சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், செப்டம்பர் 26, 2007

S.G.Kittappa's contributed Library









This Library situated in Sengottai, which is contributed by S.G.Kittappa,
செங்கோட்டை மண்ணின் நண்பர்களே...
நம் ஊரின் மெயின்ரோடில் உள்ள ஸ்ரீமூலம் வாசகசாலை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வாசகசாலையானது நம் ஊருக்குப் பெருமை சேர்த்த பழம்பெரும் நாடக நடிகர், பாடகர் அமரர் எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களின் நன்கொடையாக கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டு நம் சமுதாயத்துக்காக அளிக்கப்பட்டது. அதில் பழம்பெருமையும் கிடைத்தற்கு அரியதுமான புத்தகங்கள் பல இடம்பெற்றிருந்ததை நண்பர்கள் அறிவீர்கள். சிறுவயதுமுதல் அந்தப் புத்தகங்கள் நம் பொதுஅறிவை வளர்த்து ஆளாக்க உதவியதை நீங்கள் மறக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்த வாசகசாலையானது 1919 முதல் முன்னாள் திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா பெயரில் 'ஸ்ரீமூலம் வாசகசாலையாக இயங்கி வந்தது.
அந்த வாசகசாலையானது இன்னும் பரவலாக பொது பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று எண்ணி சமுதாயத்தின் சார்பில் செங்கோட்டை நகராட்சிக்கு, வாடகையின்றி நூலகம் நடத்துவதற்கு, அவர்களின் பொறுப்பில் 1985 முதல் கொடுக்கப்பட்டிருந்தது. நூலகம் நன்றாக இயங்கிவந்த போதிலும் அதில் பாதுகாக்கப்பட்டிருந்த அரிய நூல்கள் பலவும் தற்போது காணாமல் போயுள்ளன.
1906 இல் பிறந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நூற்றாண்டை ஓரளவு ஈடுபாட்டுடன் ஊரில் கொண்டாடினோம். ஊர்ப் பெரியவர்கள் சிலர் அரசின் மூலம் ஏதாவது செய்ய எண்ணி செயலில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக நான் மஞ்சரி மாத இதழில் ஆசிரியராக இருந்தபோது கிட்டப்பாவைப் பற்றிய நீண்ட கட்டுரையை வெளியிட்டு, அவருடைய நூற்றாண்டு விழா வருடமான 2006இல் அவர் நினனவாக நினைவு மண்டபமோ நினைவில்லமோ அரசின் சார்பில் கட்டித் தரப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து தமிழக அரசின் கவனத்தைக் கவர முயன்றேன். அரசின் சார்பில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், சில இடையூறுகளால் அது பெரிய அளவில் இயலாமல் போனது.
தற்போது நகராட்சியால் வாசகசாலையை சரிவரப் பராமரிக்க இயலாத நிலையில் நகராட்சி மீண்டும் நம் சமுதாயத்தின் கட்டுப்பாட்டுக்குள் இந்த வாசக சாலையை ஒப்படைத்துள்ளது. நம் சமுதாயத்தின் சார்பில் அமரர் எஸ்.ஜி.கிட்டப்பா நூற்றாண்டு நினைவாக வாசகசாலையை நல்லமுறையில் நடத்த எண்ணம் கொண்டு ஊரில் உள்ள பெரியவர்கள் அரிய முயற்சியை எடுத்து வருகிறார்கள்.
இதன் பொறுப்பாளராக, மேட்டுத்தெரு வி.வெங்கடேஸ்வரன் செயல்பட்டு வருகிறார்.
நண்பர்கள், செய்யவேண்டியது என்னவென்றால், நம் அடுத்த மாணவத் தலைமுறை பயன்படும் வகையில் நல்ல நூல்களை, அறிவுப் பொக்கிஷங்களை அந்த நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டியது... நல்ல பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி, நம் சார்பில் நூலகத்துக்கு வரவைக்க வேண்டியது, இன்னும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது... இவ்வளவே!
நம் பகுதியில் உள்ள இரு பெரும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் பயன்பெறும் வகையிலும், அனைத்து இளைஞர்களும் உலகை தைரியமாக எதிர்கொள்ளும் வகையிலும் இந்த நூல்நிலையத்தை நாம் உயர்த்தவேண்டும்.
கல்வி தானம் மிகச் சிறந்தது, அதன் ஒரு பகுதி, நல்ல நூல்களை மாணவர்களும் இளைஞர்களும் படிக்க உதவி, அவர்கள் பட்டறிவும் படிப்பறிவும் பெறச் செய்வது...
தொடர்புக்கு... வி.வெங்கடேஸ்வரன், (மேலாளர்), மேட்டுத் தெரு, செங்கோட்டை, பின்: 627 809.
உங்களது அன்பான பதில்களையும் நடவடிக்கைகளையும் எதிர்பார்த்து,
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்.

Chennai Thiruvatiswaranpet Panduranga Mandir


























Pictures of Sri Panduranga Mandir situated near Thiruvattiswaran Koil ie., nearer to Thiruvallikeni (Triplicane) - Chennai 5, (TamilNadu) and the beautiful compact temple, saints shila and panduranga srirahumayi mandir...




செவ்வாய், செப்டம்பர் 25, 2007

ThirumalaiKoil-திருமலைக்கோயில் முருகன் படங்களுடன்...













































திக்கற்றவர்க்கு அருளும் திருமலைக்குமாரசுவாமி


குற்றாலம் சென்று குளிக்கச் சென்றிருக்கிறீர்களா? இப்படிக் கேட்டால் உடனே பதில் வந்துவிடும்... எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள், பக்கத்தில் இருந்துகொண்டு குற்றாலம் போகாமல் இருப்போமா? என்று! அடுத்தது, குளிப்பதற்காகவும் சாரலை அனுபவிப்பதற்காகவும் மட்டுமே அங்குச் சென்றிருப்பீர்கள்... சரி, அங்குள்ள புனிதமான திருத்தலங்களைச் சென்று தரிசித்து வந்திருக்கிறீர்களா? என்று கேட்டால், பலரும் இசைவான பதிலைத் தரமாட்டார்கள். ஆனால், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும், நடராஜப் பெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திரசபையும், குற்றால நாதர் கோயிலும் தவிர இன்னும் பல திவ்வியத் தலங்கள் சுற்றிலும் உள்ளன. அவைகளில் முக்கியமானதாகவும், இயற்கை அழகு கொஞ்சும் மனசுக்கு நிம்மதியளிக்கும் தலமாகவும், வரம் தரும் முருகப் பெருமானின் திவ்வியத் தலமாகவும் திகழ்வது திருமலைக் கோயில் என்னும் திருத்தலம். இது குற்றாலம் - செங்கோட்டை- பண்பொழி மார்க்கத்தில் குற்றாலத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பொதிகை மலையின் ரம்மியமான அழகையும் மலையேறிச் செல்லும் நிம்மதியையும் விரும்புவோருக்கு அருமையான இடம் இந்தத் தலம். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் சுகமான இடம் இந்தத் திருமலைக்கோயில். இங்குள்ள முருகப் பெருமான், பால முருகனாக கையில் வேலோடும், மயிலோடும் காட்சி தருகிறான். மிகப் பிரமாண்டமான கோயில். படிகளில் ஏறிச் செல்லுகையில், அங்கங்கே ஓய்வெடுக்க அழகான மண்டபங்களைக் கட்டி வைத்துள்ளார்கள் பக்தர்கள் பலர். சுமார் 500 அடி உயரம் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.

செல்வதற்கு அழகான மிதமான படிகள், ஓய்வெடுக்க மண்டபங்கள் என வயதானவரும் கூட வந்து தரிசிக்கும் வண்ணம் திகழும் இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் பேரழகின் பிம்பமாய் காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்கள், வலது முன் கை அபய ஹஸ்தமாக உற்ற துணை நானே என்று அருகில் அழைத்து அருள் மழை பொழியும் சங்கதியைச் சொல்லுகிறது. வலது பக்க பின் கை வஜ்ராயுதம் தாங்கி அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன இந்தத் திருவுருவம் இங்கு வந்த கதை சுவாரஸ்யமான ஒன்று.

முருகன் தலத்தின் சிறப்பு

ஒவ்வொரு நாட்டுக்கும் தனிச்சிறப்பு உண்டு. அப்படி நம் பாரத நாட்டுக்கும் பல தனிச்சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று, ஆங்கிலேயர் உருவாக்கி வைத்தது. நம் நாடு ஒரு தனி கண்டத்துக்கு உரிய பண்புகளோடு திகழ்வதால், இதை இந்தியத் துணைக்கண்டம் என்று ஆங்கிலேயர் அழைத்தனர். ஆனால் நாம் பாரத நாடு என்று ஒற்றுமை உணர்வோடு போற்றி மகிழ்கிறோம். நம் தமிழ்நாட்டுக்கும் பல தனித்துவச் சிறப்புகள் உண்டு. அதில் குறிப்பாக பாண்டிய நாட்டின் அங்கமாக இருந்த நெல்லைச் சீமைக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு...

அது - ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியில் உற்பத்தியாகி, பல ஆயிரம் ச.மைல் பரப்புள்ள நிலத்தைப் பசுமையாக்கி, அதே மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் உள்ள கடல்பகுதியில் கடலில் சங்கமிக்கிறது என்ற சிறப்பு பெற்ற தாமிரவருணி நதி ஒரு சிறப்பு. மற்றொரு சிறப்பு, பழங்கால இலக்கியங்கள் காட்டும் ஐவகை நிலப்பரப்பும் கொண்ட ஒரே பகுதி என்ற சிறப்பு கொண்டது நெல்லைச் சீமை என்பதே அது.

மலையும் மலை சார்ந்த இடமும் - குறிஞ்சி, நிலமும் நிலம் சார்ந்த இடமும் - முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமும் - மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல், வறண்ட பகுதி - பாலை என்று ஐவகை நிலப்பகுதியைப் பிரித்து வைத்தது முன்னோர் சாதனை. இந்த ஐவகை நிலப்பரப்பும் நெல்லைச் சீமையிலேயே உள்ளது.

சிலப்பதிகாரம் சொல்லும்... குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து, நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்து, பாலை என்பதோர் படிவம் கொள்ளும்... என்று! பாலை என்ற ஐந்தாவது நிலப் பகுதி, தனியாக இல்லாதுபோயினும், குறிஞ்சியும் முல்லையும் தட்பவெப்ப நிலை மாறின், பாலையாக மாறுகிறது என்பது இதன் கருத்து. ஆனால், நெல்லைச் சீமையில் இந்தப் பாலை நிலமும் உண்டு. வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளைச் சேர்ந்த நிலப்பகுதி அதைச் சொல்லும். ஆக, இந்த ஐவகை நிலப்பாகுபாடும் நெல்லைச்சீமையில் உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க இந்தப் பகுதியில், முருக வழிபாடும் திருமால் வழிபாடும் செழித்தோங்கியுள்ளது. மாலவன் பேர் சொல்லும் நவ திருப்பதிகள் இந்தத் தாமிரபரணிக் கரையோரம் சிறப்புற விளங்குகிறது. அதுபோல் பொதிகை மலையை ஒட்டிய திருமலைக்கோயில் முருகப் பெருமானும், கடற்கரையை ஒட்டிய பகுதியான திருச்சீரலைவாய் என்று போற்றப்பெறும் திருச்செந்தூர் முருகப் பெருமானும் நெல்லைச் சீமைக்கு அணிசேர்த்து அருள் செய்கின்றனர்.

குறிஞ்சி நிலத்தெய்வமான முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்று பொருள். இயற்கை நலமுடையவன், எழில் உடையவன், மணம் உடையவன், அறிவு உடையவன், நிறைந்த செல்வத்தை அளிப்பவன் என்று வெறு பல பொருள்களும் உண்டு. முருகப் பெருமான் கையில் வேலை வைத்திருக்கும் காரணத்தால் அவனை வேலன் என்றும் அழைத்தனர். சங்ககால இலக்கியங்கள் பலவும் வேலன் என்ற பெயரை அழகுற வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, திருமுருகாற்றுப்படை இலக்கியம் குறிஞ்சி வேலவனுக்கு நோன்பு நூற்று மக்கள் வழிபட்ட அழகை விவரிக்கிறது. சிலப்பதிகாரம், முருகனது பெருமைகளையும், அவன் அமர்ந்த குன்றுகளின் சிறப்புகளையும் கூறுகிறது. குன்றுதோராடும் குமரன், குற்றாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் திருமலையிலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறான்.

பிரணவ மலை - திருமலை

தமிழகத்தின் மேற்கு அரணாக விளங்கக் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொடர்ச்சியாக நிலப்பகுதியோடு இணைந்து திருமலை விளங்குகிறது. இது கவிர மலைப் பகுதி என்று வழங்கப் படுகிறது. கரவி மலை என்பது கவிர மலை ஆகியது என்பர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரன் பரிபாலித்த பகுதி இந்தப் பகுதியில்தான் உள்ளது. அதுவே கவிரமலைப் பகுதி. அவனது தலைநகராக இருந்தது ஆய்க்குடி என்று அழைக்கப் பெறும் ஊர். அது இன்றும் ஒரு முருகன் கோயிலோடு திகழ்கிறது. ஆய்க்குடியும் கவிரமலையும் பொதிகை மலையோடு சார்ந்த திருக்குற்றால மலையை ஒட்டி அமைந்துள்ளன. இப்படி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து, மூன்று மலைகள் சேர்ந்து காட்சியளிப்பதால் இதனை திரிகூடமலை என்றும் அழைப்பர். இதனைப் பிரணவ மலை என்றும் கூறுவர். காரணம் ஓம் என்ற வடிவில் இந்த மலைப் பகுதி அமைந்துள்ளதுதான்... இந்த மலைத்தொடரின் உயர்ந்த இடத்தில் பழங்காலத்தில் சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்று இருந்ததாகவும், நாகம் தனக்கு அளித்த விலையுயர்ந்த ஆடையை ஆய் மன்னன் இந்த லிங்கத்துக்கு அளித்தான் என்றும் சங்க இலக்கியச் செய்தி ஒன்று உண்டு.

கோட்டைத்திரடு கோயில்

செங்கோட்டையில் இருந்து அச்சன்கோயில் செல்லும் வழியில் பண்பொழியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கோட்டைத் திரடு என்ற சிற்றூர் உள்ளது. பழங்காலத்தில் இங்கு ஒரு கோட்டை இருந்துள்ளது. அதற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. இந்தப் பகுதி சிலகாலம் பாண்டிய அரசர்களின் ஆளுகையிலும் இருந்துள்ளது. பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழும் இருந்துள்ளது. இதற்கான சான்றுகளாக இந்தக் கோட்டைப் பகுதியில் கிடந்த தூண்கள், மண்டப கற்களில் மீன் சின்னமும், வராஹம் மற்றும் லிங்க சின்னமும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சேரநாட்டைச் சேர்ந்த பந்தள அரசர்கள் இங்கு கோட்டையமைத்து கோட்டையில் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்களாம். பகைவர்களாலும் ஆற்று வெள்ளத்தாலும் கோட்டையும் கோயிலும் பெரும் அழிவைச் சந்திக்க, பந்தள அரசமரபினர் இந்தக் கோட்டையை அப்படியே கைவிட்டு அவர்கள் பிரதேசத்துக்குச் சென்றுவிட்டார்களாம். அதன்பிறகு கவனிப்பாரற்றுப் போனது கோட்டையில் இருந்த கோயில். ஆனால் முருகப் பெருமான் தன் பக்தர் ஒருவர் மூலம் தன்னை வெளிப்படுத்தி, மலைமீது கொண்டான்.

ஆதி உத்தண்ட நிலையம்

திருமலையில் முதலில் வேல் வழிபாடுதான் இருந்துள்ளது. இப்போதும் இந்த வழிபாட்டு இடத்தை நாம் காணலாம். திருக்கோயிலுக்கு முன்னால் மேற்குத் திசையில் ஆதி உத்தண்ட நிலையம் உள்ளது. வேலும் மயிலுமாகக் காட்சி தரும் இதுவே, பழங்காலம் தொட்டு முருகப் பெருமான் வழிபடு தலமாகக் காட்சியளித்துள்ளது. புளியமரத்தடியில் காட்சி தரும் இதனை அந்தக்காலத்தில் பலர் வழிபட்டு வந்துள்ளனர். அவர்களில் பூவன் பட்டர் என்பாரும் ஒருவர். இவர் திருமலையில் எழுந்தருளியிருந்த ஆதி உத்தண்ட நிலைய மயிலையும் வேலையும் முருகனையும் வழிபட்டு, பூசனைகள் புரிந்த பிறகு புளியமரத்தடியில் சற்றே ஒய்வெடுத்து, பிறகு மலையிலிருந்து கீழிறங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒருநாள் அவர் மதிய நேரத்தில் ஓய்வெடுக்க சிறிது கண்ணயர்ந்த போது, முருகன் அவர் கனவில் தோன்றி 'தாம் கோட்டைத் திரடு கோட்டையில் புதர்கள் மண்டிய பகுதியில் மறைந்து கிடப்பதாகவும், தாம் இருக்கும் இடத்தை கட்டெறும்புகள் கூடி வழிகாட்டும்' என்றும் கூறி மறைந்தான். அதே நேரத்தில், பந்தள அரசர் கனவிலும் முருகன் தன் இருப்பிடம் குறித்த செய்தியைக் கூறி மறைந்தான். உடனே அவர்களும் விரைந்து வர, கோட்டைத் திரடு பகுதியில் பூவன் பட்டர் அவர்களை எதிர்கொண்டழைத்து, முருகன் கனவில் சொன்ன செய்தியைக் கூற, அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். பிறகு கட்டெறும்புகள் வழிகாட்ட, அங்கே ஒரு புதருக்குள் மறைந்து கிடந்த முருகப் பெருமானை வெளிக்கொணர்ந்தார்கள். அப்படி மண்ணை வெட்டி விக்கிரகத்தை வெளியே எடுக்கும்போது, மண்வெட்டி முருகப் பெருமான் மூக்கில் சிறிது சேதம் விளைவித்துவிட்டது. இதனை இன்றும் திருமலையில் காணலாம். அதனால் இந்தப் பெருமானை நாட்டுப்புற வழக்கில் மூக்கன் என்றும் அழைக்கின்றார்கள்.

அதன்பிறகு திருமலையில் மலைமீது ஆதி உத்தண்ட நிலையத்துக்கு அருகில் அருமையான ஒரு கோயிலை எழுப்பினார்கள் பந்தள அரசர்கள். அந்தக் கோயில் கேரள பாணியில் அமைந்திருந்தது. பிற்காலங்களில் பலர் பலவிதமான திருப்பணிகளைச் செய்து தற்போதைய பிரமாண்டமான கோட்டை போன்ற இந்தக் கோயிலை நாம் தரிசித்து வருகிறோம்.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த குறுமுனி அகத்தியர் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்ட செய்திகள் உண்டு. பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்தியர் திருமலைக்கு வந்து முருகனை வணங்கி வந்தார். முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அமைத்தார். அதில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் பெயர்களில் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். அவற்றில் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும். எப்போதாவது இக்குழிகளில் நீர் குறைந்தால், உடனே மழை பொழிந்து இந்தக் குழிகளை நிரப்பி விடும் என்பது இந்தத் தலத்து வரலாறு.
இந்தச் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்று பெயர் ஏற்பட்டது. இதில் நீராடி, முருகனை வழிபட்டு வந்தால், நோய்நொடி நீங்கி நீண்ட நாட்கள் வாழலாம் என்பது நம்பிக்கை. இந்தச் சுனையில் நாள்தோறும் குவளைப் பூ ஒன்று பூக்குமாம். அதை சப்தகன்னியர் எடுத்து ஆதி உத்தண்ட நிலைய முருகப் பெருமானை வழிபட்டு வந்தார்களாம். இந்த முருகன் சன்னிதியில் ஏழுகன்னிமார்களுக்கும் சன்னதியிருப்பது ஆச்சர்யமான ஒன்று.
முருகபக்தர்களாகத் திகழ்ந்த பல கவிகளும் பெரியவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து முருகனைப் பாடி அருள் பெற்றுள்ளார்கள்.

சன்னிதிகள்:

திருமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் சன்னிதி மிகப் பெரிதாக உள்ளது. இந்த விநாயகப் பெருமானை தரிசித்தபின், மலைக்கு ஏறும் படிகள் தொடங்கும் இடத்தில் இரு பாதங்களைத் தொட்டு வணங்கி முருகன் புகழ் பாடி மக்கள் படிகளில் ஏறிச் செல்வர். பரிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் அடுத்து நடுவட்ட விநாயகர் சன்னிதியை அடையலாம். அவரைத் தரிசித்த பிறகு படிகளில் மேலும் ஏறி, இடும்பன் சன்னிதி அடைந்து அவரை வணங்கி பிறகு தொடர்ந்து ஏறவேண்டும். அங்கே இடும்பன் சுனை இருக்கிறது. பிறகு தொடர்ந்து ஏறினால், நந்தகோபர் மண்டபம் வருகிறது. இவற்றைவணங்கி, சுமார் 544 படிகள் கடந்து மேலே உச்சி விநாயகர் சன்னிதியை அடைவோம். அங்கு சன்னிதி 16 படிகளில் ஏறிச் செல்லும் அழகான மண்டபமாக இருக்கிறது. இது, இந்த விநாயகப் பெருமானை வணங்கினால், மக்களுக்கு 16 பேறுகளும் கிட்டும் என்கின்ற தத்துவத்தைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த விநாயகரை வணங்கி, வலம் வந்து ஆதி உத்தண்ட வேலாயுதத்தையும், சப்த கன்னியரையும் வணங்கி, அருகே இருக்கும் தீர்த்தக் குளத்தை தரிசிக்கலாம். அத்தோடு சுற்றிலும் சூழ்ந்திருக்கும் மலைகளின் இயற்கை அழகை ரசிக்கலாம். மேகங்கள் நம் கைகளைத் தொட்டுச் செல்வதுபோல் நம்மை உரசிச் செல்லும் அனுபவத்தைப் பெறலாம்.
பிறகு திருமலைக்காளி சன்னிதி சென்று காளிதேவியை வணங்கி திருமலைக் குமாரனின் சன்னிதிக்குள் சென்றால் அங்கே அழகிய பாண்டி நாட்டு கட்டடக் கலையில் அமைந்த அழகான தூண்கள் அமைந்த மண்டபத்தையும் முருகன் சன்னிதியையும் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தியும் அறுமுகப் பெருமானும் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்கள்.
இந்தத் தலத்தில் எல்லாத் தலத்துக்கும் உரிய சன்னிதிகள் இருந்தாலும், மிகவும் சிறப்பாகத் திகழ்வது, கபால பைரவர் சன்னிதி. இந்த சன்னிதியில் ஐந்தரை அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக பைரவர் அழகாகக் காட்சி தருகிறார். இந்த பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றி வழிபட்டுவந்தால், நோய் நொடி, பில்லி சூனியம் போன்ற எதிர்மறை விஷயங்கள் நம்மை விட்டு விலகும். தொழில் அபிவிருத்தி அடைந்து இல்லத்தில் மகிழ்ச்சியும் இல்வாழ்க்கை சிறப்பாக அமைவதையும் பக்தர்கள் பலரின் வாழ்வில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.

விழாக்கள்:

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயிலின் திருவிழாக்கள் திருமலையின் மேல்தளத்திலும் வண்டாடும் பொட்டலிலும் பண்பொழியிலும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தில் கடைசித் திங்கள் பண்பொழியில் நரீசுவரமுடிஅயார் கோயிலுக்கு எதிர்ப்புறமுள்ல சிங்காரத் தெப்பக் குளத்தில் திருமலைக் குமாரசாமிக்கு தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். தைப்பூச உத்ஸவம் இந்தக் கோயிலின் சிறப்பான உத்ஸ்வமாகும். ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா பத்து தினங்கள் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாத ஐந்து தினங்கள், தமிழ் மாதப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு உத்ஸவங்கள் என்று எப்போதும் இங்கு திருவிழாக்கள் களைகட்டும்.

மலைமீது அமைந்திருக்கும் இந்த முருகப் பெருமானை வயதானவர்களும் உடலால் நடந்து சென்று தரிசிக்க இயலாதவர்களும் தரிசிக்க, மலைப்பாதை அமைக்க வேண்டும் என்று கோருகிறார்கள் பக்தர்கள். நேரடியாக மலைக்கே சென்று வண்டிகளில் இருந்து இறங்கும் படி சுற்றுப் பாதை அமைத்தால் நல்லது என்கிறார்கள். முருகப் பெருமான் அருளால் நல்லோர் நெஞ்சில் புகுந்து இது விரைவில் நிறைவேறும். குற்றாலத்துக்கு சுற்றுலா வருகிறவர்கள் அப்படியே இந்தத் திருமலைக்கும் வந்து திருமலைக்குமாரசாமியின் தரிசனம் பெற்று சகல நலங்களும் பெறலாம்.

- கட்டுரை மற்றும் படங்கள் : செங்கோட்டை ஸ்ரீராம் Senkottai Sriram
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix