ்ட ஐச்வர்ய ப்ராப்தி, முடிவில் மோட்சம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

பாசுபதம்:

பசுபதியால் ஐந்து அத்தியாயங்களாகச் செய்யப்பட்டது. இதில் பதி, பசு, பாசம் என மூன்று உண்டு. பசுவாகிய ஜீவன், பாசமாகிய பந்தத்தை (விபூதி ருத்ராட்சம் அணிதல், பஸ்ம ஸ்நாநம் முதலியவற்றால்) நீக்கி, பதி என்ற பரமசிவனை அர்ச்சித்தல் மோட்சம் என்பது தத்துவம்.



வைஷ்ணவம்:

எல்லாவற்றுக்கும் காரணமான பகவான் வாசுதேவரிடமிருந்து, ஸங்கர்ஷணன் என்ற ஜீவனும் அவனிடமிருந்து ப்ரத்யும்னன் என்ற மனதும், அதிலிருந்து அநிருத்தன் என்ற அகங்காரமும் உண்டாயின. மனம், மொழி, உடலால் எக்காலத்தும் பகவானை அர்ச்சித்துக் கொண்டிருப்பதே மோட்சம் அடைய வழி என்பது தத்துவச் சுருக்கம்.



சூரியனை முதன்மையானவனாகக் கொண்ட சௌரம், சக்தி என்ற அம்பாளை பிரதானமாகக் கொண்ட சாக்தம், கணபதியை மூல காரணமாகக் கொண்ட காணாபத்யம், கபாலியைத் தொழும் காபாலம், பாசுபதம் முதலிய ஆறு வகைக்கு ஷண் மதம் என்று பெயர்.



இப்படி, பல பெயர்கள் கொண்ட மதங்களும் ஒரே கடவுளைப் பற்றியனவே! எவர் எந்த வழியாகச் சென்றாலும், அவர்கள் இறைவனையே அடைகிறார்கள். இதுவே பரந்த எண்ணமுள்ள இந்து மதத்தின் தத்துவம்.



முக்கியமான சொற்களின் விரிவாக்கங்கள்:



மும்மூர்த்திகள்: பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைக் கொண்டு உலகுக்கு நன்மை செய்கின்றனர்.



முக்குணங்கள்: ஸத்வம், ரஜஸ், தமஸ் இம்மூன்றும் ஒவ்வொரு பொருளிடமும் காணப்படும்.



முக்கரணம்: மனம், மொழி, உடல் ஆகியன.



மூன்று உலகங்கள்: சுவர்க்க லோகம், பூவுலகம், பாதாள உலகம்.



நான்கு வேதம்: ரிக், யஜூர், ஸாம, அதர்வண வேதங்கள்.



நான்கு வித புருஷார்த்தம்: தர்ம, அர்த்த, காம, மோக்ஷம். (அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியன)


நான்கு யுகங்கள்: க்ருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் ஆகியன.



ஆச்ரமம்: பிரம்மசர்ய, கிருஹஸ்த, வானப்ரஸ்த, சன்யாஸ ஆச்ரமம் ஆகியன.



அந்தகர்ணம்: மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியன.



ஐம்பூதங்கள்: பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேஜஸ்(தீ), வாயு, ஆகாசம்.



ஞானேந்திரியங்கள்: கண், காது, நாக்கு, மூக்கு, த்வக்.

கர்மேந்திரியங்கள்: வாக், பணி, பாத, பாஸு, உபஸ்தம்.



பிராணம்: பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகியன.



கோசம்: அன்னமய, ப்ராணமய, மநோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்கள்.



பஞ்சாங்கம்: திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.



தர்சநம்: ந்யாய, வைசேஷிக, ஸாங்க்ய, யோக, மீமாம்ஸா, வேதாந்தம் ஆகியன.



அரிவர்க்கம்: காம, க்ரோத, லோப, மத, மோஹ, மாத்ஸர்யங்கள்.



கர்ம: யஜந, யாஜந, அத்யயந, தாந, ப்ரதிக்ரஹங்கள்.



சப்த தீவு (ஏழு தீவுகள்): ஜம்பு, சாக, பக்ஷ, குச, கிரௌஞ்ச, சான்மலி, புஷ்கர தீவுகள்.



சங்கல்ப வாரம்: பானு, இந்து, பௌம, ஸௌம்ய, பிருஹஸ்பதி, சுக்ர, சனி வாஸரங்கள்.



அஷ்ட திக்பாலர்: இந்திரன், அக்னி, யமன், நைருரிதன், வருணன், வாயு, குபேரன், ஈசன்.



அஷ்டாங்க யோகம்: யம, நியம, ஆஸந, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தியான, தாரண, சமாதி, அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்ய, ஈசத்வம், வசித்வம் ஆகியன.



நவக்ரஹங்கள்: ஆதித்யன், சோமன், அங்காரகன், புதன், பிருஹஸ்பதி, சுக்கிரன், சனைச்சரன், ராகு, கேது.



தசாவதாரங்கள்: மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி.

சனி, ஆகஸ்ட் 23, 2008

அழகு கொஞ்சும் இயற்கை - செங்கோட்டை வயல்வெளியில்









பொதிகைச் சாரல் தவழும் மண். செங்கோட்டை மண்ணின் வயல்வெளியில் படம்பிடிக்கப்பட்ட அழகுக் காட்சிகள் இவை....

Senkottai Nithyakalyani amman Temple செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் திருக்கோயில் புகைப்படங்கள்
























செங்கோட்டையில் ஆற்றங்கரைத் தெருவை அடுத்து, ஆற்றங்கரையை ஒட்டி, அமைந்திருக்கிறது ஸ்ரீ நித்யகல்யாணி அம்மன். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அனைவரும் காலை மாலை வேளைகளில் சென்று வணங்குவார்கள்.








சிறுவயதிலிருந்தே எனக்கு வீட்டுத் திண்ணையில் படுத்து தூங்கிதான் பழக்கம். கொசு கடித்தால், அதற்கு ஒரு வலை கட்டிக் கொண்டு, திண்ணையில் படுத்துக் கொள்வேன். சில நேரங்களில் திருடர்கள் யாரேனும் வருவதுபோல் தெரிந்தால், துரத்துவதற்கென்று ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கும்.








நள்ளிரவு நேரங்களில் கல்யாணி அம்பாள் தெருவில் வருவாள் என்று சில பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சலங்கை சத்தம் கேட்கும் என்றும் சொல்லியிருந்தார்கள். அந்த எண்ணம் என் மனத்துக்குள் இருந்ததால், கண் முழிப்பு வரும் இரவு நேரங்களில் என் காதுகளிலும் சலங்கை சத்தம் கேட்கும். ஆனால் எதற்காகவும் பயம் கொண்டதில்லை. அச்சமற்ற வாழ்க்கையை அந்த கிராமப்புறம்தான் வழங்கியது. பெரியவர்கள் சொல்வார்கள்... அம்பாள்தாண்டா வரா.... எதுக்கு பயப்படணும்? என்பார்கள்.








என் நண்பன் ஒருவர். பெயர் துரை பாண்டி. சூரிய பாண்டியன் என்று பெயரை வைத்துக் கொண்டான். தற்போது, ரயில்வேயில் ஆர்.பி.எப். காவலராக பணிபுரிகிறான். பள்ளி நாட்களின்போது, இப்படித்தான் அவன் வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டிருந்தான். சீசன் சமயம் என்பதால், நள்ளிரவில் மழை தூரத் தொடங்கியது. அப்படியே எழுந்து, பக்கத்தில் இருக்கும் அவன் தெருவில் இருந்து நடந்து வந்து, எங்கள் ஆற்றங்கரைத் தெரு வழியே வந்து, கல்யாணி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாலத்துக்கு மேலே நின்றுகொண்டிருக்கிறான். யாரோ அவனை பாலத்துக்கு கூட்டி வந்திருக்கிறார்கள் போல் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. மழைத் துளி பட்டு திடீரென்று கண்விழித்துப் பார்த்தால்...




கீழே ஆற்றங்கரை ஓடிக்கொண்டிருக்கிறது.




இத்தனைக்கும், தெருவில் தேங்கியிருக்கும் மழை நீர் காலில் படாமல் தாவித் தாவி நடந்து வந்திருக்கிறான் - அதுவும் பிரக்ஞையில்லாமல்!








நல்லவேளையாக, அவனை கல்யாணித்தாயே காப்பாற்றியிருக்கிறாள் என்று பெரியவர்கள் சொல்லி, அதுமுதல் அவன் தெருவில் தூக்கம் போட வீட்டில் தடா போட்டார்கள்.








இப்படி எத்தனையோ அனுபவங்கள் பலருக்கு இருக்கின்றது.




இன்றளவும் முன்னினும் சிறப்பாக, நித்யகல்யாணி அம்மன் கோயிலுக்கு சிறப்புகளை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அந்தக் கோயிலின் புகைப்படங்கள் இங்கே...

செங்கோட்டை பெருமாள் திருவிழா காட்சிகள்









செங்கோட்டை சுந்தரராஜப் பெருமாள் - உத்ஸவத்தின் போது எடுக்கப்பட்டவை. தேர்த்திருவிழா படங்கள் மற்றும் கருட வாகன உலா படம்.


செங்கோட்டையில் புகழ்பெற்ற சுந்தரராஜப் பெருமானுக்கு, அடியேன் செங்கோட்டை ஊரில் இருந்த நாட்களில் (பத்து வருடங்களுக்கு முன்) பாசுரங்களை ஸேவித்து, சாத்துமுறை பாசுரங்களை ஸேவிப்பதுண்டு. இரண்டு வருடங்களுக்கு மேல் இந்தக் கைங்கர்யம் நடந்து வந்தது. தெருவில் உள்ள சிறார்களுக்கு அப்போது பிரபந்த பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்தேன். நன்றாகச் சொல்லத் தொடங்கியிருந்தனர். பின்னர் அவ்வப்போது ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அந்த சிறார்கள் பாசுரம் சொல்லும் அழகைக் கேட்டுவந்தேன். பின்னர் அவர்களும் படித்து, மேல்படிப்பு அது இதுவென்று வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். ஆயினும் இப்போதும் ஒருவரை பெருமாள் தன்னுடனே வைத்துக் கொண்டிருக்கிறார் - பாசுர மொழிகளைக் கேட்டு இன்புறுவதற்காக!

sengottai Sri Krishnan Temple Sri Krishna



செங்கோட்டை ஆற்றங்கரைத் தெரு, (ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் தெரு) ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் வீற்றிருக்கும் கிருஷ்ணன் அழகு இங்கே... இந்தப் படம் 2008 ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழாவின் ஒரு நாளில் எடுக்கப்பட்டது. பத்து தினங்களும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பத்து விதமான அலங்காரத்தை செய்வார்கள். அதில் ஒருநாள் வேங்கடாசலபதி அலங்காரம் செய்திருந்தார்கள். இந்த அலங்காரத்தைச் செய்து அசத்தியவர் 20 வயது இளைஞர் ராஜா. கணினிக் கல்வி பயின்றவர் என்பது சிறப்புத் தகவல்.

வெள்ளி, ஜூலை 25, 2008

கம்பனும் ராமசேதுவும்

வணக்கம்



உச்ச நீதிமன்றத்தில் கம்பன் பெயர் அடிபட்டிருக்கிறது. அதற்காக கம்பனை கொஞ்சம் திருப்பிப் பார்த்து, சில தகவல்களைத் திரட்டியுள்ளேன். முடிந்தால், இந்த வாதங்களை முன்வைக்கலாம். காரணம் தமிழ் படித்தவன் என்ற காரணத்தால், அடியேன் படித்த சில இலக்கிய உலகத் தகவல்களை இங்கே தந்திருக்கிறேன்.



கம்பராமாயணத்தில் ராமனே பாலத்தை சேதப்படுத்திவிட்டான் என்று சொல்லும் தகவல், முழுமையானது அல்ல. அது இடைச்செருகல் பாடல். அதுகுறித்த விவரங்களை இங்கே தந்துள்ளேன்.



ஒரு சந்தேகம் எனக்கு உண்டு...



ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கேட் ஏவும்போதெல்லாம், சென்னையிலுள்ள பத்திரிகையாளர்கள் உட்பட நாட்டின் பல இடங்களில் இருந்தும் பணி நடக்கும் காலம் உட்பட எல்லோரையும் அழைத்துச் சென்று காட்டுவார்கள். ராக்கெட் ஏவப்படுவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். காரணம் பல கோடி ரூபாய் ப்ராஜக்ட் அது. நாட்டு மக்கள் பணம் என்பதால் வெளிப்படையாகச் செய்யவேண்டும் என்பது தர்மம்.



ஆனால், சேது சமுத்திரத் திட்ட விஷயத்தில், எந்த பத்திரிகையாளரையும் திட்ட பணிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று நடப்பது இதுதான் என்று காட்டியதில்லை. எவ்வளவு மண் அள்ளுகிறார்கள், எங்கே கொட்டுகிறார்கள் என்பதெல்லாம் மர்மம். மேலும் திட்டம் நடக்கும் விஷயத்தை, அரசுத் துறையினரே போட்டோ மற்றும் வீடியோ எடுத்துவந்து, ஒரு பிரஸ் மீட் நடத்தி, அதைப் போட்டுக் காண்பித்து விடுகிறார்கள். நேரில் காணும் வாய்ப்பு யாருக்கும் கிட்டியதில்லை.



இனி, உச்சநீதிமன்றத்தில் கம்பன் பெயரைச் சொன்னதற்காக, அடியேன் தரும் தகவல்கள்....




கம்பராமாயணத்தில் சேது:


சென்னை கம்பன் கழகம் வெளியிட்ட கம்பராமாயணம் (முதல் பதிப்பு 1976)



யுத்த காண்டத்தில் 37வது படலம்



மீட்சிப் படலம்



இதில் பாடல் எண் 166 முதல் 180 வரையில் 'சேதுவைக் காட்டி அதன் தூய்மையைப் புகழ்தல்" என்ற தலைப்பில் சேதுவின் மகிமைகள் ராமனால் பேசப்படுகின்றன.



ஆனால் முதல் ஆறு பாடல்களே சேது (166-171) பற்றிய புகழைப் பேசுகின்றன. (பக்கம் 1565)
அதாவது புஷ்பக விமானத்தில் ஏறி, இலங்கையிலிருந்து ராமன் அயோத்திக்கு திரும்பச் செல்லும்போது, நிலத்தில் இலங்கை அழகையும், போர் நடந்த இடங்களையும், யார் யாரை வதம் செய்த இடம் என்றெல்லாம் காட்டிக் கொண்டு வரும்போது, சேது அமைக்கப்பட்ட இடத்தையும் சேதுவையும் காட்டி, இது இல்லை என்றால் இம்மாபெரும் வெற்றி கிடைத்திருக்காது, இது நளன் அமைத்த பாலம் என்று கூறுகிறார் ராமன்.



--------------------------------------------------------------


இவை கம்பன் பாடல்கள் ( 164-165 ) இந்தப் பாடல்கள், சேதுவைக் காட்டி அதன் தூய்மையைப் புகழ்தல் என்ற பகுதிக்கு முன்னால் வரும். இந்தப் பாடல்களில் இலங்கைக் காட்சிகளை ராமன் சீதைக்குச் சொல்கிறார். பிறகு வருபவை சேதுக் காட்சிகள்....


-------------------------------------------------------


'இலங்கையை வலஞ் செய்து ஏக' என நினைந்திடுமுன், மானம்


வலம் கிளர் கீழை வாயில் வர, 'பிரகத்தன், நீலன்


நலம் கிளர் கையின் மாண்டது இவண்' என, நமன் தன் வாயில்


கலந்திட, 'ஈங்குக் கண்டாய், சுபாரிசற் சுட்டது' என்றான். 20-10



குட திசை வாயில் ஏக, 'குன்று அரிந்தவனை வென்ற


விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது' என் முன்,


வட திசை வாயில் மேவ, 'இராவணன் மவுலி பத்தும்,


உடலமும் இழந்தது இங்கு' என்று உணர்த்தி, வேறு உரைக்கலுற்றான்: 20-11



--------------------------------


இதைத் தொடர்ந்து வரும் ஆறு பாடல்கள் சேது மகிமையைப் போற்றுகின்றன.


-------------------------------------------------



'நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,


மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட


பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி


சொன்னபின், வானரேசர் தொகுத்தது, இச் சேது கண்டாய். 166



'மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன் தனக்கும் எட்டா;


பொன் தொடித் தெரிவை! யான் என் புகழுகேன்! கேட்டி, அன்பால்


பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த


சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார். 167


---------------------------------------------------------


இதற்குப் பிறகு இடைச் செருகல் பாடல்கள்.


-----------------------------------------------------------------


கம்ப ராமாயணத்தில் பல்வேறு காலகட்டங்களில் அதனைப் படித்த புலவர்கள் தங்கள் மேதைமையை கம்பனில் சேர்த்து, தங்கள் பாடல்களையும் கம்பராமாயணப் பாடல்கள் என்று நுழைத்து விட்டார்கள்.



அப்படி, கம்பராமாயணத்தில் இடைச்செருகல்கள் நிறைய உண்டு என்று வருத்தப்பட்டார் ரசிகமணி டி.கே.சி. அவர் கம்பனில் கரை கண்டவர். கம்பராமாயணத்தில் உள்ள இடைச்செருகல்களை சரியாக அறிந்து, அவற்றை நீக்கி, அந்தப் பாடல்களை எல்லாம் தனியாக ஒரு பக்கத்தில் தொகுத்து பிற்சேர்க்கை என்று அறிவித்தார். அவர் தள்ளிய பாடல்களில் கம்பனின் கவிப் புலமையும் இல்லை; சொற்களில் பிற்காலத்திய கட்டுமானம் இருக்கும்; நவீன தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டிருக்கும். பேச்சு நடை அமைந்திருக்கும்.



அப்படி அவர் முதலாக, அமரர் அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் சான்றோர்கள் பலரும் நீக்கிய இடைச் செருகல் பாடல் ஒன்றில்தான், சேதுவின் முகப்பை ராமன் அம்பு கொண்டு கீறியதாக ஒரு வரி வருகிறது. அது கம்பன் பாடல் இல்லை என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.



அந்தப் பாடல்...



கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்


அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு இருத்தி,


செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,


ஒப்பு அரியாள் தன்னுடனே உயர் சேனைக் கடலுடனே.. (170-23)


__________________________


- மேற்சொன்ன இந்தப் பாடலில் இரண்டு பேரை காவலுக்கு வைத்துவிட்டு, அதன் முனையை அதாவது (செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,) சிலை - அம்பு; வாய் - முனை என்றால், இருவரைக் காவலுக்கு வைத்துவிட்டு, அதன் முனையை மட்டும் அகழி போல் சிதைத்ததாகச் சொல்லியிருக்கிறாரே தவிர, அந்த அணையை முழுவதுமாக சிதைத்ததாகச் சொல்லவில்லை. இந்தப் பாடலும் இடைச்செருகல் பாடல் என தள்ளப்பட்டுள்ளது.




காரணம், ஒரிஜினல் கம்பன் பாடலிலோ, வால்மீகியிலோ, அணையின் அழகைக் காட்டி அதைப் பார்த்து சீதை பிரமிப்பது போல் வருகிறது. மேலும் இந்தப் பாலத்தை வந்து தரிசிப்பவர்களுக்கு சகல பாவங்களும் விலகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.



பின்னாளில் இந்தப் பாலத்தினைப் பற்றிய ஆன்மிக நம்பிக்கை அதிகரித்ததால், பின்னாளில் கம்பனில் இடைச்செருகலாகப் பாடல்களைச் சேர்த்தவர்கள், உலகத்தில் என்னென்ன பாவங்கள் உண்டு என்று சொல்லி, அது இந்த சேது தரிசனத்தால் நீங்கும் என்று எழுதிவைத்திருக்கிறார்கள் என்பதால், சேது, சில நூற்றாண்டுகள் வரை அப்படியே தரிசனத்துக்கு இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது.


அதனால்தான் அவர்களும் இப்படி எழுதி வைத்தார்கள். அந்தப் பாடல்கள் சில உங்களுக்கு உதாரணத்துக்காக, \
இந்தப் பாடல்களில் நவீன தமிழ் வருவதை கவனிக்கலாம். மேலும் பாவங்கள் என்ன என்ற லிஸ்ட் வருவதையும் கவனியுங்கள்.....


----------------------------------------------------------------------


கீழ்வரும் பாடல்கள் இடைச்செருகல் ( 162-6 முதல் 162-8 வரை)


-------------------------------------------------------------------------


'கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்;


மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி!


இருங் கட முகத்த யானை இவுளி, தேர், காலாள், துஞ்சி,


பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய்.



'கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த் தோன்ற,


அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத் தாக்கி,


சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை வெம் போர்ப்


படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப் பாராய்.



'பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா நின்றேன்;


மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று


ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து


நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும் நோக்காய்.


--------------------------------------------------------------------


169-1 மற்றும் 169-2 இப்படி பல பாடல்கள் இடைச்செருகலாக உண்டு. இவை உதாரணத்துக்கு


------------------------------------------------------------------------


ஆவினை, குரவரோடும் அருமறை முனிவர்தம்மை,


பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து தம் இல்


மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து


தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும் சுரர்கள் ஆவார்.



மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால் கீறித்


தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,


பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,


நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே.


---------------------------------------------------------------------------


170-1 முதல் 170-12 வரை... இப்படி பல பாடல்கள் இடைச்செருகலாக உண்டு. இவை உதாரணத்துக்கு


--------------------------------------------------------------------


ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, 'கமலம் அன்ன


பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என் பொருட்டால் செய்த


ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு' என, இரதம் ஆங்கே


பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை பகரலுற்றான்:



'அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு இடுக்கண் செய்தோர்,


செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர், தம்பால்


வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர், பெற்ற


தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச் செற்றோர்,



'குருக்களை இகழ்வோர், கொண்ட குலமகள் ஒழியத் தங்கள்


செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர் கொல் தீம்பர்,


இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள் தின்று


பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை செய்வோர்.



'வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,


மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்,


கை உள முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்,


துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச் சுளித்துக் கொல்வோர்,



'ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு


ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே சென்று


நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர், சான்றோர்


தாரமது அணைவோர், மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர்.



'கண்டிலாது "ஒன்று கண்டோம்" என்று கைக்கூலி கொள்வோர்,


மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்,


மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால் ஒருவன் சோற்றை


உண்டிருந்து, அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர்,



'பின்னை வா, தருவென்' என்று பேசித் தட்டுவிக்கும் பேதை,


கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளுண் மாந்தர்,


துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து இகழ்வோர், சுற்றம்


இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல் செய்வோர்.



'ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்,


நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை வஞ்சிப்போர், நன்மை


வேண்டிடாது, இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை நீப்போர்,


பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர்.



'கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர், தங்கள்


வயிற்றிடக் கருவைத் தாமே வதைப்பவர், மாற்றார்தம்மைச்


செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர்,


மயிர்க் குருள் ஒழியப் பெற்றம் வெளவு வோர், வாய்மை இல்லோர்,



'கொண்டவன் தன்னைப் பேணாக் குலமகள், கோயிலுள்ளே


பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை,


உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள் உலோபர், ஊரைத்


தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர்,



'தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள் வௌவும்


பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள், வந்து


'கா' எனா, 'அபயம்' என்று, கழல் அடைந்தோரை விட்டோர்,


பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று போவோர்.



'முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத் தீயோர்,


மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்,


கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில் வாழும்


பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும் பாவர்.


-------------------------------------------------------


இப்படி மேலே கண்ட பாடல்கள் பலவும் நவீன கால சொற்களைத் தாங்கி, கதையின் போக்கில் பாடலாசிரியரின் கருத்தை உட்புகுத்தி இருக்கின்றன. இவற்றை எப்படி சரியான கம்பன் பாடல்கள் என்று சொல்லி, கம்பராமாயணத்தில் பாடப்பட்டதாக ஏற்க முடியும்?


--------------------------------------------------

வால்மீகி ரெபரன்ஸ்



யுத்த காண்டம், ஸர்க்கம் 126 - ராமன் சீதைக்கு வழியிலுள்ள தலங்களைக் காட்டியது... என்ற தலைப்பில்



----------------------------------------------


இதில் எங்குமே ராமன் சேதுவை சேதப்படுத்தியதாக தகவல் இல்லை. நாம்தான் ராமசேது என்கிறோமே தவிர, ராமன் சீதைக்குச் சொல்லும் இடங்களில் எல்லாம், இது நளன் கட்டிய பாலம் என்று சீதைக்கு தெரிவித்து, தன்னுடைய இஞ்சினியர் பேரையே பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பாலத்தைக் கட்டியது உன் கண்களின் அழகுக்காக என்று சொல்கிறார்....



------------------------------------------

---------------------------

அன்பன்


செங்கோட்டை ஸ்ரீராம்,

ஞாயிறு, ஜூலை 20, 2008

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் தரிசனம்



திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் தரிசனம்


பெருமாளின் இரண்டு அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக...

திங்கள், ஜூலை 14, 2008

தமிழ் இதழ் கலைமணி விருது





திருவாவடுதுறை ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆடல்வல்லான் ஆனித் திருமஞ்சன விழாவில், விருது பெற்றவர்களுடன் திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்



தமிழ் இதழ் கலைமணி விருது





திருவாவடுதுறை ஆதினகர்த்தர், ஆனித்திருமஞ்சன விழாவின்போது, பத்திரிகையாளர் என்ற முறையில், தமிழ் இதழ் கலைமணி என்ற விருதினை அளித்து கவுரவித்தார். அப்போது, ஒரு பொன்னாடையைப் போர்த்தி, ருத்திராட்ச மாலை அணிவித்து, பட்டயம் ஒன்றையும் அளித்தார்.





அண்மையில் விகடன் பிரசுர வெளியீடாக வெளிவந்திருக்கும் என் 'தட்சிணாமூர்த்தி வழிபாடு' நூலைப் பார்த்துவிட்டு, மிகவும் சிலாகித்து கடிதம் அனுப்பியிருந்தார் ஆதினகர்த்தர். அதன் தொடர்ச்சியாக இந்த விருதை அளித்து, ஆன்மிகப் பணி மேன்மேலும் தொடரவேண்டும் என்று பாராட்டி வாழ்த்தினார்.





முன்னர் மஞ்சரியில் ஆசிரியப் பணியில் இருந்தபோது, என் கட்டுரைகளைப் படித்து வாழ்த்து தெரிவிப்பார். தமிழார்வமும், தமிழ் இலக்கியப் பணிகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் மனமும் கொண்ட திருவாவடுதுறை ஆதினத்துக்கு நெடுஞ்சாண்கிடையாக ஒரு வணக்கம்...





இது குறித்த தினமணி செய்தி கீழே...




----------------------------------------------------------------------------



மயிலாடுதுறை, ஜூலை 10: நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆடல்வல்லான் ஆனித் திருமஞ்சன விழாவில் 12 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.





திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில், காலை 8 மணிக்கு ஆடல்வல்லானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.





ஓதுவா மூர்த்திகளின் இசை நிகழ்ச்சியுடன் பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடக்கப்பட்டன.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் தா.ராசவன்னியன் "உமாபதி சிவாச்சார்யரின் இலக்கியங்கள் ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் பேசினார்.





ஆதீனப் புலவர் ஆதி. முருகவேள் எழுதிய "முப்பால் உணர்த்தும் மூன்று பொருள்' என்ற விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.





ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விழா மலரை வெளியிட்டார்.





வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.


சென்னை கண் மருத்துவ நிபுணர் சந்திரேஷ்பெய்டு 2-ம் பிரதியைப் பெற்றார்.




விருது வழங்கும் விழா





ஓதுவா மூர்த்திகள், சிவாச்சார்யர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள் 12 பேருக்கு ஆதீனத்தின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை குருமகா சந்நிதானம் வழங்கினார்.




விருது பெற்றோர் பெயர்- விருது :





தூத்துக்குடி ஆலாலசுந்தரம் வேத சிவாகம வித்யாலயம் ஆசிரியர் கல்யாணசுந்தரம் பட்டர்- சிவாகமச் செல்வர்.




திருநெல்வேலி தாழையூத்து அருள்மிகு அழகிய கூத்தன் திருக்கோயில் ஸ்தானிகர் ஆர்.எம். கணேசபட்டர்- சிவாகமத் திருத்தொண்டர்.





சிவகிரி அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் ஸ்தானிகர் எஸ்.கணபதிசுந்தரம்- சிவாகமத் திருத் தொண்டர்.





திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் சோ. கனகசபாபதி- தெய்வத் தமிழிசைச் செல்வர்.





திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் ஓதுவார் வே. பாலசுப்பிரமணியம் - தெய்வத் தமிழிசைச் செல்வர்.





உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் ஓதுவார் ஆர். சுந்தரவடிவேல்- தெய்வத் தமிழைச் செல்வர்.





சென்னை, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் சு. விக்ரமன் என்ற வேம்பு- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.





சென்னை நாடக ஆசிரியர் கவிஞர் ஞா. மாணிக்கவாசகன்- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.




சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் த.ராசவன்னியன்- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.





சென்னை விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம்- தமிழ் இதழ் கலைமணி.





காஞ்சிபுரம் ஸ்தபதி எஸ். சுப்பையா- சிற்பக்கலைப் பேரரசு.





திருமுருகன்பூண்டி ஸ்தபதி சு.கனகரத்தினம்- திருக்கோயில் கலைச் செல்வர்.




விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு பூஜைகளில் ஆன்மிக அன்பர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் பங்கேற்றனர்.

சனி, மே 24, 2008

மறந்து போன பக்கங்கள் - ஒரு கடிதம்

எனது மறந்து போன பக்கங்கள் நூலைப் படித்து, ஒரு கட்டுரைக்கான பின்னோட்டத்தை அளித்திருக்கிறார் இந்த சகோதரி.


அவருடைய எண்ணச் சிதறல்கள் இங்கே...




http://enrumjeyam.blogspot.com/2008/05/blog-post.html

Sunday, May 04, 2008



கோபமும் வீரமும் வேறு படுவது எங்கே?


விகடன் பிரசுரத்தில் வெளிவந்துள்ள செங்கோட்டை ஸ்ரீராம் எழுதிய 'மறந்து போன பக்கங்கள்' நூலைப் படித்தேன்..ஒவ்வொரு விஷயத்தையும் நம் அனுபவத்தால் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நம் வாழ்நாள் முழுதும் கூட போதாமல் போகலாம். ஆனால் அதையே அனுபவம் பெற்ற பல பெரியவர்களிடமிருந்து பெற்றால் குறைந்த காலத்தில் நிறைய அனுபவங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.



ஆனால் கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொட்டுப் பார்த்து ஆமாம் 'சரி தான், சுடுகிறது என்று சொல்லும் ஆசாமிகள் ஆயிற்றே நாம்!!இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் மிக எளிதில் கோப்ப்படக்கூடிய பெண் நான். கோபத்தில் என்ன சொல்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எதையாவது செய்து விட்டு பின் வருத்தப்படுவேன். பெற்றோரும், நண்பர்களும் சொல்லி இப்போது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டுருக்கிறேன்.



நான் கோபத்தில் எதையாவது சொல்லிவிட்டு 5 அல்லது 10 கழித்து நான் யோசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான் என் தவறு எனக்கு உறைக்கும். உடனே சம்பந்தபட்டவர்களிடம் 'சாரி கேட்டுக் கெஞ்சி அவர்களை சமாதனப்படுத்திவிடுவேன். அவர்கள் அப்போது சமதானம் ஆனாலும் அவரகள் மனதில் அந்த வடு இருக்கத் தானே செய்யும். இந்தக் கட்டுரையை படிக்கும் போது தான் என் மரமண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.



சுவாமி விவேகனந்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிஷ்யையின் பெயரை எனக்கு வைத்ததால், அவர் எனக்குச் சிறு வயதிலேயே அவர் அறிமுகம் ஆகிவிட்டார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் அவரைப் பற்றி பேசி பல முதல் பரிசிகளைப் பெற்று இருக்கிறேன்.அவர் கோபத்தைப் பற்றி சொல்லும் போது 'பலமே வாழ்வு, பலவீனமே மரணம்' என்று ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட்டார்.



அதாவது வீரம் நெஞ்சில் இருக்கும் போது தானே வெளித்தெரிகிறது. அந்த வீரம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும். கொடியவர்களை வீழ்த்தவும், நல்லவர்களுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தமிழ்ப் பட ஹீரோக்களின் கோபம் போன்று இருக்க வேண்டும்.




நம் வாழ்க்கையில் 10 சதவீதம் நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. மீதி 90 சதவீதம் நாம் அந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.உதாரணத்திற்கு, காலையில் அம்மாவோ, தங்கையோ, மனைவியோ தேநீர் கொண்டு வரும் பொழுது கைத் தவறி சட்டையில் கொட்டி விடுகிறது. இது என்ன அவர்கள் வேண்டும் என்றா செய்தார்கள். தெரியாமல் நடந்து விட்டது. இதை நாம் இரண்டு முறைகளில் கையாளலாம். ஒன்று, கொட்டியவரைத் திட்டுவது. மற்றொன்று 'பரவாயில்லை, தெரியாமல் தானே கொட்டி விட்டது' என்று சொல்லி வேறு சட்டையை மாற்றிக் கொள்ளவது.



இதில் முதல் ஒன்று, அன்றையப் பொழுதை நீங்களாகவே கெட்டப் பொழுதாக்கிக் கொள்ளவதாகி விடும். மற்றொன்று அன்றைய பொழுது இன்னும் நல்ல பொழுதாகி அவரகள் அன்பு கூடவும் வாய்ப்பளிக்கும்.. இதில் எது நல்லது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.வாரியார் சுவாமிகளும் கோபத்தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்.'சூடான பால் ஆற வேண்டும் என்றால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற்ற வேண்டும்'.



அது போல சூடான சூழ்நிலையில் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.சரி, இது நம்மை பிறர் கோபப்படுத்தும் போது செய்ய வேண்டியது. ஆனால் நாமும் பிறரைக் கோபப்படுத்துவது போல் ஆகிவிடுகிறதே அப்பொழுது என்ன செய்வது?



அதற்கும் ஒரு வழி சொல்கிறார்.உலகில் மிக நல்லவன் என்றும், மிகக் கொட்டவன் என்றும் யாரும் இலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். இரண்டையும் தெரிந்து கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய் விட்டு சொல்லாமலும், குணங்களை பாராட்டவும் செய்தால் மற்றவரைக் கோபப்படுத்துவதில் இருந்தும் நாம் தப்பித்து விடலாம்.



குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்


மிகைநாடி மிக்க கொளல்.



இது வள்ளுவன் குறள்.



பின் வருவது இந்த நூல் ஆசிரியரின் குரல்.



இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்

சினத்தை அடக்கல் சிறப்பு.



என் நண்பர் இதற்காக எனக்குச் சொன்ன அறிவரை,


நான்கு அறிவாளிகள் மத்தியில் நாம் ஒரு அறிவாளியாக நடந்துக் கொள்வது,


நான்கு பைத்தியங்களுக்கு மத்தியில் நாம் ஒரு பைத்தியமாக நடந்துக் கொள்வது,



இப்படிச் செய்தால் பிரச்சனை வராதே!!பிரச்சனை இல்லாவிட்டால், அங்கே கோபத்திற்கு என்ன வேலை???என்ன சரி தானே??


Posted by நிவேதிதா

மகா சுதர்சன வழிபாடு புத்தக விமர்சனம்

மகா சுதர்சன வழிபாடு புத்தகத்தின் விமர்சனம்


வெளிவந்தது : ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம் மே 2008 இதழ்



மஹா சுதர்சன வழிபாடு :

பக்கம் : 96

விலை ரூ: 35/-

ஆசிரியர் : செங்கோட்டை ஸ்ரீராம்

வெளியீடு: விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை -0௨


உலகனைத்தையும் ஆக்கி அளித்து அழிக்கும் எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணனையே அடையும் பேறாகவும் அவனை அடைவதற்கு அவனையே உபாயமாகவும் எண்ணியிருக்கும் சரணாகதி நிஷ்டர்களுக்கு இம்மை மறுமை நலன்களை அவனே நல்குவான். இத்தகைய உறுதியான நிலையை எட்டாதவர்கள் தங்களது இம்மைப் பலன்களுக்காக அவனால் படைக்கப்பட்ட சிறு தெய்வங்களின் காலில் விழாது, அவனது கையார் திருச்சக்கரத்தை வழிபடும் பழக்கமும் பெருகியுள்ளது.



அத்தகையோருக்கு வழிகாட்டும் வண்ணம் வடிவார்சோதி வலத்துறையும் திருச்சக்கரத்தாழ்வாரின் மகிமை, அவரைப் பற்றிய புராண வரலாறுகள், தத்துவங்கள், ஸுதர்சனரைப் பிரதானமாகக் கொண்டு வழிபடும் ஸந்நிதிகள் அமையப் பெற்ற திருத்தலங்கள், ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் ஸுதர்சனாழ்வானைப் பாடியுள்ள இடங்கள், ஸுதர்சன ஹோமம், பலன் தரும் ஸுதர்சன மந்திரங்கள், ஸுதர்சனரைப் பற்றிய துதி நூல்கள் ஆகியவை இந்நூலில் ஆசிரியரால் மிகவும் இனிய, எளிய தமிழில் விளக்கப் பட்டுள்ளன. இந்நூலைப் பெற்றுப் படித்து ஸுதர்சனரின் அருளுக்கு அன்பர்கள் இலக்காகலாம்.

வியாழன், ஏப்ரல் 10, 2008

THIRUKOSHTIYUR TEMPLE :
SWAMY RAMANUJA'S STATUE


























திருக்கோஷ்டியூர் திருத்தலம்

மதுரையிலிருந்து அல்லது, திருச்சி-புதுக்கோட்டை-திருமயம்- வழியாகச் சென்றால் திருப்பத்தூர் அடையலாம். அங்கிருந்து கால் மணி பயணத்தில் திருக்கோஷ்டியூர் செல்லலாம்.

இந்தத் திருத்தலம், சுவாமி ராமானுஜரால் உலகப் பிரசித்தி பெற்றது. காரணம், இங்குள்ள சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயத்தின் அஷ்டாங்க விமானத்தின் மதில் மீது ஏறி நின்றுதான், ஸ்வாமி ராமானுஜர் தமக்கு குருவான நம்பியிடமிருந்து ரஹஸ்யார்த்தங்களை உபதேசம் பெற்று, அதை பொதுவில் எல்லோர்க்கும் வெளிப்படுத்தினார். உலகுய்ய இந்த உபதேச ரஹஸ்யார்த்தங்களைச் சொன்ன இடத்தில் சுவாமி ராமானுஜரின் கல் திருமேனியும், சுதை மேனி ஒன்றும் அமைத்திருக்கிறார்கள். அந்தத் திருமேனியின் பின்னிருந்து நாம் பார்த்தால் ஒரு வீதி அழகாகத் தெரிகிறது. ஸ்வாமி ராமானுஜர் சொன்னதை பயபக்தியுடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள் எப்படி இருந்து கேட்டிருப்பார்கள் என்ற கற்பனையை நம் மனத்திரையில் போட்டுக் கொள்ளலாம். அந்தத் தெருவில்தான் நம்பிகளின் இல்லமும் இருந்திருக்கிறது. அதையும் நாம் அஷ்டாங்க விமானத்தின் மேலிருந்து தரிசிக்கலாம்.

அஷ்டாங்க விமானம் என்பது மிகவும் சிறப்பான ஒன்று. மதுரை கூடல் அழகர் சன்னிதியிலும், திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் சன்னிதியிலும், உத்திரமேரூர் பெருமாள் சன்னிதியிலும் இந்த அஷ்டாங்க விமான சேவையை அடியேன் தரிசித்திருக்கிறேன்.

இந்த விமானத்தில், ஆடல்வல்லான் நடராஜப் பெருமான், உபதேச மூர்த்தியாக நின்ற தட்சிணாமூர்த்திப் பெருமான், சக்கரத்தாழ்வார், நரசிம்ம ஸ்வாமி என்று பலவிதமான சுதை உருவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. வண்ணமயமான இந்த அஷ்டாங்க விமான சேவை என்பது, நம் பாவங்களைப் போக்க வல்லது. அந்த சேவையை அன்பர்களுக்காக அடியேன் இங்கே தந்திருக்கிறேன்.

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix